சிறிலங்காவின் கூட்டுப்படைகளின் தளபதியாக உள்ள ஜெனரல் ஜெகத் ஜெயசூரியவுடன், கைகுலுக்க பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, மறுப்புத் தெரிவித்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை பீல்ட் மார்ஷலாகப் பதவிஉயர்த்தும் நிகழ்வு நேற்று முன்தினம் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் மைதானத்தில் இடம்பெற்றது.
சிறிலங்கா அதிபரால், சரத் பொன்சேகா பீல்ட் மார்ஷலாகப் பதவிஉயர்த்தப்பட்ட பின்னர், அவருக்கு அந்த நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் வாழ்த்துக் கூறினர்.
அமைச்சர்கள், அதிகாரிகள், படைத் தளபதிகள், உறவினர்கள், மற்றும் பிரமுகர்களுடன் அவர் கைகுலுக்கி, அவர்களின் வாழ்த்துக்களை ஏற்றுக் கொண்டார்.
எனினும், கூட்டுப்படைகளின் தளபதி ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய, வாழ்த்துக் கூறி கைகுலுக்க முனைந்த போது, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, சட்டென்று அடுத்த பக்கம் திரும்பிக் கொண்டதுடன் அவருடன் கைகுலுக்கவும் மறுத்து விட்டார்.
முன்னைய ஆட்சியில் சரத் பொன்சேகாவுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பழிவாங்கல் நடவடிக்கைகளுக்கு, ஜெனரல் ஜெயத் ஜெயசூரிய உடந்தையாக இருந்தவர்.
ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய பங்கேற்கும் நிகழ்வுகளில் தாம் பங்கேற்கப் போவதில்லை என்று, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா அண்மையில் கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.