பிரெஞ்சு ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கிய ஜெர்மன்விங்ஸ் விமானத்தின் இரண்டாம் விமானி ” வேண்டுமென்றே விமானத்தை அழிக்க” விரும்பியதாக பிரெஞ்சுப் புலனாய்வாளர்கள் கூறியிருக்கின்றனர்.

கீழே விழுந்த விமானத்தின் விமானியறை ஒலிப்பதிவுக் கருவியில் இருந்து கிடைக்கப்பெற்ற ஒலிகளை ஆராய்ந்த பின்னர் கருத்து வெளியிட்ட மர்செய் நகர அரச சட்ட நடவடிக்கை அதிகாரியான பிரீஸ் ரொபென்,

விமானம் விழும் வரை இரண்டாம் விமானி விமானத்தின் கட்டுப்பாட்டை தன் வசம் கொண்டிருந்தார் என்றும், உயரப் பறந்துகொண்டிருந்த அந்த விமானத்தை தாழக் கொண்டுவந்தது அவர் தான் என்றும் கூறினார்.

Andreas_Lubitz_3246487b copie

டுவிட்டரில் இருந்து எடுக்கப்பட்ட இரண்டாம் விமானி அந்த்ரேயாஸ் லுபிட்ஸ் புகைப்படம். படம் உறுதிசெய்யப்படவில்லை.

“விமானத்தின் கட்டுப்பாட்டை எடுத்துக்கொள்ளூம்படி முதன்மை விமானி, இரண்டாம் விமானியிடம் கேட்பதை நாங்கள் ஒலிப்பதிவுக் கருவியிலிருந்து கேட்டோம். அதையடுத்து விமானியிருக்கை பின்நோக்கி நகரும் சத்தமும் கதவு சாத்தப்படும் சத்தமும் கேட்டது.

முதன்மை விமானி கழிவறைக்கு செல்வதற்காக எழுந்து சென்றார் என்றுதான் எங்களால் யூகிக்க முடிகிறது. அந்த நேரம் இரண்டாம் விமானி, விமானத்தை தனியாளாக செலுத்துகிறார்.

விமானத்தின் உயரத்தை தாழ்த்துவதற்கான கட்டுப்பாட்டு இயக்கங்களை அவரேதான் அழுத்தினார். ஆகவே விமானத்தின் உயரத்தை குறைப்பதென்பது வேண்டுமென்றேதான் செய்யப்பட்டுள்ளது.” என்றார் பிரீஸ் ரொபென்.

ஒலிப்பதிவு கருவியில் கேட்கும் ஒலிகளை மேலும் ஆராய்ந்ததில், முதன்மை விமானி கட்டுப்பாட்டுக்கு அறைக்கு திரும்பி வர முயலும்போது, கதவு தாழிடப்பட்டிருந்தது என்றும் கதவைத் திறக்கச் சொல்லி கேட்டபோது பதிலொன்றும் இல்லை என்றும் ரொபென் கூறினார்.

இரண்டாம் விமானி அறைக்குள்ளிருந்து மூச்சு விடும் சத்தம் மட்டும் கேட்டது என்றும், எனவே விமானம் தரையில் மோதும் வரை அவர் உயிருடன் தான் இருந்துள்ளார் என தமக்கு தெரியவருவதாகவும் சட்ட நடவடிக்கை அதிகாரி தெரிவித்துள்ளார்.

“விமானத்தை தாழப் பறக்கச் செய்வதற்கான பட்டன்களை ஏதோ ஒரு காரணத்துக்காக அவர் வேண்டுமென்றேதான் அழுத்தியுள்ளார்.

விமானத்தை தரையில் மோதி அழிப்பதுதான் அதன் நோக்கம் என எண்ணத் தோன்றுகிறது.”என்றார் பிரீஸ் ரொபென்.

விமானி வலுக்காட்டாயமாக விமானியறைக்குள் நுழையும் வரை எல்லாம் மிகவும் அமைதியாக இருந்தது என்றூம், ஆனால் விமானம் மோதுவதற்கு சற்று முன்பாக பயணிகள் பயத்தில் அலறுவது கேட்டது என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

விமானம் தாழ்வாகிக்கொண்டு போகவும் விமானக் போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் அந்த விமானத்தை பலமுறை தொடர்புகொள்ள முயன்றும் விமானத்திலிருந்து பதில்வரவில்லை என ரொபென் கூறினார்.

இரண்டாம் விமானி விவரங்கள்

இரண்டாம் விமானி 28 வயதுகொண்டவர் என்றும் அவர் பெயர் அண்ட்ரேயாஸ் லுபிட்ஸ் என்றும் ரொபென் குறிப்பிட்டார். 2013ல் விமானியாக தேர்ச்சி பெற்றவர் அவர் என்றும், அவர் 650 மணி நேரம் விமானம் ஓட்டியுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

அவருக்கு பயங்கரவாதிகளுடன் எவ்விதத் தொடர்பும் இருப்பதாக தங்களிடம் தகவல் இல்லை என்றும் அவரின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி ஜெர்மன் விசாரணையாளர்கள் கூடுதலாக ஆராய்வார்கள் என்றும் பிரான்ஸ் சட்ட நடவடிக்கை அதிகாரி தெரிவித்துள்ளார்.

முதன்மை விமானி பத்து வருடத்துக்கும் மேலாக அனுபவம் கொண்டவர் என்றும் கூறப்படுகிறது.

150 பேர் பலி

லுஃப்தான்சாவின் கிளை நிறுவனமான ஜெர்மன்விங்ஸுக்கு சொந்தமான ஏர்பஸ் 320 விமானம் ஒன்றுதான் பார்செலோனாவிலிருந்து டுஸ்ஸெல்டார்ஃப் செல்லும் வழியில் அல்ப்ஸ் மலைகளில் விழுந்து நொறுங்கியிருந்தது.

விமானத்தில் இருந்த பயணிகளும் சிப்பந்திகளுமாக 150 பேர் இந்த சம்பவத்தில் உயிரிழந்திருந்தனர்.

Share.
Leave A Reply

Exit mobile version