வர்க்கத்தின் மிகப் பெரிய சக்தியான பெண்ணியத்தின் பெருமையை எடுத்துக்கூறும் சர்வதேச பெண்கள் தினக் கொண்டாட்டங்கள் நிறைவடைந்த அடுத்த நாள். சரியாக மார்ச் 9ஆம் திகதி இரவு கலைந்து, புதியதொரு விடியல் பரவசமூட்டியது.
சூரியனின் வருகையினால் இலைகளிலும், புற்களிலும் படுத்துறங்கிய பனித்துளிகள் மெல்ல மெல்ல விலக ஆரம்பித்த நேரமது.
வதுபிடிய சுதந்திர வர்த்தக வலயத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் ஞாயிறு விடுமுறை தினத்தை கழித்து அந்தப் புதிய வாரத்துக்கான எதிர்பார்ப்புக்களுடன் தமது வேலைத்தலத்தை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள்.
நேரம் காலை 7.15 மணியிருக்கும். வதுபிடிய சுதந்திர வர்த்தக வலயத்தின் பெண்கள் விடுதியிலிருந்து கேட்ட பெண்களின் அலறல் சத்தம் வதுபிட்டிய பிரதேச மக்களைப் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
அடுத்த கணமே மக்கள் கடல் அலை போல் குறித்த பெண்கள் விடுதியை நோக்கி படையெடுத்தார்கள். ஏன்? எதற்காக? இவர்கள் இவ்வாறு சத்தமிடுகின்றார்கள் என்ற அடுக்கடுக்கான கேள்விகள் பல அவர்களுக்குள் எழுந்த வண்ணமே இருந்தன.
எனவே சம்பவ இடத்துக்கு விரைவாக வந்தடைந்தவர்களுக்கு என்ன அநியாயம்? என்று வாயை மூடி அழும் அளவுக்கு அங்கு கண்ட காட்சியிருந்தது.
சுதந்திர வர்த்தக வலயத்தில் தொழில் புரியும் அமைதியான சுபாவம் கொண்ட நிரோஷினி ஜயசேன என்ற 24 வயதான பெண் விடுதியில் வாசலருகில் குருதி வெள்ளத்தில் பலத்த கத்திக்குத்து காயங்களுடன் உயிருக்குப் போராடிய நிலையில் கிடந்தாள்.
ஒரு நிமிடம் அந்தக் காட்சி மனித நேயம் கொண்ட மனங்கள் அனைத்தையுமே ஸ்தம்பிக்க வைத்தது.
இந்நிலையில் நிரோஷினியின் உயிரைக்காப்பாற்றும் முகமாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முயற்சித்த போதும் வழியிலேயே நிரோஷினியின் உயிர் அவள் உடலை விட்டுப்பிரிந்தது.
சிறு வயது முதலே பிறருக்கு உதவி செய்து அதில் ஆனந்தம் கொள்வாள். எனவே எதிர்காலத்தில் தான் ஒரு சிறந்த தாதியாக வந்து எல்லோருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற இலட்சியத்தை மனதில் சுமந்தவாறு உயர்தரம் வரை கற்றாள்.
உயர்தரத்தின் பின் தனியார் நிறுவனமொன்றில் தாதியர்களுக்கான டிப்ளோமா பாடநெறியை நிறைவு செய்து சுமார் ஒரு வருட காலம் தனியார் வைத்தியசாலையொன்றில் தாதியாகவும் கடமையாற்றினாள்.
அதன்பின் அதே வைத்தியசாலையில் தனது திறமையின் காரணமாக தாதியர்களுக்கான ஆலோசகராகவும் கடமையாற்றினாள்.
இவ்வாறு அங்கு ஆசிரியராக கடமையாற்றும் காலப்பகுதியிலேயே கேகாலை, அம்பிட்டிய நாபெரியாவ கிராமத்தை வசிப்பிடமாக கொண்ட ,இலங்கை இராணுவத்தில் மின்னியல் பொறியிலாளராக கடமையாற்றும் ஜெகத் ஸ்ரீ சமன் பண்டரா என்ற இளைஞனின் அறிமுகம் நிரோஷினிக்கு கிடைத்தது.
எனவே இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடித்து போக வெகு நாட்கள் செல்லும் முன்னரே கடந்த ஆண்டு ஜூன் 05 ஆம் திகதி பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் திருமண பந்தத்தில் இணைந்தாள்
அதன் பின்னர் தனது குடும்பத்தின் பொருளாதாரத்தை மேலும் மேம்படுத்த வேண்டும் என்பதால் நிரோஷினி வதுபிட்டிய சுதந்திர வர்த்தக வலயத்தில் பணிபுரியும் அதிகாரி ஒருவரின் உதவியுடன் வதுபிட்டிய சுதந்திர வர்த்தக வலயத்தில் தாதியாக வேலைக்கு சேர்ந்ததுடன், தனது தொழில் நிமித்தம் சுதந்திர வர்த்தக வலயத்தை அண்மித்துள்ள பெண்கள் விடுதியில் தங்கினாள்.
அதன்பின் அங்கு தொழில் புரியும் காலப்பகுதியிலேயே அவளுடைய நெருங்கிய தோழியான ஷசினியும் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) சுதந்திர வர்த்தக வலயத்தில் வேலைக்கு சேர்ந்து நிரோஷினி தங்கியிருந்த அதே விடுதியில் தங்கினாள்.
எனினும் ஆரம்பத்தில் தனது தோழியின் வருகையை மகிழ்ச்சியுடன் ஏற்ற நிரோஷினிக்கு ஷசினி நொச்சியாகம பிரதேசத்தில் இராணுவத்தில் தொழில் புரியும் ஜிந்தகவை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) காதலிக்கின்றாள் என்று அறிந்தவுடன் அவள் காதலுக்கு எதிரியாக மாறினாள்.
பல நாள் ஜிந்தகவிடமிருந்து ஷசினிக்கு வரும் தொலைபேசி அழைப்புகளை ஷசினிக்கு தெரியாமலே துண்டித்து காதலர்களுக்கு இடையில் பிரச்சினைகளை ஏற்படுத்தினாள்.
எனவே இது சிறிது நாட்களில் எப்படியோ ஷசினிக்கு தெரிய வந்து நிரோஷினியிடம் கேட்ட போது” நீ இன்னும் சிறிய பிள்ளை ஜிந்தகவுடன் உள்ள காதல் தொடர்பை துண்டித்து விடு” என்று அறிவுரை வழங்கினாள்.
அவளும் நண்பியின் நட்புக்கு மதிப்பளித்து தனது காதலை உள்ளுக்குள்ளே மறைத்து வைத்துக்கொண்டு நிரோஷினிக்கு பிடித்த விதத்தில் நடிக்க ஆரம்பித்தாள். எனினும் ஜிந்தகவுக்கு நிரோஷினியின் நடவடிக்கைகள் பிடிக்கவில்லை.
ஜிந்தக பல கிலோ மீற்றர் தொலைவிலிருப்பதால் தனது காதலியை சந்திக்க வாய்ப்புகள் கிடைக்கவில்லை. குறைந்தது தொலைபேசி உரையாடல்கள் மட்டுமே இருவருக்குமிடையிலான காதலை வளர்க்கும் ஊடகமாகவிருந்தது.
எனினும், நிரோஷினியின் நடத்தை காரணமாக தனது காதலியுடன் நிம்மதியாக உரையாட முடியவில்லையே என்ற ஆதங்கம் அவனுக்குள் உருவாகியது.
எனவே தனது காதலுக்கு நிரோஷினி தான் தடையாக இருக்கின்றாள். அவளை கொன்று விட்டால் தனக்கும் தனது காதலிக்கும் எந்த பிரச்சினையும் இல்லை என்ற எண்ணத்துடன் அவளைக் கொலை செய்வதற்கான நாளையும்,முறையையும் திட்டமிட்டான்.
அதன்படி மார்ச் ஒன்பதாம் திகதி அதிகாலை நொச்சியாகம பிரதேசத்திலிருந்து முச்சக்கர வண்டியொன்றில் கையில் கத்தியுடன் சுதந்திர வர்த்தக வலயத்தை காலை 6.45 மணியளவில் வந்தடைந்தவன் , தனது காதலியிடமிருந்து பெற்றுக்கொண்ட தகவல்களின் அடிப்படையில் சுதந்திர வர்த்தக வலயத்தின் பெண்கள் விடுதியின் பிரதான வாசலருகில் மறைந்து இருந்தான்.
அதன் பின்னர் காலை 7.00 மணியளவில் நிரோஷினி தனது விடுதி அறையிலிருந்து சுதந்திர வர்த்தக வலயத்துக்கு வேலைக்கு செல்வதற்காக பிரதான வாசலுக்கு வரும் வேளையிலேயே மறைந்திருந்தவன் நிரோஷினியை கத்தியால் குத்த ஆரம்பித்தான்.
எனினும் அந்த நேரம் அங்கு யாரும் இருக்கவில்லை. எனவே நிரோஷினி அவனிடம் இருந்து தப்பித்துச் செல்ல பலவாறு முயற்சித்த போதும் அவள் முயற்சியில் தோற்றாள்.
அவனின் கையிலிருந்த கத்தி பத்து தடவைகளுக்கு மேல் அவள் உடலைப் பதம் பார்த்தது.ஜிந்தகவின் கத்திக் குத்துக்கு நிரோஷினி இலக்காகி சில மணி நேரங்களுக்கு பின்னரே விடுதியில் தங்கியிருந்த பெண்கள் பிரதான வாசலருகில் உயிருக்கு போராடிய நிலையில் அவள் துடிதுடிப்பதைக் கண்டு பலத்த சத்தத்துடன் கத்தியுள்ளார்கள்.
எனினும் அந்த நேரம் கொலையாளியான ஜிந்தக சம்பவ இடத்திலிருந்து தப்பியோடி இருந்தான். அதன்பின் நிரோஷினியை அனைவரும் சேர்ந்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முயற்சித்த போதும் அவள் உயிரை காப்பாற்ற முடியவில்லை. நிரோஷினியின் உயிர் பாதி வழியிலேயே அவள் உடலை விட்டுப் பிரிந்தது.
இதை வேளை நிரோஷினி ஏன் கொலை செய்யப்பட்டாள்? அவளுடைய கொலையுடன் யாருக்குத் தொடர்பிருக்கின்றது? என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட போது பொலிஸாரின் கவனம் நிரோஷினியின் தோழியான ஷசினியின் மீது திரும்பியது.
எனவே ஷசினியிடம் பொலிஸார் கடுமையான விசாரணைகளை முன்னெடுத்தன் மூலம் தான் இக்கொலையுடன் ஜிந்தக்கவுக்கு தொடர்பு இருக்கின்றது என்ற உண்மை தெரியவந்ததுடன் ஜிந்தகவை கைது செய்து மேலதிக விசாரணைகளையும் முன்னெடுக்க முடிந்தது.
அவ்விசாரணைகளின்படி காதல் தொடர்பு ஒன்றில் ஏற்பட்ட பிரச்சினைகளின் காரணமாகவே மேற்படி கொலை இடம்பெற்றிருப்பதாகவும், கத்திக்குத்துக்கு இலக்கான நிலையிலேயே குறித்த பெண் உயிரிழந்திருப்பதாகவும் ஊர்ஜிதப்படுத்தப்பட்டது
எனவே மேற்படி சம்பவத்தில் தேவையற்ற ஒரு விடயத்தில் தலையிட்ட காரணத்தினால் பரிதாபகரமாக தனது உயிரை இழக்கும் துர்ப்பாக்கிய நிலை நிரோஷினிக்கு ஏற்பட்டது.
158ஆவது சர்வதேச மகளிர் தின கொண்டாட்டங்கள் நிறைவு செய்யப்பட்டு 7 மணித்தியாலங்கள் மட்டுமே கடந்த நிலையில் அன்பின் உருவமாய் இருந்த ஒரு பெண் இவ்வுலக வாழ்விலிருந்தே விடைபெற்றுச் சென்று விட்டாள்.