இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை இலங்கை வருகின்றார்.
இலங்கையின் மிக நெருங்கிய அயல் நாடான இந்தியாவின் பிரதமர் ஒருவர் 28 வருடங்களுக்கு பின்னர் உத்தியோகபூர்வ அரச விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வருகின்றமை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விடயமாக கருதப்படுகின்றது.
இந்திய பிரதமரின் இலங்கை விஜயத்தின்போது பல்வேறு முக்கியமான விடயங்கள் இடம்பெறவுள்ளதுடன் பல உடன்படிக்கைகளும் இரண்டு நாடுகளுக்கு இடையில் கைச்சாத்திடப்படவுள்ளன.
மேலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்ரமசிங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதிகள் எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி. சில்வா அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதிகள் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார்.
இலங்கை வர்த்தக சம்மேளனம் கொழும்பில் ஏற்பாடு செய்துள்ள வர்த்தக மாநாட்டிலும் இந்திய பிரதமர் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளார்.
அத்துடன் நரேந்திர மோடி யாழ்ப்பாணம் தலைமன்னார் மற்றும் அனுராதபுரம் ஆகிய பிரதேசங்களுக்கு விஜயம் செய்யவுள்ளார். அத்துடன் பாராளுமன்றத்திலும் இந்திய பிரதமர் உரையாற்றவுள்ளார்.
இலங்கையின் அரசியல் தலைவர்களுடனான இருதரப்பு சந்திப்புக்களின்போது நல்லிணக்க செயற்பாடுகள் அரசியல் தீர்வு விடயம் இருதரப்பு வர்ததக பொருளாதார உறவுகள் முதலீடுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
வருகை
வௌ்ளிக்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் இந்திய பிரதமர் மோடி கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைவார். அங்கு அவருக்கு மரியாதையின் நிமித்தமான வரவேற்பு அளிக்கப்படும்.
அத்துடன் முப்படையினரின் அணிவகுப்பு மரியாதையும் அவருக்கு அளிக்கப்படும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான குழுவினர் இந்திய பிரதமரை விமான நிலையத்தில் வரவேற்கவுள்ளனர்.
மைததிரியுடன் சந்திப்பு
அதன்பின்னர் கொழும்பில் இந்திய பிரதமர் மோடி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார். இந்த இருதரப்பு சந்திப்புக்களின்போது பல்வேறு விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும்.
முக்கியமாக இரண்டு நாடுகளுக்கு இடையலான உறவை வலுப்படுத்துல் வர்த்தக பொருளாதார உறவை மேம்படுத்தல் உள்ளிட்ட பலவேறு விடயங்கள் குறித்து பேசப்படும்.
அத்துடன் தேசிய பிரச்சினைக்கான இனப்பிரச்சினை தீர்வு விவகாரம் நல்லிணக்க செயற்பாடுகள் என்பன குறித்து கலந்துரையாடப்படும்.
இதன்பின்னர் சில உடன்படிக்கைகளும் இலங்கை இந்திய நாடுகளுக்கு இடையில் கைச்சாத்திடப்படும். தொடர்ந்து ஜனாதிபதியும் இந்தியப் பிரதமரும் ஊடகவியலாளர்களிடம் அறிக்கைகளை வெளியிடுவார்கள்.
ரணிலுடன் சந்திப்பு
அதனையடுத்து மகாபோதி சங்கத்துக்கு இந்திய பிரதமர் விஜயம் செய்வார். அதன்பின்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்திய பிரமருக்கு மதிய உணவு விருந்து அளிப்பார்.
மதிய உணவு விருந்தின் பின்னர் இலங்கை பிரதமருடன் இந்திய பிரதமர் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்துவார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடனான சந்திப்பின்போது மீனவர் விவகாரம் மற்றும் தேசிய பிரச்சினைக்கான தீர்வு விவகாரம் என்பன குறித்து விரிவான பேச்சுவார்த்தைகள் நடத்தப்படவுள்ளன.
பாராளுன்ற உரை
அதனையடுத்து மாலை 3.15 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி இலங்கை பாராளுமன்றத்தில் விசேட உரையாற்றுவார். இது மிக முக்கியமான நிகழ்வென்று குறிப்பிட முடியும்.
சில நாடுகளின் தலைவர்கள் கடந்த காலங்களில் இவ்வாறு பாராளுமன்றத்தில் உரையாற்றியுள்ளனர். ஆனால் இந்திய பிரதமர் இலங்கை பாராளுமன்ற உரையானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும்.
இதற்காக பாராளுமன்றம் வௌ்ளிககிழமை விசேடமாக கூடவுள்ளது. அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்பகளும் குறித்த விசேட அமர்வுககு வருகைதருமாறு அழைக்கப்பட்டுள்ளனர்.
எம்.பி. க்களுடன் சந்திப்பு
பாராளுமன்ற உரைக்குப் பின்னர் இந்திய பிரதமர் மோடி, பாராளுமன்ற உறுப்பி்னர்களுடன் குறுகிய நேர சந்திப்பினை மேற்கொள்வார். பாராளுமன்றத்தில் இந்திய பிரதமருக்கு தேநீர் விருந்துபசாரம் அளிக்கப்படவுள்ளது.
அஞ்சலி
அதன்பின்னர் இந்திய அமைதிப்படை நினைவிடத்துக்குச் செல்வார்.அங்கு அவர் உயிர்நீத்த இந்திய இராணுத்தினருக்கு அஞ்சலி செலுத்துவார்.
வர்த்தக சம்மேளன சந்திப்பு
வௌ்ளிக்கிழமை மாலை இலங்கை வர்த்தக சம்மேளனத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள வர்த்தக மாநாட்டில் பிரதமர்மோடி கலந்துகொள்வார்.
கடந்த சில வருடங்களாக இந்தியாவினதும் இலங்கையினதும் வர்த்தக உறவு மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது. வர்த்தக மாநாட்டில் இந்திய பிரதமர் உரையாற்றுவார்.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் எவ்வாறு வர்த்தக பொருளாதார முதலீட்டு உதவிகளை மேம்படுத்துவது என்பது தொடர்பாக இதன்போது கலந்துரையாடல்கள் இடம்பெறும்.
கூட்டமைப்பு சந்திப்பு
வர்த்தக சந்திப்பையடுத்து அரசியல் கட்சிகளுடனான சந்திப்பு நடைபெறும். அந்த சந்திப்புகளில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளுடனான சந்திப்பு மிக முக்கியமானதாகும்.
அதன்போது தமிழ்த் தேசியக் கூடடமைப்பினர் பல்வேறு விடயங்களை இந்திய பிரதமரின் கவனத்துக்கு கொண்டுவரவுள்ளனர்.
காணி விவகாரம் அரசியல் தீர்வு விடயம் தடுத்து வைக்கபபட்டுள்ளவர்களின் விடுதலை காணாமல் போனோர் பிரச்சினை மற்றும் அரசிய.லமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் என்பன குறித்து கூட்டமைப்பின் தலைவர் சம்மபந்தன் இந்திய பிரதமருக்கு எடுத்துரைப்பார்.
நிமால் சிறிபாலவுடன் சந்திப்பு
கூட்டமைப்பினருட்னான சந்திப்பையடுத்து எதிர்க்கட்சித் தலைவர் நிமல் ஸ்ரீபாலடி சில்வாவை இந்தியப்பிரதமர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார். இதன்போது அரசியல் ரீதியான பல விடயங்கள் குறித்து ஆராயப்படவுள்ளது.
குறிப்பாக புதிய அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்துக்கு எதிர்க்கட்சி ஆதரவு வழங்குவது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி. சில்வா இந்திய பிரதமருக்கு விளக்கமளிப்பார்.
சந்திரிகாவுடன் சந்திப்பு
அதன் பின்னர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவுடன் கொழும்பில் இந்திய பிரதமர் பேச்சுவார்த்தை நடத்துவார். இதன்போது பல விடயங்கள் குறித்து பேச்சு நடத்தப்படும். எனினும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்திப்பாரா இல்லையா என்பது குறித்து இதுவரை உறுதிபடுத்தப்படவில்லை்.
வௌ்ளிக்கிழமை தினத்தில் இறுதி நிகழ்வாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இரவு விருந்துபசாரம் நடைபெறும். அதில் பிரதமர் மோடி கலந்துகொள்வார். அத்துடன் முதல்நாள் நிகழ்வுகள் முடிவடையும்.
அனுராதபுரம்
இரண்டாம் நாள் சனிக்கிழமை தினத்தன்று நிகழ்வுகள் முழுமையாக கொழுமபுக்கு வெளியில் நடைபெறும். முதலாவதாக மோடி அனுராதபுரத்துக்கு விஜயம் செய்வார். அங்கு சிறிமகா போதியில் வழிபாடுகளை மேற்கொள்வார். மகிந்த மற்றும் சங்கமித்தை ஆகியோர் வருகை தந்த புனித இடமாக அனுராதபுரம் காணப்படுகின்றது.
தலைமன்னார் விஜயம்
அதன் பின்னர் இந்திய பிரதமர் மோடி தலைமன்னாருக்கு விஜயம் செய்வார். தலைமன்னார் என்பது வரலாற்று ரீதியாகவே இந்தியாவுடன் தொடர்புபட்ட மிக அருகில் உள்ள பிரதேசமாகும்.
இந்திய பிரதமர் மோடி தலைமன்னார் ரயில் நிலையத்தை திறந்து வைப்பார். தலைமன்னார் மடுரோட் ரயில் சேவையையும் இந்திய பிரதமர் திறந்து வைப்பார். இந்த ரயில் பாதையை இந்திய நிறுவனம் நிர்மாணித்தமை விசேட அம்சமாகும்.
யாழ் விஜயம்
அந்த நிகழ்வுகளின் பின்னர் தலைமன்னாரிலிருந்து இந்திய பிரதமர் மோடி யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்வார். யாழ்ப்பாணத்தில் இரண்டு முககிய நிகழ்வுகள் உள்ளன. முதலாவதாக யாழ்ப்பாண கலாசார நிலையததை நிர்மாணிபப்பதற்கான அடிக்கல் இந்திய பிரதமரினால் நாட்டப்படும்.
விக்கி சந்திப்பு
அதன் பின்னர் வடக்கு ஆளுநரினால் வழங்கப்படும் பகலுணவு விருந்துபசாரத்தில் கலந்துகொள்வார். அதன் பின்னர் யாழ்ப்பாணத்தில் இந்திய வீட்டுத்திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள சில வீடுகளை பயனாளிகளுக்கு இந்திய பிரதமர் கையளிப்பார். இடம்பெயர்ந்த மக்களுக்கு இந்த வீடுகள் கையளிக்கப்படும்.
இதுவும் முக்கியத்துவம் வாய்ந்த விடயமாகும். யாழ்ப்பாணத்தில் இந்திய பிரதமர் வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரரையும் சந்தித்து பேச்சு நடத்துவார்.
இந்திய பிரதமருடனான சந்திப்பின்போது அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது இநதியாவின் தார்மீக பொறுப்பு என்றும் அதனை இந்திய பிரதமரிடம் வலியுறுத்தவுள்ளதாகவும் வடக்கு முதல்வர் விக்கினேஸ்வரன் தெரிவித்திருந்தார். அந்த நிகழ்வின் பின்னர் இந்திய பிரதமர் கொழும்பு திரும்புவார்.
மு.கா. சந்திப்பு
கொழும்பில் அவர் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஆகியவற்றின் பி்ரதிநிதிகளை சந்தித்து பேச்சு நடத்துவார்.
இ.தொ.கா சந்திப்பு
அத்துடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதிகள் மற்றும் இந்திய வம்சாவளி தலைவர்கள் உள்ளிட்ட பலரை அவர் சந்தித்து பேச்சு நடத்துவார்.
அதன் பின்னர் சனிக்கிழமை இரவு இலங்கைக்கான இந்திய தூதுவரின் இரவு விருந்துபசாரத்தில் அவர் பங்கேற்பார். அதன் பின்னர் இந்திய பிரதமர் புதுடில்லி நோக்கி பயணிப்பார்.
இந்திய பிரதமரின் இலங்கை பாராளுமன்ற உரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும் என்று அது வரலாற்று ரீதியான நிகழ்வாகும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
1987 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இந்திய பிரதமர் ஒருவர் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வரவுள்ளமை இதுவே முதல் தடவையாகும். இதற்கு முன்னர் 2008 ஆம் ஆண்டு முன்னாள் இநதிய பிரதமர் மன்மோகன் சிங் இலங்கையில் நடைபெற்ற சார்க் மாநாட்டில் கலந்துகொள்ள வந்திருந்தாலும் அரச விஜயமாக வரவில்லை.
மோடியின் பதிவு
இதேவேளை இலங்கை விஜயம் தொடர்பில் தனது பேஸ்புக் தளத்தில் இந்திய பிரதமர் மோடி கீழ் கண்டவாறு பதிவு செய்துள்ளார்.
“” 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் நான் இலங்கைக்கு விஜயம் செய்கின்றேன். மிகவும் மகிழ்ச்சியுடனும் நம்பிக்கையுடனும் நான் இலங்கைக்கு விஜயம் செய்கின்றேன்.
எனது விஜயத்தின் மூலம் இலங்கையுடனான பலவமான உறவு மேலும் வலுவடையும் என்று எதிர்பார்ககிக்றேன். அயல்நாடுகளுடனான இந்தியாவின் உறவில் இலங்கை முக்கிய இடத்தை வகிக்கின்றது.
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்திய விஜயத்தின் பின்னர் எனது இலங்கை விஜயம் அமைந்துள்ளது. மீண்டும் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்கவுள்ளமை தொடர்பில் நான் மகிழ்ச்சியடைகின்றேன்.
பல காலமாக இலங்கையுடனான எமது உறவு நீ்டிக்கின்றது. நாம் வரலாறு சம்பிரதாயங்கள் மற்றும விழுமியங்களை பகிர்கின்றோம். இரண்டு நாடுகளும் கிரிக்கட்டை நேசிக்கின்றன.
இலங்கையின் பாராளுமன்றத்தில் நான் உரையாற்றவுள்ளேன். மகாபோதிக்கும் விஜயம் செய்யவுள்ளேன். யாழ்ப்பாணத்துக்கும் விஜயம் செய்யவுள்ளேன்.
இந்தியாவின் பிரதமர் ஒருவர் முதற் தடவையாக யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்கின்றமை முக்கிய விடயமாகும். யாழ்ப்பாணத்தில் யாழ்ப்பாண கலாசார நிலையத்தை நிர்மாணிப்பதற்காக அடிக்கல் நாட்டும் வைபவம் இடம்பெறும்.
இந்திய வீட்டுத் திட்டத்தையும் நான் பார்வையிடவுள்ளேன். இலங்கையின் அபிவிருத்தியில் உதவியை செய்வதற்கு இந்தியா அர்ப்பணி்ப்புடன் இருக்கின்றது.
இலங்கை மற்றும் இந்திய உறவில் பொன்னான அத்தியாயத்தை நாங்கள் உருவாக்கப்போகின்றோம்”” இவ்வாறு இந்திய பிரதமர் பதிவு செய்துள்ளார்.
இதேவேளை சீனாவின் இலங்கை மீதான ஆதிக்கத்தை குறைக்கும் நோக்கில் பல உதவிகளையும் இந்தியா இலங்கைக்கு மோடியின் விஜயத்தின்போ து வழங்கவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சீனாவின் ஆதிக்கத்தை குறைக்க…
இந்திய பிரதமர் நரேந்திரமோடியின் இலங்கை விஜயத்தின் போது உட்கட்டமைப்பு மற்றும் அபிவிருத்தி திட்டங்களுக்கான இலங்கைக்கு இந்தியா கடனுதவிகளை வழங்கவுள்ளது என இந்தியாவின் த எகனமிக்ஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த விஜயத்தின் போது படையினருக்கான பயிற்சிகளை வழங்குவது குறித்தும் இந்தியா உறுதிமொழிகளை வழங்கவுள்ளது. சீனாவின் ஆதிக்கத்தை குறைப்பதற்காகவே இந்தியா இதனை மேற்கொள்கின்றது என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.