மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் கொலை செய்யப்பட்ட இந்திய பெண் பொறியாளர் பிரபா, தனது கணவரிடம் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தபோது கடைசியாக ‘என்னை கத்தியால் குத்திவிட்டான் டார்லிங்’ என தெரித்துள்ளார்.

பெங்களூருவை சேர்ந்த அருண் குமார்- பிரபா (39) தம்பதியருக்கு 3 வயதில் ஒரு குழந்தை உள்ளது. ஆஸ்திரேலிய நாட்டில் சிட்னி நகருக்கு அருகேயுள்ள வெஸ்ட்மெட் என்ற இடத்தில் தங்கி இருந்து, சிட்னியில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பொறியாளராக வேலை பார்த்து வந்தார் பிரபா.

வழக்கம் போல நேற்று முன்தினம் இரவு, வேலை முடிந்து வெஸ்ட் மெட்டில் உள்ள வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தார் பிரபா.

வழியில் உள்ள ஒரு பூங்காவின் வழியாக, அதுவும் வீட்டுக்கு 300 மீட்டர் அருகே, அவர் வந்து கொண்டிருந்தபோது யாரோ மர்ம ஆசாமி அவரை கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு தப்பினார்.

கத்திக்குத்து சம்பவம் நடைபெற்ற போது தனது கணவரிடம் செல்போனில் பேசிக் கொண்டிருந்துள்ளார். சரிந்து விழுந்த நிலையில், தனது கணவரிடம் ‘என்னை கத்தியால் குத்திவிட்டான், டார்லிங்’ என்று செல்போனில் தகவல் சொல்லி இருக்கிறார்.

அடுத்த சில வினாடிகளில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த பிரபாவை, அவரை போன்றே வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்த தோழி ஒருவர், பிரபா கத்தியால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக பிரபா மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டார். ஆனால் அவரின் உடலில் இருந்து அதிகான ரத்தம் வெளியேறிவிட்டதால், அவரை மருத்துவர்கள் காப்பாற்ற முடியாமல் சென்றுவிட்டது.

சம்பவம் நடந்த பூங்கா பகுதி ஆபத்தானது என்பதை பிரபாவுக்கு அவரது தோழி ஏற்கனவே கூறி இருக்கிறார் என்று தெரியவந்துள்ளது.

பிரபா படுகொலை குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர். வழிப்பறி கொள்ளை முயற்சியில் இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

Share.
Leave A Reply

Exit mobile version