வார்சா: போலந்து நாட்டில் பாஸ்போர்ட் இல்லாத காரணத்தினால் சூட்கேசில் அடைத்து மனைவியை கடத்த முயன்ற கணவர் ரயில் நிலையத்தில் சிக்கினார்.
போலந்து – பெலாரஸ் எல்லைப் பகுதியில் உள்ள தெரஸ்போல் ரயில் நிலையத்துக்கு 60 வயது மதிக்கத்தக்க நபர் ராட்சத சூட்கேசை எடுத்து வந்தார்.
அதைப் பார்த்து சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அது குறித்து விசாரித்தனர்.
அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அந்த சூட்கேசை திறந்து பார்த்தனர். அப்போது உள்ளே 30 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் அடைத்து வைக்கப்பட்டிருந்தார். நல்ல வேளையாக அவர் உயிருடன் இருந்தார்.
இதனால் ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்த அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர்கள் இருவரும் கணவன், மனைவி என தெரிய வந்தது.
அந்த ஆண் பிரான்சையும், பெண் ரஷியாவையும் சேர்ந்தவர்கள். இவர்கள் போலந்தில் இருந்து பெலாரஸ் சென்றனர்.
அவர்களில் மனைவிக்கு பாஸ்போர்ட் இல்லை. எனவே கணவர் தனது மனைவியை சூட்கேசில் அடைத்து கடத்தி சென்றது தெரிய வந்தது. இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.