அன்று புதன்கிழமை (2015.02.11) சரியாக காலை 10.00 மணி இருக்கும். ஆதவனின் வருகையுடன் தெதுறு ஓயா நீர்த்தேக்கம் அதன் அழகை மேலும் மெருகூட்டிய வண்ணமிருந்தது.
செவ்வண்ண நிறக்கதிர்கள் நீரின் மேல் படர விட்ட நிலையில், அருவியின் சலசலவென்ற ஓசை புத்தம்புது பொழுதை பரவசமூட்டியது.
அந்த நேரத்தில் தான் வழமையாக அப்பகுதிக்கு வேலைக்கு வரும் சிறிசேனவும் (பெயர்மாற்றப்பட்டுள்ளது.) அங்கு வருகின்றான்.
வந்தவருக்கு வழமைக்கு மாறாக காலை வேளையிலேயே “ஆபத்து;” என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நீர்த்தேக்கத்தின் நடுப்பகுதியின் ஊடாக காதலர்கள் இருவர் பயணிப்பதை காணக்கூடியதாகவிருந்தது.
சாதாரணமாக அப்பகுதிக்கு யாரும் செல்லமாட்டார்கள். அதற்கு காரணம், நீர்த்தேக்கத்தில் சுமார் 100 மீற்றர் நீளத்தை கொண்ட அணைக்கட்டு அமைக்கப்பட்டிருக்கும் பகுதி 30 முதல் 40 வரையிலான அடி வரை ஆழம் கூடிய பகுதியாகும்.
இருப்பினும் அன்று “ஏன்? இவர்கள் மட்டும் அங்கு செல்கின்றார்கள்? “என்ற கேள்வியை தன்னுள் கேட்டவாறு அவர்களை கூப்பிட்டு கேட்கவும் மனமின்றி தனது வேலைகளைப் பார்க்கச் சென்று விட்டார் சிறிசேன.
அதன்பின் மீண்டும் சிறிது நேரத்தில் அவ்விடத்துக்கு வருகின்றான். எனினும் காலையில் அணைக்கட்டு பகுதியில் நின்று கொண்டிருந்த அந்த காதலர்கள் இருவரும் அந்த இடத்திலிருக்கவில்லை.
அதே வேளை அவர்களுக்கு என்ன நடந்தது என்றும் தெரியாது. இரு பைகள் மாத்திரமே காணப்பட்டமையால் சிறிசேனவுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.
எனவே தான் நீர்த்தேக்கத்தை அண்டிய பிரதேசத்தில் வசிப்பவர்களிடமும் சென்று “இரு பிள்ளைகள் இந்த வழியாய் செல்வதை கண்டீர்களா?” என்று வினவினார்.
எனினும், அவர்களிடம் இருந்து “இல்லை, காணவில்லை” என்ற பதில் மாத்திரமே கிடைக்கப்பெற்றது. எனவே பிரதேசவாசிகளிடம் இவ்விடயத்தை தெளிவாகக் கூறி அவர்களுடன் இணைந்து காதலர்கள் இருவரையும் தேட ஆரம்பித்தார்.
அப்போது பிரதேசவாசிகளில் ஒருவர் புத்தகப் பைகளை சோதனையிட்டபோது அதில் பாடசாலை சீருடை, பாடசாலை புத்தகங்கள்.
இருப்பதைக் கண்டு மாணவர்கள் இருவர் தான் இவ்வாறு பாடசாலைக்கு செல்லாமல் இங்கு வந்திருக்க வேண்டும் என்று கூறியதுடன், இனியும் தாமதிக்காமல் பொலிஸாருக்கு தகவல் சொல்ல வேண்டும் என்று கூறினார். அதன்படி இந்த தகவலை வாரியபொல பொலிஸாருக்கு அறிவித்தார்கள்.
தகவல் அறிந்தவுடனே துரிதமாக செயற்பட்ட பொலிஸார் வாரியபொல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் உத்தரவின் பேரில் உயர் பொலிஸ் அதிகாரிகளை கொண்ட விசேட குழு தெதுறு ஓயா நீர்த்தேக்க பகுதியை வந்தடைந்தது.
அதன்பின் இக்குழு பிரதேசவாசிகளுடன் இணைந்து தேடுதலை மேற்கொண்ட போதும் எவ்வித தடயமும் கிடைக்கவில்லை.
அதன் பின்னரே நீர்த்தேக்கத்தின் ஆழமான பகுதியில் தேடுதலை மேற்கொள்ளும் முகமாக கல்பிட்டி கடற்படை சுழியோடிகள் வரவழைக்கப்பட்டு, இவ்விருவர் தொடர்பாகவும் விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டன.
அதன்படி 11 ஆம் திகதி காலை வேளையிலேயே கல்பிட்டி கடற்படை சுழியோடிகளால் குறித்த மாணவனின் சடலம் நீர்த்தேக்கத்தின் நடுப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த அணைக்கட்டு முடியும் இடத்திலிருந்து மிகவும் பரிதாபகரமான நிலையில் மீட்கப்பட்டது.
எனினும், மாணவியின் சடலம் அன்றைய தினம் கண்டெடுக்கப்படவில்லை. நீர்த்தேக்கத்தில் குதித்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்ட இடத்திலிருந்து இரு நாட்கள் கழத்தே சுமார் 400 மீற்றர் தொலைவில் சடலம் கரையொதுங்கியிருந்தது.
பின் பிரேத பரிசோதனைக்காக குருநாகல் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு பரிசோதனைகள் நிறைவடைந்த பின்னர் சடலங்கள் அவர்களின் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
இவர்கள் தொடர்பாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின்படி இருவரினதும் காதலின் ஆயுள் 5 மாதங்கள் மாத்திரமே.
குபுக்கெட்டிய பிரதேசத்தில் தந்தை, தாய், சகோதரி என்ற சிறிய குடும்பத்தில் தாயின் செல்லப் பிள்ளையாக தரிது இருந்தான்.
சுமார் 5 மாதங்களுக்கு முன் தான் பிங்கிரிய பிரதேசத்தை வசிக்கும் சுஹதாவை சந்திக்கும் வாய்ப்பு தரிதுவுக்கு கிடைத்தது. அவளின் அழகு, கலகலப்பான பேச்சு, திறமை என்பவற்றால் அவன் மிகவும் கவரப்பட்டான்.
சுஹதாவின் தாய் 5 மாதங்களுக்கு முன் வெளிநாட்டு தொழிலுக்காக சென்றிருந்தமையால் குபுக்கெட்டிய பிரதேசத்தில் வசிக்கும் தன் தாயின் மூத்த சகோதரியின் வீட்டுக்கு வந்த போதே தரிதுவை சந்தித்தாள்.
அதன் பின் ஏற்பட்ட பல சந்திப்புக்களின் விளைவால் இருவருக்குள்ளும் பருவக் காதல் பற்றிக்கொண்டது. சுஹதா அங்கிருந்து தனது சொந்த ஊருக்குச் சென்ற போதும் தொலைபேசி உரையாடல்கள் மூலம் இருவருக்கும் இடையிலான காதல் உறவு பலமானது.
எனினும் இவர்களின் காதல் தொடர்புக்கு இருவரின் பெற்றோரும் தமது கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இருப்பினும் இருவரும் தமது பருவ வயதில் ஏற்பட்ட காதலுக்கு முக்கியத்துவம் கொடுத்து தமது முடிவில் உறுதியாகவிருந்தார்கள்.
அடிக்கடி தனது பெற்றோரிடம் தங்களை பிரிக்காது, சேர்த்து வைக்குமாறு முரண்பட்டிருக்கின்றார்கள். எனினும் பெற்றோர் அவர்களுடைய காதலுக்கு பச்சைக் கொடி காட்டவில்லை எனவே தான் ஒருவர் இன்றி இன்னொருவரால் வாழ முடியாது என்ற நிலையிலேயே இருவரும் தற்கொலைக்கு முயற்சி செய்திருக்கின்றார்கள்.
தரிது இதற்கு முன்னரும் கிருமி நாசினியை அருந்தி தனது உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சித்திருக்கின்றான். எனினும் அவன் முயற்சி தோல்வியிலேயே முடிவடைந்துள்ளது.
அதன்பின் தான் நீர்த்தேக்கத்தில் குதித்து தற்கொலை செய்து கொள்வதற்கு முடிவெடுத்து இருவரும் வந்திருக்கின்றார்கள். சுஹதா தனது பெற்றோரிடம் பிங்கிரிய நகருக்கு செல்வதாக கூறி விட்டே தெதுறு ஓயா பகுதிக்கு வந்திருக்கின்றாள்.
பருவக் காதலில் ஏற்பட்ட ஈர்ப்பிலும் பாசப் பிணைப்பிலும் ஒரு அழகான வாழ்க்கையை இருவரும் இழந்துவிட்டார்கள். அதை விட அவர்களின் இழப்பினால் கண்ணீர் விடும் உறவுகளின் நிலை இன்னும் பரிதாபம். இனிமேல் இவர்கள் இருவருமே இல்லாத வீடு அவர்களின் குடும்பத்தினருக்கு நரக வாழ்க்கையாகவே மாறப்போகின்றது.
இச்சம்பவம் தொடர்பாக சுஹதாவின் தாய் கண்ணீருடன் கருத்து தெரிவிக்கையில் “தயவு செய்து உங்கள் குழந்தைகளுக்கு கையடக்கத் தொலைபேசியை மட்டும் வாங்கிக் கொடுக்காதீர்கள்.
கையடக்க தொலைபேசி தான் பிள்ளைகளின் வாழ்க்கையை இன்று சீரழிக்கின்றது. அந்த அளவுக்கு எனது மகள் தினமும் அவனுடன் தொலைபேசியில் உரையாடுவாள்.
இறுதியில் என்ன நடந்தது? எனது மகள் கெட்டிக்காரி. ஆனால், ஏன் இப்படி ஒரு முடிவினை எடுத்தாள்” என்று கூறியவாறே கதறியழுதாள் அந்த பாவப்பட்ட தாய்.
இனி என்ன தான் அழுதாலும் பெற்றவளுக்கு அவள் மகள் வரப் போவதில்லை என்பதே யதர்த்தம். ஆகவே பெற்றோர்கள் பருவ வயதுப் பிள்ளைகளுடன் அணுகும் முறையில் மாற்றங்கள் ஏற்படுமாயின் இவ்வாறான இழப்புகளைத் தவிர்க்கலாம்.
அது மட்டுமின்றி ஒருவர் இன்னொ ருவரை கொலை செய்வது எவ்வாறு குற்றமாக கருதப்படுகின்றதோ அது போலவே தமது உயிரை எக்காரணம் கொண்டும் மாய்த்துக் கொள்ளும் உரிமை எவருக்கும் இல்லை என்பதை இன்றைய இளம் சமுதாயத்தினர் உணர்ந்து கொள்ள வேண்டும்.