திருகோணமலை கடற்படை முகாமில் இரகசிய முகாம் ஒன்றில் 700 பேர் தடுத்து வைக்கப்பட்டு, அந்த முகாமுக்கு “கோத்தா முகாம்” என்று பெயரிடப்பட்டிருந்ததாக பாராளுமன்றத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பரபரப்பு தகவல் ஒன்றை வெளியிட்டிருந்தது.
இங்கு 35க்கும் மேற்பட்ட குடும்பங்களும் தடுத்து வைக்கப்பட்டிந்ததாகவும், பாராளுமன்றத்தில் தகவல் வெளியிடப்பட்டிருந்தது. இந்தத் தகவல்களைத் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், கூட்டமைப்பின் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் அங்கு வெளியிட்டிருந்தார்.
இந்த விடயம் குறித்து உரிய விசாரணை நடத்தி உண்மை என்ன என்பதைக் கண்டறிந்து பாராளுமன்றத்திற்குத் தெரிவிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது பற்றிய மேலதிக விபரங்கள் என்ன என்பதை அவருடனான நேர்முகத்தின்போது அவர் விளக்கிக் கூறினார்.
சுரேஷ் பிரேமச்சந்திரன்: இருபதினாயிரத்துக்கும் மேற்பட்டோர் ஏற்கனவே காணாமல் போயிருப்பதாக காணாமல் போனோரைக் கண்டறியும் குழுவுக்கு முறைப்பாடு செய்திருக்கின்றார்கள்.
இந்த நாட்டில் யுத்தம் நடைபெற்ற காலத்தில் பல ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயிருக்கின்றார்கள். அது வடக்கு, கிழக்கில் மாத்திரமல்லாமல் தென்பகுதியிலிருந்தும்கூட பலபேர் காணாமல் போயிருக்கின்றார்கள்.
வெள்ளை வான்களில் கடத்தப்பட்டிருக்கின்றார்கள். யுத்த காலத்தில் சரணடைந்த பலர் இப்போது இல்லாமலிருக்கின்றார்கள்.
அகதிகளாகத் தஞ்சமடைந்திருந்த முகாம்களில் இருந்து தூக்கிச் செல்லப்பட்டு காணாமல் போயிருக்கின்றார்கள். இப்படி, பலவிதமான வகையில் ஆட்கள் காணாமல் போயிருக்கின்றார்கள்.
இதில் நம்பகத்தகுந்தவர்கள் சிலரிடம் இருந்து எனக்கு சில செய்திகள் கிடைத்தன. அந்த செய்திகளை நான் பாராளுமன்றத்தில் குறிப்பிட்டிருக்கின்றேன்.
அதில் முக்கியமாக திருகோணமலை கடற்படை முகாமில் ஏறத்தாழ 35க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வைக்கப்பட்டிருந்ததாகவும், அந்த குடும்பங்களுக்கிடையில் எதுவிதமான தொடர்புகளும் இருக்கவில்லை, அதேபோன்று அவர்களுக்கு வெளியுலகத்துடனும் எந்தவிதத் தொடர்புகளும் இல்லாதிருந்ததாகவும் எனக்கு சொல்லப்பட்டிருக்கின்றது.
அவ்வாறு வைக்கப்பட்டிருந்தவர்களில் சிலர் விடுதலை செய்யப்பட்டிருக்கலாம் அல்லது அவர்களில் சிலர் விடுதலை செய்யப்படாதிருக்கலாம்.
ஆனால், அவர்கள் இருக்கிறார்களா இல்லையா, அவர்களுக்கு என்ன நடந்தது போன்ற விபரங்கள் எதுவும் தெரியாது.
ஆனால், அங்கு தொடர்ச்சியாக நீண்டகாலமாக அவர்கள் வைக்கப்பட்டிருந்ததன் காரணமாக, உள்ளுக்குள் இருந்து அறியக்கூடிய அல்லது, அங்கு பேசப்பட்ட தகவல்களின் அடிப்படையில், 35க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அங்கு இருந்திருக்கின்றன.
அவர்களுக்கு நாளாந்தம் சாப்பாடு மற்றும் பாதுகாப்பு என்பன வேறிடத்தில் இருந்து போயிருக்கின்றன என்பது போன்ற செய்திகளை எங்களால் அறியக் கூடியதாக இருந்தது.
அது மாத்திரமல்லாமல், அங்கு பெரியதொரு முகாம் இருந்ததாகவும், அந்த முகாம் “கோத்தா முகாம்” என்று அங்கிருந்தவர்களால் அழைக்கப்பட்டிருந்ததாக நான் அறிந்திருக்கின்றேன்.
அங்கு 700க்கும் மேற்பட்டவர்கள் வைக்கப்பட்டிருந்ததாகவும், அவர்களுக்கான சாப்பாடு “ட்ரக்” போன்ற வாகனங்களில் அனுப்பி வைக்கப்பட்டதாகவும் நாங்கள் அறிந்திருக்கிறோம்.
ஆகவே, இந்தச் செய்திகளை நான் பாராளுமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்திருக்கின்றேன். நாட்டின் சட்டம், ஒழுங்குக்குப் பொறுப்பான அமைச்சருக்கும் நான் பாராளுமன்றத்தில் இந்த விடயங்களை வெளிப்படுத்தியிருக்கின்றேன். இது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அவரிடம் நான் கேட்டிருக்கின்றேன்.
இதில் உண்மை இருக்கின்றது என்பது எனக்கு நிச்சயமாகத் தெரியும். ஏனென்றால், இதில் சம்பந்தப்பட்ட ஒரு சிலரிடம் நான் நேரடியாகப் பேசியிருக்கின்றேன்.
இது தொடர்பாக நான் விசாரிக்கப்படுவேனாக இருந்தால், என்னை விசாரிப்பவர்களுக்கும் உண்மைகளைச் சொல்வதற்கும் நான் தயாராக இருக்கின்றேன்.
இவர்கள் இன்னும் இருக்கிறார்களா இல்லையா, அந்த முகாம்கள் இன்னும் இருக்கின்றனவா இல்லையா என்பதைக் கண்டறிவதற்காகவே நான் இந்த விடயங்களைப் பாராளுமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்தேன்.
இரகசிய முகாம்கள் இருப்பதாக மக்கள் நம்பிக் கொண்டிருக்கின்றார்கள். பதினைந்து இருபது வருடங்களுக்கு முன்னர் பிடிபட்டவர்கள், மீண்டு வந்த ஒருசில சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றன.
ஆகவே, அந்த வகையில் மக்களுக்கு நம்பிக்கை இருக்கின்றது, காணாமல் போன சரணடைந்து காணாமல் போயுள்ள தமது பிள்ளைகள், கணவன்மார், உறவினர்கள் விடுவிக்கப்படுவார்கள், வருவார்கள் என்ற நம்பிக்கை அவர்களிடம் இருக்கின்றது.
அது நூற்றுக்கு நூறு வீதம் பிழையான, பொய்யான என்று நான் சொல்லமாட்டேன். ஆகவே, இது மிகுந்த கவனத்திற்கு எடுக்கப்பட்டு, விசாரிக்கப்பட்டு, உண்மை நிலைமைகள் தெளிவுபடுத்தப்பட வேண்டும். அந்த முகாம் ஏற்கனவே இருந்திருக்கின்றது என்று நாங்கள் நம்புகின்றோம்.
அந்த முகாம்கள் இன்னும் இருக்கின்றனவா இல்லையா என்பதுபற்றி எங்களுக்குத் தெரியாது. அதில் இவ்வளவு பேர் இருந்திருக்கின்றார்கள் என்பதையும் நாங்கள் நம்புகின்றோம்.
அவர்கள் இப்போது இருக்கின்றார்களா இல்லையா என்பது தெரியாது. ஆகவே முழுமையான விசாரணை ஒன்று தேவை. சட்டம் ஒழுங்கு அமைச்சு, பொலிஸார் அந்த விசாரணையை நடத்த வேண்டும். விசாரணை நடத்தி அவர்கள் உண்மை நிலையைக் கண்டறிய வேண்டும்.
மக்களை ஏமாற்றுவதாக இந்த விசாரணைகள் இருக்கக் கூடாது. அரசாங்கம் உரிய முக்கியத்துவம் கொடுத்து, உரிய முறையில் இந்த விசாரணைகளை மேற்கொள்வதன் மூலம் பல உண்மைகள் தெரியவரும் என்று நாங்கள் நம்புகின்றோம். அந்த வகையில் நான் இந்த விடயங்களை பாராளுமன்றத்தில் தெரியப்படுத்தியிருக்கின்றேன்.
கேள்வி: அரச படைகளை அல்லது அரசாங்கத்தைக் குற்றம் சுமத்தும் வகையில் நீங்கள் தெரிவித்திருக்கின்ற இந்த விடயங்களின் நம்பகத் தன்மை, இந்த விடயங்களை வெளிப்படுத்துவதன் பாரதூரமான நிலைமை, அதன் பின்விளைவு என்பவற்றைப் பற்றி நீங்கள் என்ன சொல்கின்றீர்கள்?
பதில் : சட்டரீதியாகப் பொதுமக்கள் கொடுத்துள்ள மனுக்களின் அடிப்படையில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருக்கின்றார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
கடத்தப்பட்டவர்கள், கைது செய்யப்பட்டவர்கள், இராணுவத்திடம் சரணடைந்து காணாமல் போனவர்கள் என பலதரப்பட்டவர்களும் இதில் அடங்குவார்கள்.
எனவே, 700 பேர் ஒரு முகாமில் வைக்கப்பட்டிருந்தார்கள் என்பது நம்பக்கூடாத ஒரு விடயமல்ல. அது நம்பக்கூடியது என்றே நான் கருதுகின்றேன். ஏனென்றால், இருபதினாயிரம் பேர் காணாமல் போயிருக்கின்றார்கள்.
அவர்களுடன் ஒப்பிடுகையில் இது ஒரு சிறிய எண்ணிக்கையே. அது மட்டுமல்ல. நான் அறிந்து கொண்டுள்ள எல்லா விடயங்களையும் ஊடகங்கள் மூலமாக வெளியிட முடியாது.
ஆகவே, நான் அறிந்த வரையில், நான் பாராளுமன்றத்தில் கூறிய விடயங்களில் உண்மைத்தன்மை இருக்கின்றது, என்று நம்பியதன் அடிப்படையிலேயே நான் அவற்றை பாராளுமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளேன்.
நான் கூறிய விடயங்கள் பிழையென்று சொன்னால், இலங்கை அரசாங்கம் அதுகுறித்து விசாரணை செய்ய வேண்டும். விசாரணை செய்து அங்கு கடந்த காலங்களில் எவ்வளவு பேர் வைக்கப்பட்டிருந்தார்கள், யார் யார் வைக்கப்பட்டிருந்தார்கள், அங்கு குடும்பங்களாக ஆட்கள் வைக்கப்பட்டிருந்தார்களா இல்லையா, நான் கூறியது போன்று அங்கு முகாம் இருந்ததா இல்லையா என்பதைக் கண்டுபிடித்து பாராளுமன்றத்திற்குத் தெரிவிக்க வேண்டும்.
அது அரசாங்கத்தின் கடமையாகும். பாதிக்கப்பட்ட மக்களின் பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில், நான் அறிந்தவைகள் உண்மையானது என்ற அடிப்படையில் இந்த விடயங்களை நான் தெரிவித்திருக்கின்றேன்.
அது மட்டுமல்லாமல், இதனுடைய பாரதூரத் தன்மையையும் நான் உணர்ந்திருக்கின்றேன். அதே சமயம் மக்களுடைய தேவைகளையும் நான் உணர்ந்திருக்கின்றேன்.
மக்கள் ஏமாற்றப்பட்டுக் கொண்டு வருகின்றார்கள் என்பதையும் நான் பார்த்திருக்கின்றேன். அதேசமயம் பல்வேறுபட்ட மறைமுகமான முகாம்கள் இருக்கின்றன என்று தமிழ் மக்கள் மத்தியில் உள்ள பரவலான கதைகளையும் நான் கேள்விப்பட்டிருக்கின்றேன்.
ஒருசிலர் விடுவிக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பதையும் நான் அறிந்திருக்கின்றேன். இப்படிப்பட்டவர்கள் சிலருடன் நான் பேசியும் இருக்கின்றேன்.
அதேநேரத்தில் யுத்தம் நடைபெற்றபோது, வன்னிப்பிரதேசத்தில் இருந்தவர்களில் ஒரு லட்சத்து நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு என்ன நடந்தது அவர்கள் எங்கு சென்றார்கள் என்பது குறித்து மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.
அது குறித்து முறையான விசாரணையொன்று நடத்தப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியிருந்தார். இத்தகையசூழலில் திருகோணமலை ‘கோத்தா’ முகாமில் 700 பேர் இரகசியமாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள் என்பதை உண்மையென்றே நாங்கள் நம்புகின்றோம்.
கேள்வி: திருகோணமலை கடற்படை முகாமில் இரகசிய முகாம் இருந்ததாகக் கூறுகின்றீர்கள். காணாமல் போயுள்ளவர்கள் பற்றிய விசாரணை நடத்தி வருகின்ற ஜனாதிபதி ஆணைக்குழு திருகோணமலையில் தனது அடுத்த அமர்வை நடத்தவுள்ளது.
அந்த அமர்வின்போது இந்த விடயம் குறித்து சாட்சியமளிப்பதற்கு அல்லது அந்தக் குழுவின் கவனத்திற்கு இதனைக் கொண்டு வருவதற்கு நீங்கள் நடவடிக்கை எதனையும் எடுப்பீர்களா?
பதில்: நாட்டின் உயர் பீடமாகிய பாராளுமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வரும் வகையில் அங்கு இந்த விடயங்கள் பற்றி சொல்லப்பட்டிருக்கின்றது.
சட்டம் ஒழுங்குக்குப் பொறுப்பான அமைச்சர் இதனை ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு வந்து இதுபற்றி விசாரிப்பதாகக் கூறியிருக்கின்றார்.
அதுபற்றிய முழு விபரங்களும் ஊடகங்களில் வெளிவந்திருக்கின்றன. சட்டம் ஒழுங்குக்குப் பொறுப்பான அமைச்சர் ஜோன் அமரதுங்க அதற்குரிய நடவடிக்கைகளை எடுப்பார் என்று நாங்கள் நம்புகின்றோம். எனவே, காணாமல் போனோர் தொடர்பில் விசாரணைகளை நடத்துகின்ற குழுவினருடைய கவனத்திற்கு இது நிச்சயமாகப் போகும் என்று நான் நம்புகின்றேன்.
ஆகவே, அவர்கள், காணாமல் போயுள்ளவர்கள் தொடர்பில் நேர்மையான முறையில் விசாரணை செய்பவர்களாக இருந்தால், பாராளுமன்றத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த விடயத்தைக் கவனத்தில் எடுத்து ஆய்வு செய்ய வேண்டும் என்பது எனது கோரிக்கை மட்டுமல்ல. அதனை அவர்கள் செய்ய வேண்டும் என்றும் நான் எதிர்பார்க்கின்றேன்.
அத்துடன் கடந்த இரண்டு வருடங்களாக அந்த ஆணைக்குழுவினர் விசாரணைகளை நடத்தியிருக்கின்றார்கள். பலதரப்பட்டவர்களின் சாட்சியங்களையும் அவர்கள் பதிவு செய்திருக்கின்றார்கள்.
அந்த சாட்சியங்களில் பெயர் குறிப்பிட்டு குற்றம் சுமத்தப்பட்டிருப்பவர்களை அழைத்து இந்த ஆணைக்குழு விசாரணை செய்திருக்கின்றதா, அவ்வாறான விசாரணைகளில் ஏதேனும் நிலைமைகள் கண்டறியப்பட்டிருக்கின்றதா அல்லது அவர்கள் தொடர்பாக நீதிமன்ற விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கின்றதா என்று எதுவுமே தெரியாது.
அதேநேரம், காணாமல் போயுள்ளவர்களில் ஒருவரைக்கூட அவர்கள், இதுவரையில் கண்டு பிடிக்கவில்லை. எனவே. அவர்கள் தங்களுடைய விசாரணை காலத்தில் எதனைக் கண்டுபிடித்திருக்கின்றார்கள், என்ன செய்திருக்கின்றார்கள் என்பது பற்றிய இடைக்கால அறிக்கையொன்றை தாக்கல் செய்ய வேண்டும் என்று நான் கோரியிருக்கின்றேன்.
அவ்வாறான இடைக்கால அறிக்கையொன்றை அவர்கள் தாக்கல் செய்வார்களா இல்லையா என்பது தெரியவில்லை.
கேள்வி: திருகோணமலை கடற்படையின் இரகசிய முகாம் குறித்து நீங்கள் பாராளுமன்றத்தில் தகவல் வெளியிட்டதன் பின்னர், அன்றைய தினமே, தமிழ்த்தேசிய கூட்டமைப்பினருக்கும் அரச உயர் மட்டத்தினருக்கும் இடையில் முக்கிய சந்திப்பு ஒன்று நடைபெற்றிருக்கின்றது.
இந்தச் சந்திப்பில் இந்த விடயம் பற்றி நீங்கள் கலந்துரையாடினீர்களா, அரச தரப்பினர் குறிப்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதற்கு என்ன கூறினார்?
பதில்: ஆம். பிரதமருடனான சந்திப்பின்போது திருகோணமலை கடற்படை முகாமின் இரகசிய கோத்தா முகாம் குறித்த தகவல்களையும், எடுத்துக் கூறி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தியிருக்கின்றோம். அதேநேரம், ஹம்பாந்தோட்டையில் இருந்தும் இரகசிய முறையில் சிலர் விடுதலை செய்யப்பட்டிருப்பது குறித்து தமக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டிருப்பதாக, பிரதமர் எங்களிடம் தெரிவித்தார்.
இதுபற்றிய விசாரணை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் இந்தச் சந்திப்பின்போது எமக்கு உறுதியளித்திருக்கின்றார்.
அத்துடன் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் தொடர்பான இடைக்கால அறிக்கை குறித்து நாங்கள் விடுத்த கோரிக்கை பற்றியும் அவருக்கு நாங்கள் எடுத்துக் கூறியிருக்கின்றோம்.
அவர் இவற்றுக்குரிய நடவடிக்கைகளை எடுப்பார் என்று நாங்கள் நம்புகின்றோம். மொத்ததில் காணாமல் போயிருப்பவர்களுக்கு என்ன நடந்தது என்பது பற்றிய உண்மை நிலைமை, திருகோணமலை இரகசிய கோத்தா முகாம் பற்றிய உண்மை நிலைமை என்பவைகள் தொடர்பாக உரிய விசாரணைகள் நடத்தி நடந்தது என்ன என்பதை வெளியிட வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.
-பி.மாணிக்கவாசகம.