தனது சந்தேகப் பார்வைகளினாலும், வார்த்தைகளினாலும் அவள் மனதைக் காயப்படுத்த ஆரம்பித்தான். அதுமட்டுமின்றி, பல சமயங்களில் வார்த்தைகள் முற்றி மலித்தின் அடி, உதைகள் மல்காந்தியின் உடலை பதம் பார்க்க ஆரம்பித்தன.
மல்காந்திக்கும் பிள்ளைகளுக்கும் மலித்துடன் வாழும் நாட்கள் நரக வேதனையாக மாறத் தொடங்கின. இதனால் தான் மலித்துடன் வாழ்ந்த வாழ்க்கைக்கு சட்டரீதியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று நினைத்தாள் மல்காந்தி
எனது பிள்ளைகள் இருவரையும் கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள். அவர்கள் இருவருக்கும் எதிர்காலத்தில் எவ்வித அநீதிகளும் ஏற்படாத வகையில் எனது சொத்துக்கள் அனைத்தும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.
“ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு” என்பது எனக்குத் தான் பொருத்தமானதாகவிருக்கும். அதனால் என் மனைவியை நானே கொலை செய்துவிட்டேன்.
ஆனால் இன்று என் மனைவியின் பிரிவைத் தாங்கிக்கொள்ளும் அளவுக்கு எனக்கு உடம்பில் தெம்பில்லை. எனவே என் மனைவி இருக்கும் இடத்துக்கே நானும் போக முடிவெடுத்துவிட்டேன்.” இவ்வாறு அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
கடந்த முதலாம் திகதி தனது பிள்ளைகளின் கண்ணெதிரிலேயே தனது மனைவியான அநுஷா மல்காந்தியைக் கொலை செய்த கொலையாளி தற்கொலை செய்து கொள்வதற்கு முன் எழுதிய கடிதம் தான் இது.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் ஆராய்வோமானால், கொலை செய்யப்பட்ட பெண் மல்காந்தியும்(35) தற்கொலை செய்துகொண்ட மலித்தும் சுமார் 10 வருடங்களுக்கு முன் திருமண பந்தத்தில் இணைந்தவர்கள்.
ஆரம்பத்தில் இருவருக்கிடையிலும் அந்நியோன்னியமான உறவுகள் காணப்பட்ட போதும், இரு பிள்ளைகள் என்று ஆன பின்பு மலித்தின் சுயரூபம் மெல்ல மெல்ல வெளித்தெரிய ஆரம்பித்தது.
பல நாள் “தொழிலுக்காக வெளியில் தங்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டு வீட்டுக்கு வருவதைத் தவிர்த்து விடுவான்.
எனவே மல்காந்திக்கு அவன் செய்த துரோகத்தை நினைக்கும் போது மேலும் அவனுடன் இல்லற வாழ்வில் இணைந்திருக்க விருப்பமிருக்கவில்லை.
எனினும் இரு பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு தனது வேதனைகள் அனைத்தையும் மனதிற்குள்ளேயே புதைத்துக்கொண்டு பிள்ளைகளுக்காக போலியான ஒரு வாழ்க்கை வாழ வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டாள்.
ஆயினும், மலித்தின் கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே சென்றன. தன்னுடைய பிழையை மறைக்க மல்காந்தியின் மீது பழியைப் போட்டான்.
தினம் தினம் தனது சந்தேகப் பார்வைகளினாலும், வார்த்தைகளினாலும் அவள் மனதைக் காயப்படுத்த ஆரம்பித்தான். அதுமட்டுமின்றி, பல சமயங்களில் வார்த்தைகள் முற்றி மலித்தின் அடி, உதைகள் மல்காந்தியின் உடலைப் பதம் பார்க்க ஆரம்பித்தன.
மல்காந்திக்கும் பிள்ளைகளுக்கும் மலித்துடன் வாழும் நாட்கள் நரக வேதனையாக மாறத் தொடங்கின. இதனால் தான் மலித்துடன் வாழ்ந்த வாழ்க்கைக்கு சட்டரீதியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று நினைத்தாள் மல்காந்தி.
அதன்படி மல்காந்தி மத்துகம கொடெல்லவத்த வெலிமாநான பிரதேசத்திலுள்ள தனது தாயின் வீட்டுக்கு பிள்ளைகள் இருவரையும் அழைத்துக் கொண்டு வந்து சேர்ந்தாள்.
அதன் பின்னர் தனது சட்டத்தரணியின் ஊடாக, சட்டரீதியாக விவாகரத்து பெறுவதற்கான கடிதத்தை மலித்துக்கு அனுப்பினாள்.
எனவே மல்காந்தி அனுப்பிய விவாகரத்து கடிதம் மலித்தின் கைகளுக்கு கிடைத்ததும் மல்காந்தியின் மீது இருந்த கோபம் இன்னும் பல மடங்குகளாக அவனுக்கு அதிகரித்தது. எனவே
தனது மனைவி கூறியது போல் விவாகரத்து கடிதத்தை அனுப்பி விட்டாளே என்ற ஆத்திரத்தில் அவளைப் பழிதீர்க்க வேண்டும் என்று துடித்தான்.
அதன்படி கடந்த முதலாம் திகதி பிற்பகல் வேளையில் கையில், கத்தியையும் எடுத்துக் கொண்டு மல்காந்தியின் தாயாரின் வீட்டை நோக்கிச் சென்றான் மலித்.
அந்த சமயத்தில் மல்காந்தியின் மச்சாள் முறையானவரும், மல்காந்தியின் மூத்த மகனும் மட்டுமே வீட்டிலிருந்தார்கள்.
அதீத கோபத்துடன் மலித் ஆக்கிரோஷமாக கிணற்றடியை நோக்கிச் சென்றான். அதன் பின் கிணற்றடியில் குளித்துக் கொண்டிருந்த இளைய மகனை தள்ளி விட்டு, மல்காந்தியின் கழுத்தைப் பிடித்து இழுத்து கையோடு கொண்டு வந்திருந்த கத்தியால் விடாமல் 8 தடவைகளுக்கு மேல் கழுத்துப் பகுதியில் குத்தினான்.
மல்காந்தியோ அடியற்ற மரம் போல துடிதுடித்து சாய்ந்தாள். இரத்தவெள்ளம் எங்கும் பீறிட்டது. வீட்டிலிருந்த மல்காந்தியின் மச்சாள் மல்காந்தியை மலித் கத்தியால் குத்துவதைப் பார்த்து அலறிக்கொண்டே அவ்விடத்தை விட்டு ஒடிச் சென்று ஊராரிடம் மேற்படி சம்பவம் தொடர்பாக அறிவித்தாள்.
எனினும் அதில் எந்தப் பயனுமிருக்கவில்லை. மலித் கொலைக்குப் பயன்படுத்திய கத்தியை கிணற்று நீரில் கழுவி எடுத்துக் கொண்டு முச்சக்கர வண்டியில் தப்பியோடி விட்டான்.
அதன் பின் கத்திக் குத்துக்கு இலக்கான மல்காந்தியை அயலவர்கள் அனைவரும் இணைந்து மத்துகம வைத்தியசாலையில் அனுமதிக்க முயற்சித்த போதும் மல்காந்தி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபகரமாக உயிரிழந்தாள்.
இந்தப் படுபாதகச் செயலில் ஈடுபட்ட மலித்தை கைதுசெய்யும்முகமாக மத்துகம பொலிஸ் பிரிவின் குற்றப்புலனாய்வு பிரிவினைச் சேர்ந்த குழுவினர் அவனுடைய சொந்த ஊரான கிரிந்திவெல பிரதேசத்துக்கு சென்ற போதும் கொலையாளியான மலித் அவ்விடத்தை விட்டு தலைமறைவாகியிருந்தான்.
இந்த நிலையிலேயே கடந்த 3ஆம் திகதி மாலை 5 மணியளவில் ஓடும் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டான். அதுமட்டுமின்றி கொலையாளியின் காற்சட்டைப் பையை சோதனையிட்ட போது அதில் கடிதமொன்றும் கிடைக்கப்பெற்றுள்ளது.
எனவே அந்தக் கடிதத்திலேயே தனது மனைவியைப் படுகொலை செய்தமையையும் அவளது பிரிவால் தான் தற்கொலை செய்யப் போவதையும் குறித்து வைத்திருந்தான்.
மலித்தின் ஆத்திரம் இரு உயிர்கள் பலியாக காரணமானது மட்டுமல்ல, அந்த அப்பாவி பிள்ளைகளையும் நிர்க்கதியாக்கிவிட்டது.
வெறுமனே புரிந்துணர்வற்ற தன்மையும் சந்தேகங்களும் ஆத்திரத்தில் எடுக்கும் முடிவுகளுமே இன்று குடும்பங்களை சின்னாபின்னமாக்கி குழந்தைகளை அநாதைகளாக்கக் காரணமாகி விடுகின்றன.
அந்தவகையில் குடும்பம் என்று வந்த பின்னராவது தங்கள் ஆத்திரத்தைக் கட்டுப்படுத்த கணவன், மனைவி இருவருமே பழகிக் கொள்ள வேண்டும். இல்லையேல் துயரங்களே தொடர்கதையாக இருக்கும்.