உலகக் கோப்பைப் போட்டிகளின் ஏ-பிரிவில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி இலங்கை அணியை 64 ஓட்டங்களால் வென்றுள்ளது.
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 376 ஓட்டங்களை குவித்திருந்தது.
பதிலுக்கு இலங்கை அணி 46.2 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 312 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது.
ஆஸ்திரேலிய அணியின் கிளென் மேக்ஸ்வெல் 53 பந்துகளில் 102 ஓட்டங்களை குவித்தார். ஸ்டீவன் ஸ்மித் 88 பந்துகளில் 72 ஓட்டங்களை குவித்தார்.
இலங்கை அணியில் குமார் சங்கக்கார 107 பந்துகளில் 104 ஓட்டங்களை குவித்தார். இம்முறை உலகக் கோப்பை போட்டிகளில் சங்கக்கார அடித்துள்ள மூன்றாவது சதம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
திலகரட்ண டில்ஷான் 62 ஓட்டங்களையும் தினேஷ் சந்திமால் 52 ஓட்டங்களையும் குவித்தனர்.
சங்கக்கார, டில்ஷான் உள்ளிட்ட மூன்று பேரின் விக்கெட்டுக்களும் ஆஸ்திரேலியாவின் ஜேம்ஸ் ஃபால்க்னரின் பந்துவீச்சில் வீழ்த்தப்பட்டன.
ஆஸ்திரேலிய அணியின் இரண்டு விக்கெட்டுக்களை லசித் மாலிங்க வீழ்த்தினார். கிளென் மேக்ஸ்வெல் திஸர பெரேராவின் பந்துவீச்சில் மாலிங்கவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.
இம்முறை உலகக் கோப்பை போட்டியில், இதுவரையான புள்ளிகளின் அடிப்படையில் ஏ-பிரிவில் நியுசிலாந்து 10 புள்ளிகளுடன் தாண்டி தொடர்ந்தும் முன்னிலையில் உள்ளது. இரண்டாவது இடத்தில் ஆஸ்திரேலியாவும் இலங்கை
மூன்றாவது இடத்திலும் உள்ளன.
பி-பிரிவில் இந்திய அணி 8 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து ஆகிய அணிகள் தலா 6 புள்ளிகளுடன் அடுத்த அடுத்த நிலைகளில் உள்ளன.
இன்று நடந்த இன்னொரு ஏ-பிரிவு ஆட்டத்தில் நியுசிலாந்து அணி ஆப்கானிஸ்தான் அணியை 6 விக்கெட்டுக்களால் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஒருநாள் போட்டிகளில் 14 ஆயிரம் ரன்களை எட்டினார் சங்கக்கார
சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் 14 ஆயிரம் ரன்களைக் கடந்த உலகின் இரண்டாவது வீரர் என்ற பெருமையை இலங்கையின் நட்சத்திர வீரர் குமார சங்கக்கார பெற்றுள்ளார்.
சங்கக்கார
ஒரு நாள் போட்டிகளில் 14 ரன்களைக் கடந்த உலகின் ஒரே வீரராக இருந்துவந்தவர் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் மட்டுமே.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஞாயிறன்று நடந்த உலகக் கோப்பை ஆட்டத்தில் 39 ரன்களை எடுத்த நிலையில் சங்கக்காரவும் அந்த மைல்கல்லை எட்டினார்.
402 ஆட்டங்களில் அவர் 14 ஆயிரம் ரன்களை எட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆட்டத்தில் தனது 24ஆவது ஒரு நாள் சதத்தையும் சங்கக்கார அடித்துள்ளார்.
வங்கதேசத்துக்கு எதிராக 73 பந்துகளில் ஒரு சதம் இங்கிலாந்துக்கு எதிராக 70 பந்துகளில் ஒரு சதம் என இந்த உலகக் கோப்பையில் ஏற்கனவே இரண்டு சதம் அடித்திருந்த சங்கக்கார இந்த ஆட்டத்தில் அடித்தது இப்போட்டியின் மூன்றாவது சதமென்பதும் குறிப்பிடத்தக்கது.
வரும் ஆகஸ்டில் இலங்கை அணி இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டு விளையாடும் டெஸ்ட் தொடரோடு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வுபெறப்போவதாக சங்கக்கார அறிவித்துள்ளார்.
இந்த உலகக் கோப்பையோடு சர்வதேச ஒருநாள் போட்டிகளிலிருந்து தான் ஓய்வுபெறுவதாக சங்கக்கார ஏற்கனவே அறிவித்திருந்தார்.
சென்ற ஆண்டு இருபது ஓவர் போட்டி உலகக் கோப்பையை இலங்கை வென்றதிலிருந்து அவற்றிலிருந்தும் சங்கக்கார ஓய்வுபெற்றிருந்தார்.