முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு 20 ற்கு மேற்பட்ட வாகனங்களும் 300ற்கு மேற்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் வழங்கப்பட்டுள்ள போதும் தமக்குப் போதிய வாகனங்கள் இல்லை,

பாதுகாப்பு போதாது என அவர் அரசாங்கத்தை குறை கூறுவது விந்தையாக உள்ளதென அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

அவரது காலத்தில் முன்னாள் ஜனாதிபதியான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு நியமிக்கப்பட்ட வாகனங்களை அவர் வழங்காதிருந்த போதும் தற்போதைய அரசாங்கம் அவருக்கு வாகனங்கள் வழங்குவதிலோ பாதுகாப்புத் தொடர்பிலோ எந்தக் குறையையும் விடவில்லை எனவும் அமைச்சர் தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் இது தொடர்பில் அமைச்சர் விளக்குகையில்,

முன்னாள் ஜனாதிபதி என்ற வகையில் தமக்கான வாகனங்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளை வழங்க அரசாங்கம் தவறியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பகிரங்கமாக விமர்சித்து வருகிறார்.

எனினும் தேவைக்கு அதிகமாகவே அவருக்கு வாகனங்கள் சாரதிகள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளை அரசாங்கம் வழங்கியுள்ளது.

2005 நீதிமன்றத் தீர்ப்புக்கிணங்க ஓய்வு பெற்ற ஜனாதிபதி ஒருவருக்கு வழங்கப்பட வேண்டிய வாகனங்கள் பாதுகாப்பு பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் கடந்த அரசாங்கத்தினால் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவிற்கு இந்த சலுகைகள் வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

உயர் நீதிமன்ற தீர்ப்புக்கிணங்க முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்கு உத்தியோகபூர்வ வாகனம் இரண்டு பாதுகாப்புக்கான வாகனம் ஒன்று அத்துடன் மூன்று சாரதிகள் என்பனவே உரித்தாகின்றன.

அதற்கு மேலதிகமாக உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் எரிபொருள் வழங்கப்படுகின்றன.

எனினும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அவரது செயலாளர் லலித் வீரதுங்க கையொப்பமிட்டு வழங்கியுள்ள வாகனங்கள் பின்வருமாறு

அதியுயர் பாதுகாப்பு மோட்டார் கார்கள் 2 மேலதிக மோட்டார் வாகனம் – 1, டிபென்டர் வாகனம் – 1, லேண்ட் குரூஷர் – 1, கெப்ரக வாகனம்- 1 அத்துடன் இராணுவ அதிகாரிகள் 108 பேரும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் 105 பேருடன் 213 பேர் உள்ளடங்கிய பாதுகாப்புச் செயலணியொன்றும் அவருக்கு உள்ளது.

எனினும் இக் காலங்களில் அவர் தமக்குப் பாதுகாப்பு போதாது என்று கூறி வருகின்றார்.

அத்துடன் அதிகாரிகளுக்கான வாகனங்களாக 3 வேன்களும் இரண்டு கார்களும் எட்டு மோட்டார் சைக்கிள்களும் லேன்ட் குரூஷர், ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கிணங்க அவருக்கு 21 வாகனங்கள் உள்ள போதும் வாகனங்கள் குறைபாடு உள்ளதாக அவர் கூறி வருகின்றார் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Share.
Leave A Reply

Exit mobile version