முன்னாள் அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணி தலைவருமான  விமல் வீரவன்சவும் அவரது மனைவி சசி வீரவன்சவும் தமது பிறந்த தினங்களையும்  பெயரையும் மாற்றியிருப்பதாக குற்றப்புலனாய்வுப் பிரிவு நேற்று கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்திற்கு அறிவித்தது.

தமது பிள்ளைகள் இருவரின் பிறப்புச் சான்றிதழ்களிலே இவ்வாறு போலியான தகவல்களை உட்படுத்தி குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு வழங்கியிருப்பதாகவும் சி.ஐ.டி. தெரிவித்துள்ளது.

கடவுச் சீட்டு மோசடி தொடர்பாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி நேற்று முன்தினம் இரவு சி.ஐ.டி.யினால் கைது செய்யப்பட்டார்.

இவர் தொடர்பான அறிக்கையொன்றை சி.ஐ.டி. நேற்று கொழும்பு பிரதம நீதிவான் இஹான் பிலபிடிய முன் னிலையில் சமர்ப்பித்தது.

சந்தேக நபர் மாலபே தனியார் மருத்துவமனையில் தடுத்து வைக்கப் பட்டுள்ளதாக குறிப்பிட்ட சி.ஐ.டி. அதிகாரி அவரை விளக்கமறியலில் வைக்குமாறும் கோரியது.

இதற்குப் பதிலளித்த நீதவான் சசி வீரவன்சவை விளக்கமறியலில் வைப்பதா இல்லையா என்பது பற்றி சட்ட மருத்துவ அறிக்கையின் பின்னர் தீர்மானிப்பதாக அறிவித்தார்.

2008/12/10 ஆம் திகதியே இருவரும் தமது பெயர் மற்றும் பிறந்த திகதி என்பவற்றை மாற்றியுள்ளனர்.

1965.03.07 ஆம் திகதி பிறந்த விமல் வீரவன்ச, அதனை 1970/03/07 ஆம் திகதி என மாற்றியுள்ளதோடு சசி வீரவ ங்ச தமது பிறந்த திகதியை 1967/02/01 ஆம் திகதிக்குப் பதிலாக 1971/02/03 என மாற்றியுள்ளதாக சி.ஐ.டி. அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.

கிரிஜா உதயந்தி என்ற பெயரையும் அவர் செஹாரா உதயந்தி என மாற்றியிருப்பது விசாரணை மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

போலி தகவல்களை குடிவரவு குடியகல்வு திணைக்களத்துக்கு வழங்கி மோசடியாக கடவுச் சீட்டு பெற்றமை இரு கடவுச்சீட்டுகள் பாவித்தமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் சசி வீரவன்சவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ளது.

இராஜதந்திர கடவுச்சீட்டு வழங்குமாறு அன்று வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சரான விமல் வீரவன்சவின் கையொப்பத்துடன் 2010/09/13 ஆம் திகதி குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் சூலானந்த பெரேராவுக்கு கடிதமொன்று வழங்கப்பட்டி ருப்பதாகவும் சி.ஐ.டி. நீதிமன்றத்துக்கு தெரிவித்தது.

இராஜதந்திர கடவுச்சீட்டு பெறுகையின் ஏற்கனவே இருந்த கடவுச்சீட்டு குறித்த தகவலை மறைத்துள்ளதாகவும் விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது.

ரனசிங்ஹ முதியன்சலாகே கிரிஜா உதயந்தி என்ற பெயரில் 67530233 , 715344696 ஆகிய இரு அடையாள அட்டைகள் இவருக்கு விநியோகிக்கப்பட்டிருப்பதாக ஆள் அடையாள திணைக்களம் அறிவித்துள்ளது.

2008 முதல் இன்று வரை தேசிய அடையாள அட்டை பெறுவதற்காக தான் சான்றிதழ் கடிதம் எதுவும் வழங்கவில்லை என கிராம சேவகர் சி.ஐ.டி.க்கு அறிவித்துள்ளதோடு  சந்தேக நபரின் பிறப்புச் சான்றிதழ் போலியானது என கொலன்னாவ மேலதிக மாவட்ட பதிவாளர் தெரிவித்துள்ளார்.

சசி வீரவன்ச 1967/02/01 ஆம் திகதியே பிறந்துள்ளதாக அவர் கல்வி கற்ற பாடசாலையின் முன்னாள் அதிபர், பாடசாலை ஆவணங்களின் அடிப்படையில் அறிவித்துள்ளார்.

பிள்ளைகளின் பிறப்புச் சான்றிதழ்களில் தாயினதும் தந்தையினதும் பிறந்த திகதிகளை மாற்றுவதற்கு விமல் வீரவன்சவின் உத்தரவிற்கமைய அவரது மனைவி மத்திய சுவடிகள் கூட உதவிப் பதிவாளரை சந்தித்துள்ளதாகவும் விசாரணை மூலம் புலனாகியுள்ளது.

சசி வீரவங்கவுக்கு எதிராக கடந்த ஜனவரி 23 ஆம் திகதி பத்தரமுல்லையைச் சேர்ந்த சமிந்த பெரேரா என்பவர் சி.ஐ.டி.யில் முறையிட்டிருந்தார்.

குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் மற்றும் அதிகாரமளிக்கப்பட்ட அதிகாரிகளுக்கு பொய்யான தகவல்களை வழங்கி மோசடியாக வெளிநாட்டுக் கடவுச் சீட்டு பெற்றுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

1284124 எனும் இலக்கமுடைய கடவுச் சீட்டில் அடையாள அட்டை இலக்கம் 6753202233 எனவும் 3642817 இலக்க கடவுச் சீட்டில் 715344696 எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சசி வீரவன்சவிடம் வாக்கு மூலம் பெறுவதற்கு சட்டமா அதிபர் அனுமதி வழங்கியிருந்ததோடு அவரிடம் வாக்கு மூலம் பெற இருப்பது குறித்து தொலைபேசி மூலம் அறிவிக்கப்பட்டிருந்தது.

கடந்த 21 ஆம் திகதி அவர் மாலபே தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டிருப்பதாக சட்டத் தரணியூடாக சி.ஐ.டி.க்கு அறிவிக்கப்பட்டது. சி.ஐ.டி. விசாரணைக்கு அழைக்கப்பட்டி ருப்பதாக அறிவித்திருந்த நிலையிலேயே அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக தங்கியுள்ளதாகவும் பொலிஸார் நீதிமன்றத்திற்கு தெரிவித்தனர்.

குடிவரவு குடியகல்வு சட்டத்தின் பிரகாரம் தண்டனைக்குரிய குற்றமொன்றை சந்தேக நபர் மேற்கொண்டிருப்பதாக தெரிவித்த சி.ஐ.டி. தனது இரு அடையாள அட்டைகளையும்  பயன்படுத்தி சந்தேக நபர் வங்கிக் கடன் பெற்றுள்ளாரா அல்லது வங்கிகளுடன்  கொடுக்கல்  வாங்கல் செய்துள்ளாரா என்பது குறித்து விசாரணை நடத்துவதாகவும் அறிவித்தது.

சந்தேக நபருக்கு பிணை வழங்குவதற்கும் சி.ஐ.டி. எதிர்ப்பு தெரிவித்தது. இதனையடுத்து இம்மாதம் 25வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததது.

Share.
Leave A Reply

Exit mobile version