பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப கண்காட்சி கூட கூடாரம் உடைந்து விழுந்ததால் அங்கவீனமுற்ற மருத்துவர் சமித்தா சமன்மாலிக்கு 180 மில்லியன் ரூபா நஷ்டஈடு வழங்குமாறு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப நிர்வாகத்திற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

2008 பெப்ரவரி மாதம் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற கண்காட்சியை பார்வை யிடுவதற்காக மருத்துவ மாணவியான சமிதாவும் அங்கு சென்றிருந்தார்.

இதன் போது கூடாரம் உடைந்து விழுந்ததில் அவரது தலைக்கும் முள்ளந்தண்டு என்பவற்றுக்கும் பெரும் சேதம் ஏற்பட்டது.

இதனால் உடலின் கீழ்பகுதி செயலிழந்ததால் அவருக்கு சக்கர நாற்காலியிலே மருத்துவ படிப்பை தொடர நேரிட்டது. தனக்கு நடந்த அனர்த்தத்துக்கு எதிராக சமித்தா சந்தமாலி வழக்கு தொடர்ந்திருந்தார்.

தனக்கு ஏற்பட்ட பாதிப்பிற்கு நஷ்டஈடு பெற்றுத்தருமாறு அவர் தனது மனுவில் கோரியிருந்தார். இது தொடர்பான தீர்ப்பு நேற்று வெளியிடப்பட்டது.

பாதிக்கப்பட்ட மாணவிக்கு 180 மில்லியன் ரூபா நஷ்டஈடு வழங்குமாறு மாவட்ட நீதவான் பிரதீப் ஹெட்டியாராச்சி பிரதிவாதிகளுக்கு உத்தரவிட்டார்.

கூடாரம் உடைந்து விழுந்ததால் நிரந்தர நோயாளியான தனக்கு 500 மில்லியன் ரூபா நஷ்ட ஈடு பெற்றுத் தருமாறு சமன்மலி சமிதா தனது மனுவில் கோரியிருந்தார்.

n1502285மாநாட்டு மண்டப நிர்வாகிகளின் தவறினாலும் கவனயீனத்திலுமே தனக்கு இந்த நிலை ஏற்பட்டதாகவும் மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

வழக்கு விசாரணை 6 வருடங்கள் இடம்பெற்றது. விசாரணையின் போது சாட்சியளித்த நிபுணத்துவ மருத்துவர்கள் அவரின் உடலின் கீழ்ப்பகுதி செயலிழந் துள்ளதாகவும் அப்பகுதியில் ஏதும் காயம் ஏற்பட்டால் மோசமான பாதிப்பு ஏற்படும் எனவும் குறிப்பிட்டிருந்தனர்.

அவருக்கு வாழ்நாள் முழுவதும் மருத்துவ சிகிச்சை தேவைப்படும் எனவும் மருத் துவர்கள் நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தனர்.

இதன்படி பாதிக்கப்பட்ட மாணவியின் மருத்துவ சிகிச்சைகளுக்காக 110 மில்லியன் ரூபாவும் தொழில்புரிந்து வருமானம் ஈட்ட முடியாமல் போவதால் ஏற்படும் பாதிப்பிற்கு 50 மில்லியன் ரூபாவும் மன உளைச்சலுக்கும் 20 மில்லியன் ரூபாவும் என மொத்தமாக 180 மில்லியன் ரூபா வழங்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

180 மில்லியன் ரூபா நஷ்ட ஈட்டுடன் 6 வருட காலத்துக்கான வட்டியும் வழங்குமாறும் பணிக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version