லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவில் இந்திய யோகா குரு மீது அடுக்கடுக்காக செக்ஸ் புகார்களை பாதிக்கப்பட்ட பெண்கள் கூறியுள்ளதோடு, நீதிமன்றத்திலும் வழக்குகளை தொடர்ந்துள்ளனர்.
அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இந்திய யோகா கல்லூரி என்ற பெயரில் யோகா கல்லூரி நடத்தி வருபவர், யோகா குரு பிக்ரம் சவுத்ரி.
இந்திய அமெரிக்கரான இவர் கொல்கத்தாவை பூர்வீகமாகக் கொண்டவர். 3 வயதில் யோகா கற்கத் தொடங்கி அதில் வல்லுனர் ஆனார். திருமணமாகி ராஜஸ்ரீ என்ற மனைவி உள்ளார். குழந்தைகளும் உள்ளனர்.
இவர் சுயமாக 26 யோகா நிலைகளை உருவாக்கி உள்ளார். இந்த யோகா பயிற்சியை 105 டிகிரி பாரன்ஹீட் வெப்ப நிலையில் உள்ள அறையில், உடலோடு ஒட்டி உறவாடும் இறுக்கமான உடை அணிந்துதான் செய்ய வேண்டும்.
இவர் தன்னிடம் யோகா கற்க வந்த பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக அடுக்கடுக்காக புகார்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, 6 பெண்களை இந்தியா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக அமெரிக்காவில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
சமீபத்தில் இவர் மீது 6வது வழக்கை லாஸ் ஏஞ்சல்ஸ் நகர் சுபீரியர் நீதிமன்றத்தில் ஜில் லாலர் என்ற கனடா பெண் கடந்த 13ஆம் தேதி வழக்கு தொடர்ந்துள்ளார். இவர் முதலில் யோகா பயிற்சி பெற்று, பின்னர் அவரது நிறுவனத்தில் பயிற்சியாளராக பணியாற்றியவர்.
நீதிமன்றத்தில் இவர் தாக்கல் செய்துள்ள மனுவில், நான் யோகா மாஸ்டர் பிக்ரம் சவுத்ரிடம் 18 வயதில் யோகா கற்பதற்காகத்தான் சென்றேன். 2010ஆம் ஆண்டு நான் போனேன்.
ஆனால் பல மாற்றங்கள் அதிரடியாக நடந்து விட்டன. அவர் நூற்றுக்கணக்கான மாணவர்களுடன் பின்னிரவில் இந்திப் படங்கள் பார்ப்பார்.
அப்போது நான் அவருக்கு மசாஜ் செய்ய வேண்டும் என்று எதிர்பார்த்தார். முதலில் செக்ஸ் தொல்லைகள் கொடுத்தார். அதைத் தொடர்ந்து பல முறை அவர் என்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டார்.
அவர் இது தொடர்பாக ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விளக்கம் தருவார். தனது செயலை சரியானதுதான் என நிலை நாட்டினார். அவர், ’நான் செத்துக் கொண்டிருக்கிறேன்.
நீ தான் என்னை காப்பாற்ற வேண்டும். நான் உன்னுடன் செக்ஸ் உறவு வைத்துக்கொள்ளாவிட்டால் செத்து விடுவேன். நீ என் உயிரைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறாய். நீ எனக்கு உதவுகிறாய்’ என்றெல்லாம் கூறி இருக்கிறார்.
முதலில் அவர் சாதாரணமாகத் தான் ஆரம்பித்தார். அடுத்து அவர் தனது லீலைகளை ஒவ்வொன்றாக அரங்கேற்றி, பாலியல் பலாத்காரம் வரை வந்து விட்டார்.
இந்தியா உள்பட பல்வேறு இடங்களில் வைத்து அவர் என்னை பாலியல் பலாத்காரம் செய்தார். எனக்கு வெட்கமாகவும் தர்ம சங்கடமாகவும் போய் விட்டது.
யாரும் இதை நம்புவார்கள் என நான் கருதவில்லை. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” கூறப்பட்டுள்ளது.
ஆனால் பிக்ரம் சவுத்ரி மீதான இந்தக் குற்றச்சாட்டுகளை அவரது வழக்கறிஞர்கள் மறுத்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில், ‘எங்கள் கட்சிக்காரர் மீதான குற்றச்சாட்டுகள் தவறானவை.
யோகா சமூகம் மீது தேவையற்ற களங்கம் சுமத்தப்பட்டுள்ளது. பல்லாண்டு காலம் ரகசியமாக வைத்து விட்டு, இப்போது அந்தப் பெண்கள் தாமாக தனிப்பட்ட முறையில் தங்கள் குற்றச்சாட்டுகளுடன் வரவில்லை.
இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் உலகளாவிய ஆதரவு திரட்டி விட்டு புகார் கூறி உள்ளனர். நிதி ஆதாயம் பெறுவதற்காக சட்டத்தை அவர்கள் தவறாகப் பயன்படுத்தி உள்ளனர்’ என கூறப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் பெண்களுக்காக ஆஜராகும் வழக்கறிஞர் மேரி சியா, ‘பாதிக்கப்பட்ட அனைத்துப் பெண்களின் புகாரின் மைய குற்றச்சாட்டு, தாங்கள் நம்பிக்கை மோசடி செய்யப்பட்டு விட்டதுதான்.
ஆனால் 6 பேரின் புகாரும் வெவ்வேறானவை. ஒரே வழக்காக அவற்றை இணைக்க முடியாது’என கூறி உள்ளார்.
லாரிசா ஆன்டர்சன் என்ற பெண் தனது வழக்கில், ‘கணவரும், பிள்ளைகளும் மாடியில் இருந்தபோதே என்னை சவுத்ரி பாலிபல் பலாத்காரம் செய்து விட்டார்’ என தெரிவித்துள்ளார்.
பிக்ரம் சவுத்ரி மீதான பெண்கள் செக்ஸ் புகார்கள் கூறியுள்ளதோடு, நீதிமன்றத்தில் வழக்குகளை தொடர்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.