யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டடம் ஜனாதிபதி மாளிகை அல்ல எனவும் அது சர்வதேச மாநாட்டு மத்திய நிலையம் எனவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

எனது பாவணைக்காக காங்கேசன்துறையில் ஜனாதிபதி மாளிகையை கட்ட நடவடிக்கை எடுத்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.

காங்கேசன்துறையில் எந்த ஜனாதிபதி மாளிகையும் கட்டப்படவில்லை என்பதை மக்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன். 1980 ஆம் ஆண்டுகளில் விடுதலைப் புலிகள் அழிப்பதற்கு முன்னர், யாழ்ப்பாண கோட்டையில் ஜனாதிபதி மாளிகை ஒன்று இருந்தது என்பதை நினைவுப்படுத்த வேண்டும்.

அங்கிருந்த மாளிகை இதுவரை மீள நிர்மாணிக்கப்படவில்லை. காங்கேசன்துறையில் நிர்மாணிக்கப்படுவது ஜனாதிபதி செயலகத்தின் கீழ் வரும் சர்வதேச மாநாட்டு மத்திய நிலையம். கடற்படையினரே அந்த கட்டடத்தின் நிர்மாணிப் பணிகளுக்கு பொறுப்பாக இருந்தனர்.

இலங்கையில், உள்ள பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபம், இலங்கை மன்றக் கல்லூரி, தாமரை தடாகம் ஆகியன மாநாட்டு மத்திய நிலையங்கள் ஜனாதிபதி செயலகத்தின் பொறுப்பின் கீழ் உள்ளன.

காங்கேசன்துறை மற்றும் அருகம்பை பிரதேசங்களில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டடங்கள் ஜனாதிபதி மாளிகைகள் அல்ல. அவை சர்வதேச மாநாட்டு மத்திய நிலையங்கள்.

இலங்கையில் நடைபெறும் சர்வதேச மாநாடுகளின் போது வடக்கு, கிழக்குக்கு விஜயம் மேற்கொள்ளும் வெளிநாட்டு தலைவர்கள் மற்றும் ஏனைய உள்நாட்டு வெளிநாட்டு அதிதிகளின் பயன்பாட்டுக்காக இவை கட்டப்படுகின்றன.

நாட்டில் சமாதானம் ஏற்பட்ட பின்னர் வடக்கு, கிழக்கு பகுதிகளுக்கு செல்லும் உள்நாட்டு, வெளிநாட்டு அதிதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

காங்கேசன்துறை மற்றும் அருகம்பை பிரதேசங்களில் நிர்மாணிக்கப்படும் சர்வதேச மாநாட்டு மத்திய நிலையங்களில் தங்குமிட வசதிகள் உள்ளன.

இதுதான் ஏனைய மாநாட்டு மத்திய நிலையங்களுக்கு இவற்றுக்கும் இடையில் காணப்படும் வேறுபாடாகும். இந்த மத்திய நிலையங்களை நிர்மாணிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது.

பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபம், தாமரைத் தடாகம் போன்றனவும் ஜனாதிபதி செயலகத்தினாலேயே நிர்வகிக்கப்பட்டு வருகின்றன.

காங்கேசன்துறை, அருகம்பை ஆகிய பகுதிகளில் நிர்மாணிக்கப்படுவது, ஜனாதிபதி மாளிகைகள் அல்ல, சர்வதேச மாநாட்டு மண்டபங்கள், எனக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான கட்டடங்களை நிர்மாணிப்புகளை ஜனாதிபதி மாளிகை நிர்மாணிக்க மேற்கொள்ளப்படும் வீண் செலவுகள் என கடந்த காலம் முழுவதும் எனக்கு எதிராக சேறுபூசும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

அதில் ஒரு பகுதியாகவே இது அமைந்துள்ளது எனக் கூறவேண்டும். பொய் பிரசாரங்களை நம்ப வேண்டாம் என பொது மக்களிடம் கேட்டுக்கொள்கிறேன் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.

mahinda-palace-01

Share.
Leave A Reply

Exit mobile version