இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்புக் கருதியே, சிறிலங்காவில் அவரது பயணங்களுக்கு இந்திய விமானப்படையின் உலங்குவானுர்திகளும், இராட்சத விமானங்களும் பயன்படுத்தப்பட்டதாக இந்திய அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இந்தியப் பிரதமரின் சிறிலங்கா பயணத்தின் போது, அவரதும் அவரது பரிவாரங்களினதும் பயணங்களுக்கு இந்திய விமானப்படையின் மூன்று எம்.ஐ.8 உலங்கு வானூர்திகளே பயன்படுத்தப்பட்டன.

modi-plane-2பாதுகாப்புக் காரணங்களுக்காகவே, இந்திய விமானங்களைப் பயன்படுத்தவும், அவரது பாதுகாப்புக்கு இந்திய பாதுகாப்பு அதிகாரிகளைப் பயன்படுத்தவும் முடிவெடுக்கப்பட்டது.

மோடியின் பயணத்தின் போது பல்வேறு இடங்களிலும் இந்தியப் பாதுகாப்பு அதிகாரிகளே பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

மோடியின் பரிவாரங்களில் அடங்கியிருந்த இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல், இந்த பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கவனித்திருந்தார்.

அவர் மோடியுடன் நிழல் போல எல்லா இடங்களுக்கும் சென்றதுடன், பேச்சுக்களிலும் பங்கேற்றிருந்தார்.

கொழும்பில் இருந்து அனுராதபுரவுக்கும், அங்கிருந்து தலைமன்னாருக்கும், அங்கிருந்து யாழ்ப்பாணத்துக்கும், மோடி உலங்குவானூர்திகளில் பயணத்தை மேற்கொண்டிருந்தார்.

எனினும், யாழ்ப்பாணத்தில் நேற்று மாலை தனது பயணத்தை முடித்துக் கொண்ட அவர், பலாலிக்குச் சென்று, அங்கிருந்து இந்திய விமானப்படையின் சி-130 இராட்சத போக்குவரத்து விமானத்தில் கொழும்பு திரும்பினார்.

“பலாலி ஓடுபாதையில் இராட்சதப் பறவை” என்று இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சையத் அக்பருதீன் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version