‘இனி சினிமாவில் நடிக்க மாட்டேன்’, ‘வாட்ஸ் அப் வீடியோவில் இருப்பது நான் இல்லை’, ‘சினிமாவில் நடிப்பேன். ஹோம்லி கேரக்டர்தான் போரடிக்குது’ எப்போதும் லைம்லைட்டிலேயே இருக்கிறார் லட்சுமி மேனன். ‘கொம்பன்’ ஷூட்டிங் முடிந்து பரபரப்பாக பரீட்சைக்குப் படித்துக்கொண்டிருந்தவரிடம் கொஞ்சம் கடலை!

p16a1

‘‘ எவ்ளோ மார்க் எதிர் பார்க்கிறீங்க?”

“நானே பார்டர்ல பாஸ் பண்ற பொண்ணு. ரெண்டு எக்ஸாம் முடிஞ்சிருக்கு. ரெண்டுமே கஷ்டமோ கஷ்டம். இனி வர்ற பரீட்சையாவது ஈஸியா இருக்கணும்னு வேண்டிக் கிறேன்.”

‘‘நடிப்பு – படிப்பு. எது ஈஸி?”

‘‘நடிப்புதான். மத்த பசங்க, பொண்ணுங்க வருஷம் முழுக்கப் படிக்கிறதை நான் கடைசி ரெண்டு, மூணு மாசத்துல படிக்க வேண்டியதா இருக்கு. ப்ளஸ் டு முடிச்சதும் பெங்களூர்ல மேற்படிப்பு படிக்கலாம்னு இருக்கேன்.”

 

‘ஸ்கூல் நண்பர்கள் உங்க நடிப்பைப் பாராட்டியோ, திட்டியோ கமென்ட் பண்ணுவாங்களா?”

‘‘என் நண்பர்கள் யாருமே என் படத்தைப் பார்த்தது இல்லை. தமிழ்நாட்லதான் எல்லோரும் பாசமா இருக்காங்க. ‘ஹேய்… லட்சுமி மேனன்டா’னு எமோஷனல் ஆகி போட்டோ எடுத்துக்கிறாங்க. கேரளாவில் அப்படி இல்லை. லட்சுமி மேனன் ஒரு நல்ல ஃப்ரெண்ட். அவ்ளோதான். இங்கே எனக்கு நெருக்கமான பலர் என்னை நடிகையாவே பார்க்கிறதில்லை.”

‘‘உங்க சொந்த மொழிப் படங்கள்ல நடிக்கிற ஐடியா இல்லையா?”

‘‘சினிமாவில் நான் நடிகை ஆனதே விபத்துதான். எங்க குடும்பத்தில் இருக்கிற யாரும் சினிமாவில் கிடையாது. நடிச்ச, நடிக்கிற, நடிக்கப்போற படங்கள்னு எல்லாமே பிளான் பண்ணாம நடக்கிறது. 14 வயசுலேயே நடிக்க வந்துட்டேனா, ஸ்கூல் வாழ்க்கையை ரொம்ப மிஸ் பண்ணிட்டேன். எனக்கு கொஞ்சம் டைம் வேணும். இனி என் விருப்பப்படி லைஃபை அமைச்சுக்கணும்னு ஆசையா இருக்கு.”

 

‘‘தாவணியிலேயே நடிச்சு போரடிச்சுடுச்சாமே?”

‘‘ஆமா. ஒரே காஸ்ட்யூமைப் பார்த்து அலுத்துடுச்சு. நான் நானாக இருக்கிற மாதிரி, ரொம்ப கேஷுவலான கேரக்டர்கள்ல நடிக்கணும்னு ஆசை. ஒளிஞ்சு நின்னு போன் பேசுறது, தலை நிறைய மல்லிகைப் பூ வெச்சு மாமாவைப் பார்த்து சிரிக்கிறது, இப்படி ஒவ்வொரு படமும் கிராமத்துப் படமாவே இருந்தா எப்படி? ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ என்னோட ஆல்டைம் ஃபேவரைட் படம். அதுல த்ரிஷா மேடத்துக்குக் கொடுத்த கேரக்டர் மாதிரி எனக்கு ஒரு கேரக்டர் கொடுங்களேன் டைரக்டர்ஸ் ப்ளீஸ்.”

‘‘உங்க ஹீரோக்களை நினைச்சதும் ஞாபகத்துக்கு வர்ற விஷயங்கள் என்னென்ன?”

‘‘சசிகுமார் சார்னா, தாடிதான் ஞாபகத்துக்கு வரும். ரொம்ப டெடிகேட்டான ஆள். விக்ரம் பிரபு, செம ஹார்டு வொர்க்கர். ஷூட்டிங்ல நடிப்பைத் தவிர, வேற எதையும் பேச மாட்டார். விமல், செம காமெடியான ஆளு. என்னையே இமிடேட் பண்ணி கலாய்ச்சுட்டே இருப்பார்.

அந்த அளவுக்கு ஷூட்டிங் ஸ்பாட்டைக் கலகலனு வெச்சிருக்கிறதில் கை தேர்ந்தவர். விஷால் அமைதி. சித்தார்த்தும் அப்படித்தான். அளந்துதான் பேசுவார். கார்த்தி சார், ரொம்ப ஃப்ரெண்ட்லி. ஷூட்டிங் டைம்ல அதிகமா பேச மாட்டேன். பேச டைம் கிடைச்சா, விட மாட்டேன்!”

Share.
Leave A Reply

Exit mobile version