முன்னைய மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கத்தில் பாதுகாப்புச் செயலாளராக இருந்த கோத்தாபய ராஜபக்ஷ கைது செய்யப்படுவாரா? என்ற கேள்வியே இப்போது சூடான விவகாரமாக மாறியிருக்கிறது.
‘அவன்ற் கார்ட்‘ (Avant Garde Security Services (Pvt) Ltd) என்ற கடல் பாதுகாப்பு நிறுவனத்தை சட்டவிரோதமாக இயக்கிய குற்றச்சாட்டில் அவரைக் கைது செய்வது குறித்து அரசாங்கம் ஆலோசித்து வருகிறது.
ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர், மகாநுவர என்ற மிதக்கும் ஆயுதக் களஞ்சியம் காலி துறைமுகத்தில் வைத்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.
அது அவன்ற் கார்ட் நிறுவனத்தினால், சர்வதேச கடற்பரப்பில், செல்லும் கப்பல்களுக்கு பாதுகாப்பு மற்றும் ஆயுதங்களை விநியோகிக்கப் பயன்படுத்தப்படும் மூன்று கப்பல்களில் ஒன்றாகும். ஏனைய இரு கப்பல்களும் ஓமான், வளைகுடா மற்றும் செங்கடல் பகுதிகளில் தரித்து நிற்கின்றன.
மகாநுவர கப்பலில் இருந்த ஆயுதங்களை ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர், ஆயுதப் புரட்சிக்குப் பயன்படுத்த முனைந்ததாகவே ஆரம்பத்தில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
எனினும், பின்னர் சட்டவிரோதமாக கடல் பாதுகாப்பு நிறுவனத்தை இயக்கியதாகவே விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
இந்த வழக்கு நடந்து வரும் நிலையில், பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ஷ, அவன்ற் கார்ட் நிறுவனத்தின் தலைவரான மேஜர் நிசங்க சேனாதிபதி, மேஜர் ஜெனரல் கே..பி.எகொடவெல, அட்மிரல் சோமதிலக திஸாநாயக்க போன்றவர்களின் கடவுச்சீட்டுகள் முடக்கப்பட்டுள்ளன.
இந்த அவன்ற் கார்ட் விவகாரத்தில், தான் சட்டத்தின் படியே எல்லாவற்றையும் செய்ததாக கோத்தாபய ராஜபக் ஷ கூறியிருக்கிறார்.
அதேவேளை, கடந்த வாரம் நடந்த தேசிய நிறைவேற்று சபைக் கூட்டத்தில், கோத்தாபய ராஜபக் ஷவை கைது செய்து விசாரிக்காமல் இருப்பது குறித்து காரசாரமாக விவாதிக்கப்பட்டுள்ளது.
கோத்தாபய ராஜபக் ஷ மீது விசாரணை அதிகாரிகள் பரிவுடன் நடந்து கொள்வதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் அவரிடம் வீட்டில் சென்றே வாக்குமூலம் பதிவு செய்திருந்தனர்.
அவரை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைத்து விசாரிக்காதமை குறித்து முன்னைய பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோகணவிடம் கேள்வி எழுப்பிய போது, பொலிஸாரின் செயலை அவர் நியாயப்படுத்திக் கருத்து வெளியிட்டிருந்தார்.
கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகளுக்கு மேலாக, அரசாங்கத்தில் தனியான செல்வாக்குப் பெற்றிருந்த- அதுவும் பாதுகாப்புத்துறையில் செல்வாக்குச் செலுத்திய கோத்தாபய ராஜபக் ஷவுக்கு எதிராக அந்த துறையில் இருந்து நடவடிக்கை எடுப்பது ஒன்றும் அவ்வளவு இலகுவான காரியமில்லை.
இதனை தற்போதைய அரசாங்கமும் உணர்ந்திருக்கிறது. இதுதான் தேசிய நிறைவேற்றுச்சபைக் கூட்டத்தில் எதிரொலித்திருக்கிறது.
கோத்தாபய ராஜபக் ஷவைக் கைது செய்வது குறித்து, லண்டன் சென்றிருந்த ஜனாதிபதி நாடு திரும்பிய பின்னர் தேசிய நிறைவேற்றுச் சபைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்திருந்தார்.
ஆனால், அரசியலமைப்பு ரீதியாக எந்த அங்கீகாரமும் இல்லாத தேசிய நிறைவேற்றுச்சபையில், கோத்தாபய ராஜபக் ஷவைக் கைது செய்யும் முடிவு எவ்வாறு எடுக்கப்பட முடியும் என்று தேசிய சுதந்திர முன்னணி போன்ற கட்சிகள் போர்க்கொடி உயர்த்துகின்றன.
அரசியலமைப்பு அங்கீகாரம் இல்லாவிட்டாலும், தேசிய நிறைவேற்றுச்சபையே தற்போதைய அரசாங்கத்தை வழிநடத்தும் உயர் சபையாக இருக்கிறது.
ஆனாலும், தேசிய நிறைவேற்றுச்சபைக்கு தெரியாமலே இந்த அரசாங்கத்தினால் பல முடிவுகள் எடுக்கப்படுகின்றன.
இந்தநிலையில், கோத்தாபய ராஜபக் ஷவைக் கைது செய்யும் முடிவு அரசாங்கத்தின் எந்த இடத்தில் இருந்தும் எடுக்கப்படலாம். ஆனால் அதற்கு ஒன்றுக்குப் பலமுறை யோசனை செய்ய வேண்டியிருக்கும்.
கடந்த ஜனவரி 9ஆம் திகதி அதிகாலையில், அலரி மாளிகையில் ஆட்சியை மைத்திரிபால சிறிசேனவிடம் ஒப்படைக்க இணங்கிய மஹிந்த ராஜபக் ஷ, தனது சகோதரரான கோத்தாபய ராஜபக் ஷ பழிவாங்கப்படக் கூடாது என்பதை ஒரு நிபந்தனையாக ரணில் விக்கிரமசிங்கவிடம் முன்வைத்திருந்தார். அப்போது ரணில் அதனை ஏற்றுக் கொண்டிருந்தார்.
ஆனால், அவன்ற் கார்ட் விவகாரத்தில் கோத்தாபய ராஜபக் ஷவை விலக்கி விட்டு எந்த விசாரணையையும் மேற்கொள்ள முடியாது.
காரணம், அந்த நிறுவனத்தை உருவாக்கியவர் அவரே.
சட்டபூர்வமாக கடலில் பயணிக்கும் கப்பல்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக உருவாக்கப்பட்ட அவன்ற் கார்ட் நிறுவனத்தின் ஆயுதங்கள் சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டனவா, அல்லது பயன்படுத்தத் திட்டமிடப்பட்டதா? என்பதே தேவையான விசாரணை.
அந்தக் கோணத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகத் தெரியவில்லை. அதேவேளை, பாதுகாப்பு அமைச்சின் கீழ், கடற்படையின் கட்டுப்பாட்டில் இருந்த அவன்ற் கார்ட் நிறுவனத்தை ரக்ன லங்கா பாதுகாப்பு சேவை நிறுவனத்திடம் ஒப்படைக்க எடுக்கப்பட்ட முடிவு தான் மிகுந்த சர்ச்சைக்குரியது.
அவன்ற் கார்ட் (Avant Garde Security Services (Pvt) Ltd) நிறுவனத்தை இயக்கியதன் மூலம் கடற்படைக்கு கணிசமான வருவாய் கிடைத்து வந்தது.
கடற்படையின் கட்டுப்பாட்டில் இருந்த போது, இந்த நிறுவனம் மாதம் 9 மில்லியன் டொலரை வருமானமாக பெற்று வந்தது.
அவன்ற் கார்ட் தலைவரான மேஜர் நிசங்க சேனாதிபதி அளித்துள்ள தகவலின் படி தம்மால் இந்த வருமானத்தை 13 மில்லியன் டொலராக அதிகரிக்க முடிந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் 8 பில்லியன் ரூபாவை வருமானமாகப் பெற்றதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
இதில், 3 பில்லியன் ரூபா மட்டுமே, கடற்படை மற்றும் ரக்ன லங்கா பாதுகாப்பு நிறுவனத்துக்கு கிடைத்திருக்கிறது. எஞ்சிய 5 பில்லியன் ரூபாவும், அவன்ற் கார்ட்நிறுவனத்துக்கே சென்றுள்ளது.
இவ்வாறான ஒரு வருமான மூலத்தை தனியாரிடம், அதுவும் தனக்கு நெருக்கமான நிறுவனத்திடம் கோத்தாபய ராஜபக் ஷ ஒப்படைத்தது முறைகேடான ஒரு விவகாரமாகவே பார்க்கப்படுகிறது.
முழுவருமானத்தையும் கடற்படையால் பெறக் கூடிய நிலை இருந்த போதிலும், அதனை தனக்கு நெருக்கமான முன்னாள் படை அதிகாரிகளைக் கொண்ட நிறுவனத்திடம் ஒப்படைத்தது கேள்விக்குரிய விடயமே.
கடந்தவாரம், வர்த்தக விடயமாக நைஜீரியாவுக்குச் செல்ல அனுமதிக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் 3500 மில்லியன் ரூபா தமக்கு இழப்பு ஏற்படும் என்றும் அவன்ற் கார்ட்நிறுவனத்தின் தலைவர் மேஜர் நிசங்க சேனாதிபதி ஒரு மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.
அதற்கு நீதிமன்றம் அனுமதி அளிக்க மறுத்திருந்தது.
எதற்காக அவர் நைஜீரியா செல்ல முயன்றார், அங்கு 3500 மில்லியன் ரூபாவில் என்ன வர்த்தக உடன்பாடு செய்ய வேண்டியிருந்தது என்ற கேள்வி எழுப்பட்டதாக தெரியவில்லை.
தனியார் கடல் பாதுகாப்பு சேவை நிறுவனமான அவன்ற் கார்ட்3500 மில்லியன் ரூபா உடன்பாடு ஒன்றை, நைஜீரியாவில் செய்து கொள்கிறது என்றால், அதில் சந்தேகத்துக்குரிய பல விவகாரங்கள் இருக்கவே செய்கின்றன.
நைஜீரிய இராணுவம் மற்றும் கடற்படைக்கு, பாதுகாப்பு ரீதியான ஆலோசனைகளையும், வழிகாட்டல்களையும் வழங்குவதற்கு அவன்ற் கார்ட்நிறுவனம் முயன்றுள்ளதாகவே தெரியவருகிறது.
அது உலகெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிகழ்வு.
அதற்குப் பின்னர், கடந்த ஜுன் மாதம், இலங்கை பாதுகாப்பு உயர் அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்று நைஜீரியா சென்றிருந்தது.
கூட்டுப்படைகளின் தளபதி ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய தலைமையிலான அந்தக் குழுவில் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் தயா ரத்நாயக்க, அரச புலனாய்வுச் சேவையின் தலைவராக இருந்த மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண ஆகியோருடன், அவன்ற் கார்ட்நிறுவனத்தில் முக்கிய பங்காளர்களான முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் சோமதிலக திஸாநாயக்க, மேஜர் நிசங்க சேனாதிபதி ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர்.
இவர்கள், நைஜீரிய கூட்டுப்படைகளின் தளபதி எயர் சீவ் மார்ஷல் அலெக்ஸ் படே மற்றும் அரசாங்க அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுக்களின் போது, விடுதலைப் புலிகளை ஒடுக்க இலங்கைப் படையினர் கையாண்ட அனுபவங்களை நைஜீரியாவுக்கு வழங்க இணக்கம் கண்டிருந்தனர்.
அதேபோன்று பிரித்தானியாவின் கினிமினி நிறுவன அதிகாரிகள் இலங்கைப் படைகளுக்கு 1980களின் தொடக்கத்தில் பயிற்சி மற்றும் ஆலோசனைகளை வழங்கியது நினைவிருக்கலாம்.
நைஜீரியா இலங்கைப் படைகளின் ஆலோசனையை பெறுவதற்கு முடிவு செய்த போது, விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் இலங்கை அரசாங்கத்துக்கு நெருக்கடியை ஏற்படுத்துவது போல, அவர்களின் ஆலோசனையைப் பெறும் நைஜீரியாவும் ஒரு காலத்தில் நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும், என்று சர்வதேச நிபுணர்கள் எச்சரித்திருந்தனர்.
அரசாங்க மட்டத்திலான பேச்சுக்களே அப்போது நடந்திருந்தன.
இன்னொரு நாட்டுக்கு பாதுகாப்பு ஆலோசனைகளை வழங்குவது வழக்கமானதொரு விடயம் தான்.
ஆனால், அந்த ஆலோசனைச் சேவை உடன்பாடு, அரசாங்கத்திடம் இருந்து அவன்ற் கார்ட்நிறுவனத்துக்கு கைமாறியுள்ளதாக கூறப்படுகிறது.
அது தான், மேஜர் நிசங்க சேனதிபதி நைஜீரியாவில் செய்து கொள்ளவிருந்த 3500 மில்லியன் ரூபா வர்த்தக உடன்படிக்கை.
“அவன்ற் கார்ட்” நிறுவனத்தில் முன்னாள் இராணுவ, கடற்படை, மற்றும் விசேட அதிரடிப்படை அதிகாரிகள், படையினர் தான் பணியாற்றுகின்றனர்.
மேஜர் நிசங்க சேனாதிபதி கொமாண்டா படைப்பிரிவில் முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பு பிரிவில் இருந்தவர்.
அதேபோல, மேஜர் ஜெனரல் கே.பி.எகொடவெல ஆனையிறவுப் படைத்தளம் புலிகளால் கைப்பற்றப்பட்ட போது, அதற்குப் பொறுப்பாக இருந்தவர். கடைசி நேரத்தில் அங்கிருந்து படகில் தப்பிச் சென்றவர்.
முல்லைத்தீவு படைத் தளம் புலிகளால் வீழ்த்தப்பட்ட போது அதற்குப் பொறுப்பாக இருந்த (அப்போது கேணல்) மேஜர் ஜெனரல் லோரன்ஸ் பெர்னாண்டோவும், இந்த நிறுவனத்தின் ஒரு முக்கிய பங்காளர்.
இவ்வாறாக, முன்னாள் படைத்தளபதிகள், அதிகாரிகள், தமது போர் அனுபவங்களையும், வெளிநாடுகளுக்கு விற்கத் தொடங்கியுள்ளனர்.
இது அரசாங்கத்தின் மூலமே செய்திருக்க வேண்டிய உடன்பாடு. ஆனால், அதை அவன்ற் கார்ட்தனது கைக்குள் போட்டுக் கொள்ள முயன்றதாக கூறப்படுகிறது.
இதுபோன்ற விவகாரங்கள் வெளிச்சத்துக்கு வரும் போது, அரசாங்கத்தின் வருமான மூலங்களை தனியாருக்கு கொடுத்து, வருமான இழப்பை ஏற்படுத்திய குற்றச்சாட்டு கோத்தாபய ராஜபக் ஷ மீது சுமத்தப்படலாம்.
அது அவரது கைது வரைக்கும் சென்றாலும் ஆச்சரியமில்லை.
ஆனால், அவரைக் கைது செய்வது சிங்கள மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தலாம் என்பதாலும், அவருக்கு ஆதரவானவர்கள் பாதுகாப்புக் கட்டமைப்புக்குள் அதிகம் இருப்பதாலும், கைது விடயத்தில் அரசாங்கம் கொஞ்சம் முன்னெச்சரிக்கையுடனேயே நடந்து கொள்ளும், எதற்கும் அவசரப்படாது என்றே தெரிகிறது.
-சுபத்ரா-