ஜெ சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை தொடர்கிறது…
ஜெ தரப்பில் உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் நாகேஸ்வரராவ், பசந்த், குமார், மணிசங்கர், செந்தில் ஆஜரானார்கள்.
அரசு தரப்பில் பவானிசிங், முருகேஷ் மராடி ஆகியோரும், அன்பழகன் தரப்பில் குமரேசன், சரவணன் ஆகியோரும் ஆஜரானார்கள்.
6-வது நாளான ஜனவரி 12 ம் தேதி… நீதிபதி தன் இருக்கையில் அமர்ந்ததும் குமார் எழுந்து, “இவர்தான் உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் நாகேஸ்வரராவ்.
இவர் கேரள உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி பசந்த். ஏ1 ஜெயலலிதாவுக்காக நாகேஸ்வரராவும், ஏ2 சசிகலாவுக்காக பசந்த்தும் வாதிடுவார்கள்” என்று அறிமுகம் செய்துவைத்தார்.
jaya lawyers
‘‘ஏற்கெனவே குமார் இந்த வழக்கு பற்றி ஓரளவுக்கு முழுமையாக வாதிட்டு இருக்கிறார். அதில் சில பாயிண்ட்டுகள் மட்டும் நான் வாதிட வந்திருக்கிறேன்’’ என்று தன் வாதத்தைத் தொடங்கினார் நாகேஸ்வர ராவ்.
இவரோடு 25 வயதுக்கும் குறைவான 8 ஜூனியர் வழக்கறிஞர்கள் வந்திருந்தார்கள். நாகேஷ்வரராவ் வாதிடும்போது அவருக்கு பல பாயின்ட்டுகளை பரபரப்பாக எடுத்துக் கொடுத்து வருகிறார்கள்.
ஜெயலலிதா பினாமி அல்ல…
நாகேஸ்வர ராவ்: ‘‘ஊழல் தடுப்புச் சட்டம் 1988 பிரிவு 13(1) இ-ன்படி என் மனுதாரர் ஜெயலலிதா மீது தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை போலீஸார் தொடுத்த வழக்கை அடிப்படையாக வைத்து என் மனுதாரரை குற்றவாளியாக கீழ் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஏ1 ஜெயலலிதாவுக்கு வழக்கு காலகட்டத்துக்கு முன்பே ஹைதராபாத் திராட்சைத் தோட்டம், விவசாய நிலங்கள், கட்டடங்கள் என நிறைய சொத்துகள் இருந்தது.
அதன் மூலம் அவருக்கு அதிகளவு வருமானமும் வந்தது. அதை ஒவ்வொரு வருடமும் வருமான வரித்துறையில் கணக்கீடு செய்து அதற்கான வருமானவரியையும் கட்டி இருக்கிறார்.
ஆனால், வழக்கு நடைபெறும் 91 டூ 96-ல் அவர் எந்த விதமான சொத்துகளையும் வாங்கவில்லை. ஆனால், தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை போலீஸார் அவருடைய வருமானத்தைக் குறைத்தும், செலவுகளை அதிகரித்தும் காட்டி இருக்கிறார்கள். இது தவறானது.
அதேபோல ஜெயா பப்ளிகேஷன், நமது எம்.ஜி.ஆர் ஆகிய நிறுவனத்துக்கு இடையே நடைபெற்ற பண பரிவார்த்தனைகள் முறையாக நடைபெற்றது.
ஜெயலலிதாவின் பிறந்தநாளுக்கு வந்த பரிசு பொருட்களைக்கூட அவரது சொத்து பட்டியலில் கணக்கிட்டுள்ளனர். இதையெல்லாம் கீழமை நீதிமன்றத்தில் எடுத்துக் கூறியும் நீதிபதி ஏற்றுக்கொள்ளவில்லை.
மேலும் ஜெயலலிதா முதல்வராக இருந்த 91 முதல் 96 வரையிலான காலகட்டத்தில் நிறைய சொத்துகளை வாங்கி அதை ஏ2 சசிகலா, ஏ3 சுதாகரன், ஏ3 இளவரசி போன்ற பினாமி பெயர்களில் பதிவு செய்துள்ளதாக குற்றம்சாட்டுகிறார்கள்.
இந்திய ஊழல் தடுப்புச் சட்டம் 1947-ல் கொண்டுவரப்பட்டது. அந்தச் சட்டத்தை பாராளுமன்றத்தில் திருத்தி 9.9.1988-ல் அமல்படுத்தப்பட்டது.
இதற்கு ஒரு வாரத்துக்கு முன்பு பினாமி சட்டமும் கொண்டுவரப்பட்டது. இந்தச் சட்டத்தின்படி, பொதுத்துறை ஊழியர்களாக இருப்பவர்கள் தன் மனைவி பெயரிலோ அல்லது திருமணம் ஆகாத மகள் பெயரிலோ வாங்கும் சொத்துகளை மட்டும் பினாமி சொத்துகள் என்று ஏற்றுக்கொள்ளலாம்.
ஆனால், மற்றவர்கள் பெயரில் வாங்கிய சொத்துகளை பொது ஊழியர்களின் பினாமி சொத்துகள் என்று ஏற்றுக்கொள்ள முடியாது.
ஏ1 ஜெயலலிதாவின் வங்கிக் கணக்கில் இருந்து எடுக்கப்பட்ட பணத்தில் இருந்து வேறு ஒருவர் பெயரில் சொத்துகள் வாங்கப்பட்டிருந்தால், அதை பினாமி என்று ஏற்றுக்கொள்ளலாம்.
அப்படி எதுவும் ஜெயலலிதா வங்கிக் கணக்கில் இருந்து எந்தப் பணமும் எடுக்கப்பட்டு யார் பெயாரிலும் சொத்துக்கள் வாங்கவில்லை.
ஏ2, ஏ3, ஏ4 பெயரில் வாங்கப்பட்ட சொத்துகளுக்கும் ஏ1-க்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. அந்த சொத்துகளின் உரிமையாளர்கள் அவர்களே.
அந்தச் சொத்துகள் மேல் ஏதாவது சந்தேகம் இருந்தால், அவர்களிடம் விசாரணை நடத்திக்கொள்ளலாம். இதில் ஏ1 ஜெயலலிதாவுக்கு எந்தத் தொடர்பும் கிடையாது. இது பினாமி சட்டத்துக்கும் எதிரானது.
நீதிபதி: ஊழல் தடுப்புச் சட்டம் 1988 க்கு பிறகு உள்ள சட்டங்களைப் பேசுங்கள். பழையவற்றை நீக்க வேண்டும்.
நாகேஸ்வர ராவ்: இந்திய சாட்சியச் சட்டம் (எவிடென்ஸ் ஆக்ட்) 106-ன் படி ஒருவர் மீது குற்றம் சாட்டினால், அந்தக் குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களை குற்றம் சுமத்துபவர்களே நீதிமன்றத்தில் முதலில் நிரூபிக்க வேண்டும்.
அதன் பிறகே குற்றம்சாட்டப்பட்டவர்கள் தன் மீதுள்ள குற்றசாட்டுகளின் ஆதாரங்களை மறுப்பார்கள். இந்த வழக்கில் என் மனுதாரர் மீது குற்றம் சுமத்தும் அரசு தரப்புதான் நீதிமன்றத்தில் முதலில் என் மனுதாரர் மீதுள்ள குற்றங்களை நிரூபிக்க வேண்டும்.
ஆனால், அரசு தரப்பு என் மனுதாரர் மீதுள்ள குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களை நீதிமன்றத்தில் நிரூபிக்கவில்லை.
எனது மனுதாரர் கட்டியதாகக் கூறப்படும் கட்டடத்தின் மதிப்பு குறித்து கீழமை நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவர்களின் வாக்குமூலத்தை பெற்று பதிவுசெய்துள்ளது.
அதை அடிப்படையாக வைத்து கீழமை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது ஏற்கத்தக்கதல்ல. மேலும், பொது ஊழியர்களாக இருப்பவர்கள் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளை விசாரிக்கக் கூறிய வழிமுறைகளைப் பின்பற்றவில்லை.
நீதிபதி: அரசு ஊழியர்கள் மீதுள்ள ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க வழிமுறைகள் உள்ளது. ஆனால் எம்.எல்.ஏ., எம்.பி.,க்கள் போன்ற மக்கள் பிரதிநிதிகள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க தனி வழிமுறைகள் ஏதும் இல்லை.
பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ், மகாராஷ்ட்ரா முன்னாள் முதல்வர் ஏ.ஆர்.அந்துலே, ஹரியனா முன்னாள் முதல்வர் ஓம்பிரகாஷ் சவுதலா ஆகியோர் மீதான புகார்களை விசாரிக்க என்ன வழிமுறைகளைப் பின்பற்றினார்களோ, அதே வழிமுறைகளை இந்த வழக்கிலும் பின்பற்றலாம்.
‘இந்த வழக்கில் கீழமை நீதிமன்றத்தைப் போலவே மேல்முறையீட்டிலும் அரசு வழக்கறிஞருக்கு உதவியாக இருக்க எங்களை 3 ஆம் தர வாதியாக ஏற்றுக்கொண்டு எங்களுடைய எழுத்துபூர்வமான வாதத்தைப் பதிவுசெய்ய அனுமதிக்க வேண்டும்’ என்று கடந்த 5 ஆம் தேதி நீதிபதி குமாரசாமியிடம் அன்பழகன் தரப்பு வழக்கறிஞர்கள் மனு கொடுத்தனர்.
அதையடுத்து நீதிபதி குமாரசாமி அரசு தரப்பையும் ஜெயலலிதா தரப்பையும் எதிர்மனு தாக்கல் செய்யச் சொன்னார். அவர்கள் 13 ஆம் தேதி தாக்கல் செய்வதாகச் சொன்னார்கள்.
அதையடுத்து கடந்த 13 ஆம் தேதி அன்பழகன் மனு விசாரணைக்கு வந்தது.
நீதிபதி குமாரசாமி: (அந்த மனுவைப் படித்துவிட்டு) நீங்கள் அரசு வழக்கறிஞருக்கு உதவுகிறீர்களா… இல்லை, எழுத்துபூர்வமாக வாதிடுகிறீர்களா? இதில் ஏதாவது ஒன்றை மட்டும்தான் குறிப்பிட வேண்டும். நீங்கள் இரண்டையும் குறிப்பிட்டு இருப்பது ஏற்புடையதல்ல.
குமரேசன் (அன்பழகன் தரப்பு வழக்கறிஞர்): (மௌனம்)
நீதிபதி: உங்கள் மனுதாரர் அன்பழகன் எங்கே?
குமரேசன்: அவர் வரவில்லை. அவருக்கு 92 வயதாகிறது. நீதிமன்றமும் அவருக்கு விதிவிலக்கு அளித்திருக்கிறது.
நீதிபதி: அவர் வழக்கறிஞரா?
குமரேசன்: இல்லை
நீதிபதி: சிவில் சட்டத்தில் மனுதாரர் ஆஜராக வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், நீங்கள் கொடுத்திருக்கும் மனு 301/2 என்பது கிரிமினல் வழக்கு.
இதில் கட்டாயம் மனுதாரர் நேரில் ஆஜராகிதான் இந்த மனுவைக் கொடுக்க வேண்டும். இந்த அடிப்படைக்கூட உங்களுக்குத் தெரியாதா? நீங்கள் எத்தனை வருடம் வழக்கறிஞராக அனுபவம் பெற்றிருக்கிறீர்கள்? இந்த மனுக்கள் அனைத்தையும் பதிவாளரிடம் கொடுத்து, முறையாக வரட்டும். விசாரிக்கலாம்.
ஜெயலலிதா வீட்டில் சசிகலா இருக்க என்ன காரணம்?
‘‘வழக்கு காலகட்டத்தில் ஜெயலலிதா எந்தவிதமான சொத்துக்களையும் வாங்கவில்லை. வழக்கு காலகட்டத்துக்கு முன்பே பல சொத்துகள் வாங்கப்பட்டது.
அதற்கு ஒவ்வொரு ஆண்டும் வருமான வரித்துறையில் கணக்குகள் காண்பித்து வரி செலுத்தியும் இருக்கிறார்.
வருமான வரித்துறையும் அந்த சொத்துகளை மதிப்பீடு செய்து ஏற்றுக்கொண்டுள்ளது. அதேபோல சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு சொந்தமான நிறுவனங்களின் சொத்துகளுக்கு வருமான வரித்துறையில் வரிகளைச் செலுத்தி இருக்கிறார்கள்.
இந்தச் சொத்துகள் அனைத்தும் தங்களுடையது என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள். அதை வருமான வரித்துறையினரும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
இப்படியிருக்கும்போது இந்தச் சொத்துகள் அனைத்தும் ஜெயலலிதாவுக்குச் சொந்தமானது என்று தமிழக ஊழல் தடுப்பு போலீஸார் குற்றம்சாட்டுவது தவறு.
என் மனுதாரரைக் குற்றவாளியாக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் அன்றைய ஆளுங்கட்சியினரை திருப்திபடுத்தும் விதமாக தமிழக ஊழல் தடுப்பு போலீஸார் செயல்பட்டிருக்கிறார்கள்.
ஜெயலலிதாவின் போயஸ்கார்டன் வீட்டில் சசிகலா வசித்து வருகிறார் என்ற ஒரே காரணத்துக்காக சசிகலா பெயரிலுள்ள சொத்துகள் அனைத்தும் ஜெயலலிதாவுக்குச் சொந்தம் என்று சொல்வது அநியாயம்.
ஜெயலலிதா வீட்டில் சசிகலா இருப்பதற்கு என்ன காரணம் என்று ஜெயலலிதா நீதிமன்றத்தில் விளக்க வேண்டும் என்று தமிழக ஊழல் தடுப்பு போலீஸார் கூறியிருக்கிறார்கள்.
என் மனுதாரருக்கு சொந்தமான வீட்டில் யார் இருக்கலாம் என்று முடிவு செய்யும் உரிமை அவருக்குதான் உண்டு. இதில் யாரும் தலையிட முடியாது’’ என்று வாதிட்டார்.
விறுவிறு வாதங்கள் நாளையும் தொடரும்…
– வீ.கே.ரமேஷ்
படங்கள்: ரமேஷ் கந்தசாமி, வி.சதீஸ்குமார்
குமார்: நீங்கள் 1996-ல் பதிவு செய்த குற்றசாட்டு ஆவணங்களை தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கச் சொல்லி ஆணையிட்டீர்கள். ஆனால், கர்நாடக மொழிபெயர்ப்புத் துறையில் அதற்கான ஆட்கள் இல்லை என்று ஆவணங்கள் திரும்பி வந்துவிட்டது.
நீதிபதி: மொழிபெயர்ப்புத் துறை இயக்குநருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்க வேண்டுமா? மொழிபெயர்ப்புத் துறையின் இயக்குநர் மாலை 3 மணிக்கு நேரில் ஆஜராகி சரியான விளக்கம் அளிக்க வேண்டும்.
ஆட்கள் இல்லாமல் எதற்காக தனியாக மொழிபெயர்ப்புத் துறை என்று இருக்கிறது. அனைத்து மொழியிலும் உள்ள ஆவணங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்து கொடுப்பது அந்தத் துறையின் பணி.
விறுவிறு வாதங்கள் தொடரும்…
– வீ.கே.ரமேஷ்
படங்கள்: க.தனசேகரன்
யார் இந்த நீதிபதி சி.ஆர்.குமாரசாமி? ( ஜெ. வழக்கு விசாரணை: பகுதி -1,2)
60 களில் கதாநாயகிகளின் சம்பளம் எவ்வளவு? ( ஜெ. வழக்கு விசாரணை: பகுதி -3,4)