சென்னை: மாதவரத்தை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 36). என்ஜினீயரான இவர் அண்ணா நகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
கடந்த 2006-ம் ஆண்டு இவருக்கும் மதுரையை சேர்ந்த வனிதாவுக்கும் திரு மணம் நடந்தது. இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் பிறந்தன. ஒரு குழந்தை ஊனமுற்றதாக இருந்தது.
மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 2010-ம் ஆண்டு வனிதாவை சீனிவாசன் விவாகரத்து செய்தார். ஊனமுற்ற குழந்தையை வளர்த்து வந்தார்..
இந்த நிலையில் சீனிவாசன் சென்னையை சேர்ந்த அபிநயாவை திருமணம் செய்து திருமங்கலத்தில் குடும்பம் நடத்தி வந்தார். சீனிவாசன் அடிக்கடி வெளியூரில் அதிகநாள் தங்கினார்.
ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அபிநயா இது குறித்து திருமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் சீனிவாசனை பிடித்து விசாரித்த போது கோவையை சேர்ந்த டாக்டர் சுமித்ரா, கன்னியாகுமரியை சேர்ந்த ஜெயா பிரின்ஸ் ஆகிய மேலும் 2 பேரையும் ஏமாற்றி திருமணம் செய்து இருப்பது தெரிய வந்தது.
அவர்களை அந்தந்த ஊரிலேயே வீடு எடுத்து சீனிவாசன் தங்க வைத்து உள்ளார். வாரம் இரண்டு முறை அவர்களது வீட்டுக்கு சென்று சந்தேகம் வராமல் பார்த்துக் கொண்டார்.
அவர்கள் சந்தேகம் அடைந்து கேட்டும் போது வேலை சம்பந்தமாக வெளியூர் சென்று விட்டதாக சமாளித்து வந்து உள்ளார்.. இதனால் சென்னை, கோவை, கன்னியாகுமரி என சீனிவாசன் ஜாலியாக வாழ்க்கை நடத்தி இருக்கிறார்.
ஏமாந்த டாக்டர் சுமித்ரா உள்பட 3 பேரும் ஏற்கனவே கணவருடன் விவாகரத்து பெற்றவகள் ஆவர். அனைவரையும் திருமண இணைய தளம் மூலமே வலை விரித்து வீழ்த்தி உள்ளார்.ஊனமுற்ற மகனுடன் வாழ்ந்து வருவதாக சீனிவாசன் கூறியதால் நல்வராக இருக்கலாம் என்று நினைத்து பரிதாபப்பட்டு அவரை திருமணம் செய்த தாக ஏமாந்த பெண்கள் கூறினார்கள்.
சீனிவாசன் திருமணம் ஆனதுமே அபிநயாவின் ரூ.25 லட்சம் ரொக்கம் மற்றும் அவரது பெயரில் இருந்த ரூ.ஒன்றரை கோடி மதிப்புள்ள நிலத்தை தனது பெயருக்கு மாற்றிக் கொண்டார்.
இதே போல் கோவை டாக்டர் சுமித்ராவின் ரூ.90 லட்சம் மதிப்பிலான நிலத்தையும் தனக்கு பத்திரப்பதிவு செய்து கொண்டார். அவர்களது நகைகளையும் வாங்கி வைத்துக் கொண்டதாக தெரிகிறது.
கல்யாண மன்னன் சீனிவாசன் குறித்து கோவையில் உள்ள டாக்டர் சுமித்ராவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிர்ச்சி அடைந்த அவர் சென்னை விரைந்து உள்ளார்.
கன்னியாகுமரியை சேர்ந்த ஜெயாபிரின்ஸ் வேலை சம்பந்தமாக துபாய் சென்று விட்டார். அவர் ஏமாந்து இருப்பது குறித்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனஜினீயர் சீனிவாசனை போலீசார் கைது செய்து அவரைடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்