சுமார் 27 வருடங்களுக்குப் பின்னர் இந்திய பிரதமர் ஒருவர் இலங்கை வருவது இதுவே முதல் தடவையாகும். இந்தியாவின் உடனடி அயல் நாடாக இலங்கை இருந்த போதும் கடந்த காலத்தில் நிலவிய ஸ்திரமரற்ற அரசியல் சூழலின் காரணமாக, எந்தவொரு இந்திய பிரதமரும் இலங்கை வருவதற்கு விரும்பியிருக்கவில்லை.
புலிகளை அழித்தொழிக்கும் யுத்தத்தின் போது காங்கிரஸ் தலைமையிலிருந்த இந்தியா அவ்யுத்தத்திற்கு உதவியதாக பரவலான அபிப்பிராயங்கள் உண்டு.
தன்னுடைய உடனடி அயல்நாடான இலங்கைக்குள் நிகழும் யுத்தம் தொடர்பில் இந்தியா நிச்சயமாக ஈடுபாடு காட்டாமல் இருக்க முடியாது.
அந்த வகையில் இந்தியா புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தத்தின் போது சில வழிகளில் உதவியிருக்கலாம். இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.
ஆனால், இந்தியாவின் ஈடுபாடு தொடர்பில் அபிப்பிராயங்களை உருவாக்கவல்ல சில இந்திய அவதானிகள், இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போதான இந்திய ஈடுபாட்டை, காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. தலைமையிலான இரு வகை இந்திய ஈடுபாடாக பிரித்து நோக்குவதும் உண்டு.
ஆனால், இந்திய வெளிவிகார கொள்கை வகுப்பானது, இலங்கை போன்று அரசியல் வாதிகளின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப மாற்றமடையும் ஒன்றல்ல.
எந்த அரசு ஆட்சியில் இருந்தாலும் அயலுறவு மற்றும் தேசிய பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பான கொள்கையில் பெரிய மாற்றங்கள் ஏற்படப் போவதில்லை.
ஆனால், மத்தியில் பலமான தலைவர்கள் இருக்கின்ற போது அயலுறவு தொடர்பில் சில மாற்றங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புண்டு. அது கூட வெறும் தனிப்பட்ட விருப்புக்களிலிருந்து எழுவதில்லை.
மாறாக, அயல் நாடுகளில் நிலவும் அரசியல் சூழலை கருத்தில்கொண்டே நிகழ்கின்றன. இலங்கையின் தமிழ் போராட்ட அமைப்புக்களுக்கு இந்தியா நேரடியாக பயிற்சி வழங்கும் முடிவை எடுத்ததிலிருந்து 1987 இந்திய – இலங்கை ஒப்பந்தம் வரையில் அன்று நடந்தேறிய பல நிகழ்வுகள், இலங்கையின் உள்ளக நிலைமைகள் இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கு நீண்டகால அடிப்படையில் குந்தகமாக அமையும் என்னும் அடிப்படையில்தான் நிகழ்ந்தேறியது.
ஆனாலும், இந்தியாவின் ஆர்வங்களை துல்லியமாக விளங்கிக்கொண்டு, அதற்கேற்ப அரசியலை கையாளும் திறன் இன்மையால் தமிழ் மக்களுக்கான நட்புசக்தியாக பேணிக்கொள்ள வேண்டிய இந்தியாவை, தமிழர்களுக்கு எதிர்நிலையில் அமர்த்தும் கைங்கர்யம் நிகழ்ந்து முடிந்தது.
இது பற்றிய விவாதங்களில் ஒரு சோர்வும் ஏற்பட்டுவிட்டது. ஆயினும், இந்தியா எக்காலத்திலும் தவிர்த்துச் செல்ல முடியாதவொரு சக்தியாக இருப்பதால் இவ்விவாதங்களில் சோர்விருப்பினும் கூட, அவற்றை தவிர்த்துச்செல்ல முடியாமலும் இருக்கிறது என்பதே உண்மை.
இவ்வாறானதொரு சூழலில், கொழும்பில் இடம்பெற்ற பொதுநலவாய மாநாட்டிற்கு இந்தியப் பிரதமர் வரக் கூடுமென்னும் எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், இறுதி நேரத்தில் மன்மோகன் சிங் தன்னுடைய கொழும்பு பயணத்தை தவிர்த்திருந்தார்.
இது தொடர்பில் அப்போது பிரதான எதிர்க்கட்சியாக இருந்த பா.ஜ.க. மன்மோகன் சிங்கின் அணுகுமுறையானது வெளிவிவகார கொள்கை நோக்கில் தவறானது என்று விமர்சித்திருந்தது.
அப்போது காங்கிரஸ் தலைமையிலான அரசு மத்தியில் கருணாநிதியின் திராவிட முன்னேற்ற கழகத்துடன் இணைந்தே ஆட்சியமைத்திருந்தது. இந்த நிலையில், தமிழ் நாட்டின் எதிப்பலைகளை கருத்தில் கொண்டே மன்மோகன் கொழும்பு பயணத்தை தவிர்த்திருந்தார்.
இப்படியொரு சூழலில்தான் இந்தியாவின் மத்தியில் பா.ஜ.க. மிகவும் பலத்துடன் ஆட்சியை கைப்பற்றியது. இந்திரா காந்திக்குப் பின்னர் பலம் வாய்ந்த ஒரு பிரதமராக மோடி தெரிவானார்.
மோடி தன்னுடைய முதலாவது நடவடிக்கையாகவே, அவருடைய பதவிப்பிரமாணத்திற்கு சார்க் நாடுகளின் தலைவர்கள் அனைவரையும் அழைத்திருந்தார். இது இந்தியாவின் பிராந்திய சக்தியை நினைவூட்டும் ஒரு நடவடிக்கையென்றே அப்போது பல அரசியல் நோக்கர்களும் அபிப்பிராயம் தெரிவித்திருந்தனர்.
இதற்கான ஆலோசனையை தற்போது இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருக்கும் அஜித் குமார் டோவல் வழங்கியதாகவும் அப்போது தகவல்கள் வெளியாகியிருந்தன.
மோடியை பொறுத்தவரையில் வெளிவிவகார கொள்கை தொடர்பான முடிவுகளில் பிராந்திய அரசியல்வாதிகளின் குறிக்கீடுகள் அர்த்தமற்றவை.
ஆனால், காங்கிரசால் அப்படியொரு திடமான முடிவை எடுத்திருக்க முடியாது காரணம், காங்கிரஸ் தமிழ் நாட்டில் தங்கியிருந்தது.
மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருக்கின்ற போதே மோடியை இலங்கை வருமாறு அழைப்பு விடுத்திருந்தார்.
ஆனால், மஹிந்த ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டிருக்கின்ற சந்தர்ப்பத்தில்தான் மோடியின் இலங்கை விஜயம் நிகழ்கின்றது. அண்மையில் பாகிஸ்தானிய பத்திரிகை ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலில் மஹிந்த, தன்னுடைய தோல்விக்குப் பின்னால் இந்திய வெளியக உளவுத்துறையான றோ இருந்ததா கூறியிருக்கின்றார்.
இலங்கையில் இடம்பெற்ற ஆட்சி மாற்றத்தின் பின்னால் இந்திய உளவுத்துறையான றோ இருந்தாக பரவலாக நம்பப்படுகின்றது.
இது பற்றிய சந்தேகங்களை அடிப்படையாகக் கொண்டு நான் முன்னர் சில விடயங்ளை பதிவு செய்திருக்கிறேன். இதனை தெற்கின் ஆய்வாளர் ஒருவர் மஹிந்தவின் காதுகளை திருகிய மோடி என்னும் தலைப்பில் அண்மையில் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார்.
இந்தியாவை ஓரங்கட்டும் எந்தவொரு நடவடிக்கையும் இறுதியில் அது ஒரு தண்டணையாக இலங்கையை திருப்பித்தாக்கும் என்னும் நம்பிக்கை கொழும்பின் ஆட்சியாளர்கள் மத்தியிலும், சிங்கள தேசியவாதிகள் மத்தியிலும் நிலவுகின்ற சூழலில்தான் மோடியின் இலங்கை விஜயம் நிகழ்கின்றது.
சிங்கள தேசிய வாதிகள் அப்படி நினைக்காவிட்டாலும் கூட அதுவே உண்மை. இந்தியாவை இத்தீவில் ஓரங்கட்டி செயற்படலாம் என்னும் நினைப்பு நிச்சயம் ஒரு தண்டனையாகவே இலங்கையை திருப்பித் தாக்கும்.
இது தமிழர்களுக்கு ஒரு பாடமாக இருக்கிறது, அதுவே தற்போது சிங்களவர்களுக்குமான பாடாகவும் இருக்கிறது. ஆனால், தமிழர்கள் அந்த பாடத்திலிருந்து கற்றுக் கொண்டிருக்கிறார்களா என்னும் சந்தேகமே எனக்குண்டு.
மோடி தனது இலங்கை விஜயத்தின் போது யாழ்பாணத்திற்குச் செல்வது தமிழ் அரசியல் நோக்கில் முக்கியமானது. அதேவேளை, அவர் அனுராதபுரம் செல்வது சிங்கள அரசியல் நோக்கில் முக்கியமானது.
இதன் மூலம் மோடி இலங்கையின் தமிழ் மற்றும் சிங்கள அரசியல் தலைமைகளுக்கு ஒரு தெளிவான செய்தியை வழங்க முற்படுவதாகவே நான் பார்க்கிறேன்.
தமிழ் தேசிய அரசியல் மையமாக விளங்கும் வடக்கிற்கு அவர் பயணம் செய்வதன் ஊடாக தமிழ் மக்களுடன் இந்தியா இருக்கும் என்னும் செய்தியை சொல்லிச் செல்கிறார். அதேவேளை சிங்கள மக்களுடனும் இந்தியா இருக்கும் என்பதையும் அவர் சொல்லிச் செல்கிறார்.
மேலும் இதன் ஊடாக உலகின் தொன்மையான, ஆன்மீகத்தின் உறைவிடமான இந்து மதமும் பௌத்தமும் வேறு வேறானதல்ல என்னும் செய்தியையும் அவர் வழங்கிச் செல்ல முற்படுகின்றார்.
இதன் மூலம் இந்தியா பௌத்தர்களுக்கு எதிராக செயற்படும் என்னும் வீண் அரசியல் அச்சம் அவசியமற்றது என்பதையும் மோடி சொல்லிச் செல்ல முற்படுகின்றார் என்றே நான் பார்க்கிறேன்.
பொதுவாக சிங்கள தேசிய வாதிகள் மத்தியில் ஒரு அச்சம் நிலவுகிறது. அது வரலாற்று ரீதியாக நிலவும் ஒரு அச்சமாகும். வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் இந்தியாவுடன் இணைந்து சிங்கள மக்களுக்கான நாட்டை பிளவுபடுத்திவிடுவர் என்பதே பெரும்பாலான சிங்கள தேசிய வாதிகளின் அச்சமாக இருக்கிறது. நவீன வரலாற்றில் இந்த அச்சம் அர்த்தமற்ற ஒன்றாகும்.
ஆனாலும் பெரும்பாலான சிங்களவர்கள் இந்தியா தொடர்பில் ஒரு அச்ச மனநிலையுடன்தான் வாழ்ந்து வருகின்றனர்.
மோடியின் விஜயம் ஒரே நேரத்தில் கலாசாரரீதியான விஜயமாகவும், அதே வேளை மூலோபாய அரசியல் நோக்கிலும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகவும் அமைகிறது.
இலங்கையின் ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து இலங்கை மீதான சீனச் செல்வாக்கை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் கொழும்பு ஈடுபட்டுவருகிறது.
இதன் வெளிப்பாடே, சீனாவுடன் மஹிந்த அரசு செய்துகொண்ட கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தை இடைநிறுத்தியுள்ளது. இது தொடர்பில் சீனா தற்போது இராஜதந்திர ரீதியில் அதிக அழுத்தங்களை பிரயோகித்துவருகிறது.
உண்மையில் மேற்படி துறைமுக அபிவிருத்தித் திட்டம் கடன்களை அதிகரித்து, அதனை செலுத்த முடியாத சந்தர்ப்பத்தில், அப்பகுதியை தன்னுடைய முழுமையாக கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரும் ஒரு சீன உபாயம் என்றே கருதப்படுகிறது.
மஹிந்த தூரநோக்கற்று இத்திட்டத்திற்கான அங்கீகாரத்தை வழங்கியதால் இலங்கை தற்போது பிராந்திய சக்திகளுக்கிடையிலான பதற்றங்களைத் தோற்றுவிப்பதற்கான ஒரு களமாக மாறியிருக்கிறது.
இப்படியான விடயங்களை துல்லியமாக அவதானித்தே தமிழ் அரசியல் தலைமைகள் தங்களின் அரசியல் முன்னெடுப்புக்களை மேற்கொள்ள வேண்டும்.
இலங்கை இன்று பல்வேறு முரண்பட்ட சக்திகளின் ஆடுகளமாக மாறியிருக்கிறது. ஆனால், இதில் இந்தியா ஒன்றே தமிழ் மக்களின் நட்பு சக்தியாகும்.
ஏனைய அனைத்தும் தமிழ் மக்களின் தேவைகளை தங்களின் முரண்பட்ட ஆர்வங்களுக்கான போக்கிடமாக பயன்படுத்திக் கொள்ள முற்படும்.
மோடி இலங்கைக்கு விஜயம் செய்திருக்கின்ற சந்தர்ப்பத்தில் தமிழ் சூழலில் நிகழும் சில விடயங்கள் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.
குறிப்பாக திருகோணமலையின் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் இடம்பெறும் சம்பூர் என்னும் கிராமத்தில், இந்தியா – இலங்கை அரசுடன் இணைந்து அனல் மின்நிலையம் ஒன்றை உருவாக்குவது தொடர்பில் நீண்டகாலமாக விவாதிக்கப்பட்டுவருகிறது.
ஆனால், அப்பகுதியின் மக்கள் தொடர்ந்தும் முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில், குறித்த அனல் மின் நிலையம் விரைவில் ஆரம்பிக்கப்படலாம் என்னும் உத்தியோகப்பற்ற தகவல்கள் வெளிவருகின்றன.
ஆனால், கிடைக்கும் தகவல்களின் படி இந்தியாவின் அனல் மின் நிலையத்திற்கென ஒதுக்கப்பட்டுள்ள 550 ஏக்கர் காணி எல்லைக்குள் ஏழு பேருக்குச் சொந்தமான காணிகள் மட்டுமே அடங்குகின்றது.
இந்த வகையில் ஏனைய மக்கள் அப்பகுதியில் குடியேறுவதற்கு பெரிய தடைகள் எதுவுமில்லை. ஆனால், தற்போது சுற்றுச் சூழல் தொடர்பில் பிரச்சினைகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஆனால், இது தொடர்பில் சுயாதீன நிபுனர்கள் எவரதும் கருத்து அறியப்படவில்லை. குறித்த திட்டத்தினால் சுற்றுச் சூழல் பிரச்சினைகள் ஏற்படுமெனின் அவற்றில் கரிசனை கொள்ள வேண்டியதும் அவசியம்.
ஆனால், அது ஒரு பொருத்தமற்ற எதிர்ப்பாக மாறிவிடக் கூடாது. கிடைக்கும் சில தகவல்களின் படி சில நாட்களாக திருகோணமலையிலுள்ள சில முஸ்லிம் குழுக்களும் குறித்த அனல்மின் நிலையம் தொடர்பில் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக அறிய முடிகிறது.
இவ்வாறான விடயங்களில் தமிழ் அரசியல் செயற்பாட்டாளர்கள் எச்சரிக்கையுடன் விடயங்களை நோக்குவது அவசியம்.
இந்தியா அப்பகுதியில் பிரசன்னமாகுவதை விரும்பாத சில சக்திகள், சில முகவர் குழுக்களின் வழியாகவும் இவ்வாறான விடயங்களை கையாள வாய்ப்புண்டு.
குறிப்பாக பாகிஸ்தானிய வெளியக உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ. (Inter-Services Intelligence) இந்தியாவின் செல்வாக்கை இலங்கைக்குள் குறைக்கும் நோக்கில் எதிர்ப்புக் குழுக்களை உருவாக்கி அவற்றைக் கொண்டு இந்தியாவிற்கு எதிரான செயற்பாடுகளை முடுக்கிவிடலாம்.
இது தொடர்பில் தமிழ் அரசியல் செயற்பாட்டாளர்கள் மிகுந்த எச்சிரிக்கையுடன் இருப்பதே, உண்மையில் சம்பூர் மக்களுக்கு நன்மையான ஒன்றாக அமையும்.
சம்பூர் மக்கள் அவர்களின் இடத்தில் குடியமர வேண்டும் என்பதில் இரு வேறு கருத்துக்களுக்கு இடமில்லை. ஆனால், தேவையற்ற எதிர்ப்பு, வெண்ணை திரண்டு வரும் போது தாழியை உடைத்துவிடலாம். எச்சரிக்கை அவசியம்.
-யதீந்திரா –