சாதி-நீர்-விஷம்- யாரோடு நோவோம்?
தனியொருமனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்று சொன்னான் பாரதி. ஆனால் தனியொரு மனிதனுக்கு நீர்கூட கிடையாத உலகில் நாம் வாழ நிர்ப்பந்திக்க பட்டுள்ளோம்.
1993ம் ஆண்டு மார்ச் -22ம் திகதியை ஐக்கிய நாடுகள் சபை உலக தண்ணீர் தினமாக பிரகடனப்படுத்தியது.அன்றிலிருந்து இன்றுவரை இத்தினமானது சர்வதேச அளவில் மக்களுக்கான தண்ணீர் பிரச்னை மீது கருசனை கொள்ள வேண்டிய தினமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
நிலத்தடி நீரை அடிப்படையாக கொண்டியங்கும் மென்பான தொழிற்சாலைகளையும் தண்ணீரை மாசுபடுத்தும் தொழில் சாலைகளையும் நிறுவனங்களையும் மூடிவிடுமாறு கோரும் விழிப்பு கூட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் வீதி ஊர்வலங்களும் உலகம் தழுவிய வகையில் இன்றைய தினத்தில்தான் நிகழ்த்தப்பட்டு வருகின்றன.
இந்தியாவின் புண்ணிய நதிகள் என்றும் தீரா நோய்களையும் தீர்க்கும் வல்லமை கொண்ட மருத்துவ தன்மை வாய்ந்தவை என்றும் போற்றப்பட்ட கங்கை, ஜமுனை, காவேரி அனைத்துமே இறந்த நதிகளாகி விட்டன.
உலக புகழ் கொண்ட லண்டன் நகரில் ஓடும் ஜேம்ஸ் நதி இறந்த நதியாகவே அறிவிக்கப்பட்டாகிவிட்டது.
இந்த ஜேம்ஸ் நதி பற்றி மட்டுமல்ல தனது கிராமத்து தில்லையாற்றங்கரை போன்ற நதிகளை அடிப்படையாக கொண்டும் ஈழத்து மூத்த எழுத்தாளியாகிய இராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் தனது நாவல்களை படைத்திருக்கின்றார்.
தமிழ் நாட்டிலுள்ள திருப்பூர் பிரதேசத்தின் பெனியன் தயாரிக்கும் சாய தொழில் சாலைகள் எவ்விதம் அப்பிரதேசத்தையும் அங்கு ஓடும் ஆறு குளங்களையும் மாசுமடுத்துகின்றன என்பதை நேரில் சென்று பார்க்கும் ஆர்வத்தை எனக்கு தந்தது (இந்த கட்டுரையாளருக்கு) சுப்ரபாரதி மணியன் எழுதிய சாயத்திரை என்னும் நாவலாகும்.
இந்த வகையில் நீரின் முக்கியத்துவம் அதன் அவசியம் நீரின் தூய்மை பற்றியெல்லாம் உலகின் நோக்கும் சிந்தனையும் எங்கெங்கோ போய் கொண்டிருக்கின்ற இந்த காலத்தில் அதுவும் இன்றைய தண்ணீர் தினத்தில்
நானோ துரதிஸ்ட வசமாக பள்ளி செல்லும் பாலகர்கள் குடிக்கும் நீரிலே நஞ்சினை கலந்த நமது தமிழ் பெருங்குடிகளை பற்றி எழுத நிர்ப்பந்திக்க பட்டுள்ளேன்.
கவுதம புத்தர் ஒரு வழிப்பாதையால் சென்று கொண்டிருக்கும் போது அவருக்கு தண்ணீர் தாகம் எடுத்ததாம் அப்போது தெருவில் தண்ணீர் பானையுடன் எதிரே வந்துகொண்டிருந்த ஒரு பெண்ணை அணுகி தாகத்துக்கு கொஞ்சம் தண்ணீர் தர வேண்டும் என்று கேட்டாராம்.
அப்போது அந்த பெண்ணோ “நான் மகர் ஜாதியை சேர்ந்தவள்” என்றாளாம்.அதற்கு புத்தரோ நான் உன் ஜாதியை கேட்கவில்லை தண்ணீர்தான் கேட்டேன் என்று பதிலிறுத்தாராம்.
இந்த கதையிலிருந்து இந்த ஜாதிக்கு தண்ணீருக்குமான தொடர்பு எத்தகைய பழமை வாய்ந்தது என்பதை நாம் உணர முடியும்.அது இன்று ஏழாலையில் வந்து நிற்கின்றது.
இத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும் இந்த ஜாதியின் தொடர்ச்சி நிலைத்தே இருக்கிறதே? மாற்றம் ஒன்றே மாறாததென்பர் அறிஞர் ஆனால் நாமோ மாற்றம் என்பது மட்டுமல்ல இந்த ஜாதி என்பதும் மாறாதது என்று புது மொழி படைக்க வேண்டியுள்ளது.
மறுபுறத்தில் தண்ணீரை கொண்டு பழி தீர்ப்பதோ நீரிலும் உணவிலும் நஞ்சினை கலப்பதோ ஒன்றும் நமது தமிழர் பெருங்குடி பாரம்பரியத்தில் ஒன்றும் புதிய விடயமல்ல.
நல்லூருரில் இருந்த சோனகர்களை குடியெழுப்ப அவர்களின் கிணறுகளுக்கும் பன்றி இறைச்சிகளை போட்டு காரியம் சாதித்த பின்பே அங்கு கந்தசுவாமி கோயில் கட்டப்பட்டது என்கின்ற வரலாறுகள் எமது பாரம்பரியத்தின் வீரம் எப்படி தண்ணீரை கொண்டே மற்றயோரை பழிவாங்கியது என்பதற்கான ஆதாரமாக என் கண்முன்னே நிற்கின்றது .
மாவிலாறு அணைக்கட்டை மூடி சிங்கள மக்களுக்கு செல்லும் நீரை தடுத்து நிறுத்திய மனித நாகரிகமற்ற செயலையும் புலிகள் எழிலன் தலைமையில் செய்தனர்.
இறுதி யுத்தத்தின் போது கல்மடுக்குளம் இராணுவத்தினரை இலக்கு வைத்து புலிகளால் உடைக்கப்பட்டது.
உலகில் யாருமே எந்த யுத்தத்திலும் நஞ்சையும் நீரையும் யுத்த கருவியாக பாவித்ததாக வரலாறுகள் இல்லை ஆனால் அதனை தமிழீழ விடுதலையின் பெயரில் புலிகள் செய்தனர்.
இவற்றையெல்லாம் அதை எந்த பத்திரிகைகள் கண்டித்தன? நஞ்சூட்டலோ நீரை யுத்த கருவியாக பாவிப்பதோ மரபல்ல முறையல்ல மனிதாபிமானம் அல்ல அது மானிடகுல விழுமியங்களுக்கு எதிரானது, அநாகரிகமானது, தடைசெய்யப்பட்டது என்று எந்த பத்திரிகைகள், எந்த புத்தி ஜீவிகள், எந்த பாதிரிமார் அறிக்கை விட்டனர்?
இவற்றைத்தானே தமிழ் வீரம் என்று போற்றினோம்?, உணவிலே விஷம் கலந்து மட்டக்களப்பு போராளிகளை கொன்றபோது பொட்டம்மான் விடுவாரா துரோகிகளை? என்று மார்பு தட்டினோம்.
மாவிலாறிலே எழிலன் சந்நதமாடிய போது தண்ணீரின்றி சிங்கள குடிகளெல்லாம் மாண்டு போகட்டும் என்று சாபமிட்டோம்.
கல்மடுக்குளத்தை புலிகள் உடைத்தபோது அதோ மிதந்து வருகின்றன ஆயிரம் சிங்கள இராணுவத்தின் உடல்கள் என்று பொய்யாகவேனும் பூரித்து நின்றோம்.
பல்லாண்டுகளாக அல்ல பல நூறாண்டுகளாக இதுவே எமது கலாசாரம், இதுவே எமது பண்பாடு என்றாகி விட்டது. அதனால்தான்
இன்று யாழ் ஏழாலை ஸ்ரீமுருகன் வித்தியாலயத்தின் தலித் சமூக பச்சிளம் பாலகர்கள் குடிக்கும் நீரில் விஷம் கலக்கப்பட்டிருக்கிறது.சாதி-நீர்-விஷம்- யாரோடு நோவோம்?
– மட்டுநகரிலிருந்து எழுகதிரோன்