மூன்று தசாப்த யுத்த காலத்தில் காணாமல் போனோரது பட்டியல் நீண்டது. இந்நிலையில் யுத்தம் நிறைவடைய ஒரு வருடத்துக்கு முன் அதாவது 2008 ஆம் ஆண்டு முதல் யுத்தம் நிறைவடைந்து இரு ஆண்டுகள் அதாவது 2011 வரை தலை நகர் கொழும்பை ஒரு கடத்தல் கலாசாரம் புரட்டி எடுத்தது.
வெள்ளை வேன் கலாசாரம் என அப்போது அடையாளம் காணப்பட்ட அந்த கடத்தலுக்குள் சிக்கி குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் மட்டும் சுமார் 28 பேர் கடத்தப்பட்டு முகவரியின்றி உள்ளனர்.
இந் நிலையில் தான் குற்றப் புலனாய்வுப் பிரிவு கடற்படையின் கப்பக் குழு ஒன்று தொடர்பில் தகவல்களை வெளிப்படுத்திக் கொண்டுள்ளது.
இந்த குழு சுமார் 8 அல்லது 9 பேரைக் கொண்டது என சந்தேகிக்கப்படுகின்றது. குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வெளிப்படுத்திக் கொண்டுள்ள தகவல்களுக்கு அமைவாக அதில் மூன்று கடற்படை உயர் அதிகாரிகளும் உள்ளனர்.
இதுவரை இரு சிங்களவர்கள் மற்றும் தமிழ், முஸ்லிம்கள் என 11 பேரின் கடத்தல் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் சுமார் 30 வரையிலான வாக்கு மூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கப்பம் பெறும் நோக்கிலேயே இந்த கடத்தல் கள் இடம்பெற்றுள்ளதாகவும் மேலோட்டமாக பார்க்கும் போதே தெரிவதாக சுட்டிக்காட்டினார்.
உண்மையில் இந்த கடற்படையின் கப்பக் குழு தொடர்பிலான தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டது 2008 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 17 ஆம் திகதி இரவு 10 மணியளவில் மூன்று தமிழ் மாணவர்களும் அவர்களது நண்பர்களான இரண்டு முஸ்லிம் மாணவர்களும் தெஹிவளையில் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளிலாகும்.
இது தொடர்பில் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் ஆட்கொணர்வு மனுவொன்று கடந்த சில வருடங்களுக்கு முன்னதாக தாக்கல் செய்யப்படும் போது விஷேட விசாரணைகள் ஆரம்பமாகின்றன.
இந் நிலையில்தான் கடற்படையின் அப்போதைய தளபதி அட்மிட்ரல் வசந்த கருணாகொட இந்த கடத்தலுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரின் பெயரை முதன் முதலாக வெளிப்படுத்துகின்றார்.
இது தொடர்பில் சம்பவம் இடம்பெற்றது முதல் விசாரணைகளை ஆரம்பித்த சீ.சீ.டீ.எனப்படும் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவிடம் இருந்து குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை பொறுப்பேற்று நடவடிக்கையில் இறங்கிய போதே இந்த வெளிப்படுத்தல் முன்னெடுக்கப்பட்டது.
அதாவது அட்மிரல் வசந்த கருணாகொட புலனாய்வுப் பிரிவினருக்கு கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் 28 ஆம் திகதி முன்வைத்த முறைப்பாடு ஊடாகவே இந்த கடத்தலுடன் கடற்படையினர் தொடர்பு குறித்த முதன்மைத் தகவல் பகிரங்கமாகின்றது.
‘ நேவி சம்பத்’ என அழைக்கப்பட்ட லெப்டினன் கொமாண்டர் தர அதிகாரியான எம்.என்.டீ.எஸ்.முனசிங்க தொடர்பிலேயே இந்த முறைப்பாட்டினை அப்போதைய தளபதி அட்மிரல் வசந்த கருணாகொட புலனாய்வுப் பிரிவில் முன்வைத்திருந்தார்.
இந் நேவி சம்பத்தை பற்றி சொல்லியாகவேண்டும். நேவி சம்பத் கடற்படையின் கடை நிலை அதிகாரியோ அல்லது உத்தியோகத்தரோ அல்ல.
மாற்றாக கடற்படையின் அப்போதைய தளபதியான வசந்த கருணாகொடவின் பாதுகாப்பு பிரிவின் முக்கியமான அதிகாரி. இதனைவிட அவருக்கு கீழ் இருந்த குழு கடற்படை புலனாய்வு நடவடிக்கைகளில் தொடர்புபட்டிருந்ததுடன் தேசிய புலனாய்வுப் பிரிவுடனும் தொடர்புகளைக் கொண்டிருந்ததாக அறிய முடிகின்றது.
இந்த கடத்தல் தொடர்பில் விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவு ஆரம்பிக்கும் போதே நேவி சம்பத் மீது அப்போதைய குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் சிசிர மெண்டிசின் அவதானம் திரும்பியிருந்தாலும் ஆரம்பத்தில் கடற்படை தளபதி தனது பாதுகாப்பு பிரிவின் சகா மீதான சந்தேக பார்வைகளை முற்றாக மறுத்தார்.
இந் நிலையிலேயே திடீரென கடற்படையின் புலனாய்வுப் பிரிவு வெளிப்படுத்திக் கொண்ட தகவல்கள் என தெரிவித்து குற்றப் புலனாய்வுப் பிரிவின் நேவி சம்பத்துக்கு எதிராக கடற்படை தளபதியாக இருந்த வசந்த கருணாகொடவினால் முறையிடப்பட்டது.
நேவி சம்பத் மிக இரகசியமான முறையில் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் சிவிலியன்களை கடத்திச் சென்று கப்பம் பெற்று அவர்களை கொலை செய்து வந்ததாகவும் அதற்கு சாதகமாக யுத்த சூழலை அவர் பயன்படுத்திக்கொண்டதாகவும் கடற்படையின் புலனாய்வுத் தகவல்கள் ஊடாக அப்போது அறியமுடிந்தது.
இதற்காக நேவி சம்பத் பிரத்தியேக மாக பார் என்ற உளவு பார்க்கும் நபர் ஒருவரை நியமித்திருந்ததாகவும் அவர் விடுதலை புலிகளின் கபில் அம்மானின் கீழ் பயிற்சி பெற்றவர் எனவும் அவரே நேவி சம்பத்தின் கப்பக் குழுவுக்கு கடத்தப்படத்தக்கவர்கள் தொடர்பில் தகவல் வழங்குபவர் எனவும் அறிய முடிந்தது.
எனினும் இந்த தகவலில் எந்தளவு தூரம் உண்மை உள்ளது என்பதை அறிய இன்று வரை பார் என்ற குறித்த உளவு பார்க்கும் நபரை கண்டுபிடிக்க முடியவில்லை.
அவரை நேவி சம்பத் தலைமையிலான குழுவினரே இறுதிக் கட்ட யுத்த காலப்பகுதியில் கொன்றுவிட்டதாகவும் ஒரு தகவல் உள்ளது.
இந் நிலையில் நேவி சம்பத்தின் கடத்தல் தொடர்பில் கடற்படை புலனாய்வுப் பிரிவு வெளிப்படுத்தியதாக கூறப்படும் தகவல்கள் ஒன்றும் இரகசியமல்ல.
அந்த தகவல்களின் படி குறித்த சம்பவம் வருமாறு:
அது கடந்த 2008 ஆம் ஆண்டு செப்டெம் பர் மாதம் பார் உளவாளி இளைஞர் குழு ஒன்றை தொடர்பில் நேவி சம்பத் தலைமையிலான கடற்படை கப்பக் குழுவுக்கு உளவு தகவல் ஒன்றை வழங்கியுள்ளார்.
இதனையடுத்தே தெஹிவளை ஐந்து மாணவர் கடத்தல் சம்பவம் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் குறிப்பிட்ட ஒரு மாணவன் பட்டப் படிப்பு ஒன்று தொடர்பில் 2008 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 17 ஆம் திகதி வெளி நாடொன்றுக்கு செல்ல தயாராக இருந்தவன்.
இந் நிலையில் தான் வெளிநாடு செல்ல முன் தனது நான்கு நண்பர்களையும் பார்த்துவிட்டு செல்லும் நோக்கில் அவர்கள் தெஹிவளை பிரதேசத்தில் ஒன்று சேர்ந்துள்ளனர்.
அது 2008 செப்டெம்பர் 16 ஆம் திகதியாகும். அதில் இருவர் முஸ்லிம்கள். ஏனையோர் தமிழர்கள். இந் நிலையில் அவர்கள் ஒன்று கூடியிருந்த இடத்தை அடைந்துள்ள குறித்த கப்பக் குழு ஐவரையும் அள்ளிச் சென்றுள்ளது.
இவ்வாறு கடத்தப்பட்ட ஐவரும் கொழும்பு இலங்கை வங்கி தலைமையகம் அமைந்துள்ள பகுதியில் இருந்த ஒரு கட்டிடத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்துள்ளனர்.
இதனை தொடர்ந்தே வெளி நாட்டுக்கு பட்டப் படிப்பை மேற்கொள்ள செல்லத் தயாராக இருந்த மாணவனின் தந்தையை தொடர்புகொள்ளவும் அந்த கப்பக் குழு அவரிடம் ஒரு கோடி ரூபாவை கப்பமாக கோரவும் திட்டமிட்டுள்ளனர்.
இந் நிலையில் கடற்படையின் அப்போதைய தளபதிக்கு நேவி சம்பத்தின் நடவடிக்கைகள் குறித்து தொடர்ச்சியான முறைப்பாடுகள் கிடைத்தவண்ணம் இருந்துள்ளன.
இதனையடுத்து ரியல் அட்மிரல் தர அதிகாரி ஒருவரின் கீழ் விசாரணைகள் இடம்பெற்ற போது அனைத்து தகவல்களும் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
அதன்படி, குறித்த ஐந்து மாணவர்களும் கடத்தப்பட்டு திருகோணமலை கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
இந் நிலையில் கடற்படையின் புலனாய்வுப் பிரிவு இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில் நேவி சம்பத்தின் குழுவில் இருந்ததாக கூறப்படும் இரு கடற்படையினர் சம்பவம் தொடர்பில் ஒப்புதல் வாக்குமூலம் ஒன்றை விசாரணையாளர்களிடம் அளித்துள்ளனர்.
அந்த வாக்கு மூலங்களில் தம்மால் அந்த ஐவரும் கடத்தப்பட்டதாகவும் அதில் நால்வரை கொலை செய்து துண்டுதுண்டுகளாக வெட்டி களனி கங்கையின் ஓரிடத்தில் மூழ்கடித்ததாகவும் வெளிநாடு சென்று பட்டப்படிப்பை முன்னெடுக்க தயாராக இருந்த மாணவனை திருகோணமலை கடற்படை முகாமுக்கு கொன்டு சென்றதாகவும் அங்கு வைத்து அவரை 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி சுட்டுக்கொன்றதாக வும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டதன் பின்னரேயே குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு கடற்படை தளபதி நேவி சம்பத் தொடர்பில் தனது முறைப்பாட்டை முன் வைத்துள்ளதுடன் அது முன் வைக்கப்படும் போதும் நேவி சம்பத் கடற்படையில் இருந்து தப்பிச் சென்றிருந்தார்.
இந் நிலையிலேயே நேவி சம்பத் தங்கியிருந்த அறை சீல் வைக்கப்பட்டு குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் சோதனைக்கு உள்ளானது.
சோதனைக்கு முன்னர் 2009 ஆம் ஆண்டு ஜூன் 10ஆம் திகதி நேவி சம்பத்தை புலனாய்வுப் பிரிவினர் கைது செய்தனர். அன்றைய தினமே அவரது அறை புலனாய்வுப் பிரிவினரால் சோதனைக்குட்படுத்தப்பட்டது.
7.62X25 துப்பாக்கி ரவைகள், 7.62மி.மீ. வெடி குண்டுகள் கொமர்ஷல் வங்கி, சம்பத் வங்கி, மக்கள் வங்கி, தேசிய சேமிப்பு வங்கி, எச்.எஸ்.பி.சி, வங்கி, இலங்கை வங்கிகளின் சேமிப்புப் புத்தகங்கள், காசோலைகள், காணாமல் போனவர்களின் தேசிய அடையாள அட்டைகள், கடவுச்சீட்டுக்கள், சோனி எரிக்சன் சிம் அட்டைகள், உட்பட 21 தடயப் பொருட்களை பொலிஸாரால் கைப்பற்ற முடிந்தது.
அத்துடன் தன்டுவம் முதலாளி எனப்படும் வட்டிக்கு பணம் கொடுக்கும் வர்த்தகர் ஒருவரிடம் பல இலட்சம் ரூபா பெறுமதியான வவுச்சர் ஒன்று வைப்புச் செய்யப்பட்டிருந்த நிலையில் அதுவும் மீட்கப்பட்டது.
இந் நிலையில் கைது செய்யப்பட்ட நேவி சம்பத்தை பொலிஸார் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து பின்னர் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தி விளக்கமறியலிலும் வைத்தனர்.
சுமார் ஒருவருடம் வரை விளக்கமறியலில் இருந்த நேவி சம்பத் 2010 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 9 ஆம் திகதி பிணையில் விடுதலையானார். இதனை தொடர்ந்தே இந்த விவகாரம் குறித்து மேலும் சில தகவல்கள் கசியத்தொடங்கின.
அந்த தகவல்கள் இந்த கடத்தல்கள் கொலைகளுக்கு பின்னால் கடற்படையின் அப்போதைய தளபதி அட்மிரல் வசந்த கருணாகொடவின் நெருங்கிய அதிகாரிகளாக செயற்பட்ட கடற்படை முன்னாள் ஊடகப் பேச்சாளர் தஸநாயக்க, ரணசிங்க போன்றோர் உள்ளதாகவும் தன்னை பழிவாங்கும் முகமாக அவர்களால் கொலையுண்ட நபர்களின் அடையாள அட்டைகள், கடவுச் சீட்டுக்களை தனது அறையில் போட்டு தன்னை மாட்டிவிட்டதாக நேவி சம்பத் ஊடாக வெளியில் வந்தது.
இந் நிலையில் தான் கடந்த ஜனவரி மாதம் இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்படுகின்றது. இதனை மற்றொரு சாதகமாக பயன்படுத்தி கொள்ளும் நேவி சம்பத் இடையீட்டு மனுவொன்றை ( மோசன் ஒன்றை) நீதிமன்றில் தாக்கல் செய்து இது தொடர்பில் புதிய தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார்.
அதாவது கடற்படையின் அப்போதைய தளபதி ஊடாக குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு சமர்ப்பிக்கப்பட்ட கடற்படை புலனாய்வுப் பிரிவின் விசாரணை அறிக்கை ஊடாக நேவி சம்பத் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டிருந்தார்.
இந் நிலையில் 2011 ஆம் ஆண்டு மார்ச் 30 ஆம் திகதி மன்றுக்கு அறிக்கை தாக்கல் செய்த குற்றப் புலனாய்வுப் பிரிவு நேவி சம்பத் இந்த கடத்தல்களுடன் தொடர்புடையவர் என்பதை அடித்து சொல்லியிருந்தது.
எனினும் தற்போது மன்றுக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள இடையீட்டு மனுவின் ஊடாக இவற்றுக்கு பொறுப்புக் கூற வேண்டியவராக முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் வஸந்த கருணாகொட ஆக்கப்பட்டுள்ளார்.
இந் நிலையிலேயே தற்போது புதிய கோணத்தில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.
எவ்வாறாயினும் பொலிஸ் தலைமையகத்தின் உத்தியோக பூர்வ தகவல்களின் பிரகாரம் இதுவரை கடத்தப்பட்ட 11 பேர் தொடர்பில் தகவல்களை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வெளிப்படுத்திக்கொண்டுள்ளனர்.
இவர்கள் 2008 ஆகஸ்ட் மாதத்துக்குள் 2009 செப்டெம்பர் மாதத்துக்கும் இடையே கடத்தப்பட்டவர்களாவர். மருதானை, தெஹிவளை, கொட்டாஞ்சேனை, வெள்ளவத்தை உள்ளிட்ட பிரதேசங்களில் கடத்தப்பட்டவர்கள் தொடர்பிலேயே இந்த வெளிப்படுத்தல்கள் செய்யப்பட்டுள்ளன.
இவர்கள் அனைவரும் கொழும்பு சைத்திய வீதியில் உள்ள கடற்படை முகாம் மற்றும் திருகோணமலை முகாம்களிலேயே தடுத்து வைக்கப்பட்டிருந்தமை தொடர்பிலும் தகவல்கள் வெளிப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிடுகின்றது.
எனினும் அவர்கள் தற்போது உயிருடன் உள்ளனரா அல்லது கொலை செய்யப்ப ட்டுவிட்டனரா என்பதற்கான உறுதியான ஆதாரங்கள் இதுவரை பிரிவுக்கு கிடைக்கவில்லையாம்.
இந் நிலையிலேயே சுமார் 8 அல்லது 9 கடற்படை அதிகாரிகளை சந்தேக வளையத்துக்குள் வைத்துள்ள குற் றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை முடக்கிவிட்டுள்ளது.
இதுவரை செய்யப்பட்டுள்ள விசாரணை களில் கொழும்பு, திருகோணமலை கடற் படை முகாம்களில் கடத்தப்படுவோர் தடுத்து வைக்கும் கலாசாரம் ஒன்று இருந்து வந்துள்ளமை உறுதியாகியுள்ளது.
அப்படியானால் திருகோணமலை கடற்படை முகாமில் இயங்கியதாக கூறப்படும் கோத்தா தடுப்பு முகாம் உள்ளிட்ட சந்தே கங்கள் யதார்த்தமாக மாறியுள்ளன.
இது தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் தொடர் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில் மிக விரைவில், வெளிவரலாம். அதன்படி கடற்படை முகாம்களில் இவ்வாறு புதைந்துபோன இரகசியங்கள் வெளிச்சத்துக்கு கொண்டுவரப்படக் கூடிய வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளன.
எனினும் தற்போதும் கடத்தப்பட்டவர்கள் எங்கு எப்படி உள்ளார்கள் என்பது விடை தெரியாத வினாவே.
-எம்.எப்.எம்.பஸீர்-