முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வேண்டுதலொன்றை நிறைவேற்றுவதற்காக கதிர்காமம் ஆலயத்திற்கு திரிசூலமொன்றை காணிக்கையாகச் செலுத்தியுள்ளார்.

நேற்று திங்கட்கிழமை காலை 8.10 மணியளவில் கதிர்காமம் முருகன் ஆலயத்திற்கு சென்றுள்ள மகிந்த ராஜபக்ஷ, 6 அங்குள நீளமான தங்க முலாம் பூசப்பட்ட திரிசூலத்தில் வெள்ளி நாணயமொன்றை கட்டி கடவுளுக்கு காணிக்கையாக அந்த திரிசூலத்தை சமர்ப்பித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

வரலாற்று காலத்தில் துட்டகைமுனு மன்னன் யுத்த களத்திற்கு செல்வதற்கு முன்னர் இதுபோன்று காணிக்கைகளை செலுத்துவதை வழக்கமாக கொண்டிருந்ததாகவும் இதன்படி மஹிந்த ராஜபக்ஷ செலுத்தியுள்ள காணிக்கைக்கும் விசேட கதைகள் இருக்கலாம் என மக்கள் மத்தியில் பேசப்படுகின்றது.

குறிப்பாக மீண்டும் அரசியலுக்கு வரும் நோக்கில் அதில் வெற்றிகாணும் வகையில் வேண்டுதலை மேற்கொண்டு அவர் இந்த காணிக்கையை செலுத்தியிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவே மஹிந்த ராஜபக்ஷ கதிர்காமத்துக்கு சென்றிருந்ததாகவும் அன்றைய தினம் இரவு கிரி விகாரையில் விசேட வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் நேற்றுக் காலை கதிர்காமம் ஆலயத்திற்கு சென்றுள்ளதாகவும்  தெரிவிக்கப்படுவதுடன் அவருடன் பாரியார் சிராந்தி ராஜபக்ஷ, மகன் நாமல் ராஜபக்ஷ எம்.பி., முன்னாள் ஊவா முதல்வர் சஷிந்திர ராஜபக்ஷ ,மேல் மாகாண சபை உறுப்பினர் உதய கம்மன்பில ஆகியோர் கலந்து கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் மஹிந்த ராஜபக்ஷ கதிர்காமத்துக்கு செல்லும் போது தவறாது அவரின் பின்னால் செல்லும் அம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்ட அரசியல்வாதிகளை நேற்றைய தினம் அங்கு காணக்கிடைக்கவில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றன.

 

Share.
Leave A Reply

Exit mobile version