பிரா வடிவமைப்பு மற்றும் விற்பனை மூலம் பிரிட்டனில் வர்த்தகத்துறையில் பெரும் புகழ்பெற்று விளங்கும் கோடீஸ்வர பெண்ணான மிஷெல் மோன், தனது திருமண வாழ்க்கை முறிவடைந்தமை குறித்து தனது புதிய நூலொன்றில் விபரித்துள்ளார்.
“மை பைட் டு த டொப்” எனும் இந்நூல் அடுத்த மாதம் வெளியாகவுள்ளது. அந்நூலின் சில பகுதிகள் தற்போது ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன.
வர்த்தகத்துறையில் பெரும் பணத்தை சம்பாதித்து விருதுகளையும் வென்றபோதிலும் தனது திருமண வாழ்க்கை முறிவடைந்தமையானது மேற்படி வெற்றிகளுக்காக தான் செலுத்த வேண்டியிருந்த ஒரு விலையாகும் என 43 வயதான மிஷெல் மோன், அந்நூலில் தெரிவித்துள்ளார்.
மொடல் அழகியாக தொழிற்சார் வாழ்க்கையை ஆரம்பித்தவர் மிஷெல் மோன்.
பின்னர் பிரா வடிவமைப்புப் பணியில் ஈடுபட்ட அவர் 1996 ஆம் ஆண்டு எம்.ஜி.எம். இன்டர்நெஷனல் லிமிடெட் எனும் நிறுவனத்தை ஸ்தாபித்தார்.
தற்போது அந்நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாகவும் அவர் விளங்குகிறார்.
இந்நிறுவனம் தயாரித்த “அல்டிமோ பிரா” வாடிக்கையாளர்களிடையே அதிக வரவேற்பை பெற்ற நிலையில் மிஷெல் மோன் பிரிட்டனின் மிக வெற்றிகரமான வர்த்தகர்களில் ஒருவரானார் மிஷெல்.
2011 ஆம் ஆண்டில் அவரின் சொத்து மதிப்பு 2 கோடி ஸ்ரேலிங் பவுண்கள் (சுமார் 400 கோடி இலங்கை ரூபா) என மதிப்பிடப்பட்டிருந்தது.
தனது நிறுவனம் தயாரிக்கும் உள்ளாடைகளுக்கும் இவர் மொடலாக பணியாற்றியுள்ளார்.
18 வயதிலேயே மைக்கல் என்பவரை காதலித்து கர்ப்பமான மிஷெல் மோன், மைக்கலை திருமணம் செய்து 3 குழந்தைகளுக்கு தாயானார்.
2013 ஆம் ஆண்டு மைக்கலும் மிஷெல் மோனும் பிரிந்தனர்.
தனது கணவரான மைக்கல் தனக்கு துரோகமிழைத்து வேறு பெண்களை நாடியமையே தமது திருமண வாழ்க்கையில் விரிசல் ஏற்பட்டமைக்கான காரணம் என மிஷெல் மோன் கூறுகிறார்.
தனது வர்த்தகத்துறையில் தீவிர கவனம் செலுத்தி, 1999 ஆம் ஆண்டு அல்டிமோ பிராவை சந்தைக்கு அறிமுகப்படுத்திருந்த சிறிது காலத்தில் தனது திருமண வாழ்க்கையில் பிரச்சினைகள் ஏற்பட ஆரம்பித்திருந்தன எனவும் மிஷெல் மோன் கூறியுள்ளார்.
ஒரு தடவை விமானப் பயணமொன்றின் போது, கவர்ச்சியான விமானப் பணிப்பெண் ஒருவரிடம் தனது கணவர் 45 நிமிடநேரம் மசாஜ் செய்துகொண்ட பின்னர் தன்னை தாக்கினார் என மேற்படி நூலில் மிஷெல் மோன் தெரிவித்துள்ளார்.
மற்றொரு பெண்ணுடன் மைக்கல் முறையற்ற தொடர்புகொண்டிருந்தை தான் கண்டுபிடித்த பின்னர் கணவரின் ஒரு லட்சம் ஸ்ரேலிங் பவுண் பெறுமதியான ஆடம்பர காரை தான் சேதப்படுத்தியதாகவும் மிஷெல் மோன் கூறியுள்ளார்.
மிஷெல் மோனின் நெருங்கிய தோழியும் அவரின் நிறுவனத்தில் தலைமை வடிவமைப்பாளராக பணியாற்றியவருமான சமந்தா பன் எனும் பெண்ணை மிஷெலின் கணவர் மைக்கல் கவர்ந்திழுத்து அவருடன் இணைந்து வாழ ஆரம்பித்ததுடன் மிஷெலின் நிறுவனத்துக்கு போட்டியாக மற்றொரு பிரா நிறுவனமொன்றை ஸ்தாபித்தமை குறிப்பிடத்தக்கது.
எவ்வாறெனினும் தொடர்ந்தும் தனது வர்த்தகத்தில் தீவிர ஈடுபாடு காட்டி வருகிறார் மிஷெல் மோன்.
வர்த்தகத்துறையில் பல விருதுகளை வென்ற மிஷெல் மோனுக்கு பெய்ஸ்லி பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டமும் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.