இந்திய ரோலர் படகு மீனவர்கள் பருத்தித்துறை கட்டைக்காடு கடற்பரப்பில் பெற்றோல் குண்டு வீசியதுடன், மீனவர்களை தாக்கி சேதப்படுத்தியுள்ளதாக கட்டைக்காடு பகுதி மீனவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

பருத்தித்துறை கட்டைக்காடு பகுதியில் நேற்று முன்தினம் புதன்கிழமை (25/02) நள்ளிரவில், தமிழகத்தினைச் சேர்ந்த மீனவர்கள் 50 படகுகளில் கட்டைக்காடு பகுதிக்கு வந்து அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டுள்ளனர்.

அதன்போது கட்டைக்காடு மீனவர்களின் 25 படகுகளை சேதமாக்கியதுடன் 300 வலைகளை வெட்டியுள்ளனர்.

இதனை அறிந்த கட்டைக்காட்டுப் பகுதி மீனவர்கள் இந்திய மீனவர்களுடன் பேசிய போது மீனவர்களின் பெற்றோல் குண்டுகள் வீசியதுடன் தாம் பிடித்த சங்குகளினாலும் மீனவர்களை தாக்கியுள்ளனர்.

இந்த தாக்குதலில் 3 மீனவர்கள் படுகாயமடைந்துள்ளனர். இவ்வாறு இந்திய மீனவர்களின் அத்துமீறலை கண்டித்து அந்த பகுதியில் நேற்று வியாழக்கிழமை பகல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தத் தாக்குதல் சம்பவத்தினை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் சென்று பார்வையிட்டுள்ளார்.

இவ்வாறு இந்திய மீனவர்களின் ரோலர் படகினால் தாம் 25 இலட்சம் ரூபாவிற்கு அதிகமான நஷ்டத்தினை அடைந்துள்ளதுடன், இவ்வாறு இந்திய மீனவர்களின் ரோலர் படகின் அத்துமீறலினால் பெரிதும் பாதிக்கப் படுவதாக கட்டைக்காடு சென்மேரிஸ் கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க தலைவர் கே.ஜே. எட்வேட் தெரி வித்தார்.

இந்திய மீனவர்களின் ரோலர் படகின் அத்துமீறலை தடுப்பதற்காக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு எதிர்வரும் திங்கட்கிழமை (02/03) இந்திய துணைத் தூதுவர் ஆ. நடராசாவைச் சந்தித்து கலந்துரையாடவுள்ளதுடன், இந்திய துணைத் தூதுவர்  அலுவலகத்திற்கு  முன்பாக போராட்டமொன்றினையும்  மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்தார்.

Share.
Leave A Reply

Exit mobile version