பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ்  கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பிலான பல்வேறு தரவுகள் முன்வைக்கப்பட்டாலும் யுத்தம் முடிவுக்கு கொண்டு வந்ததன் பின்னரான காலப்பகுதியில் பயங்கரவாதிகள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களில் 219 பேரே  தற்போது சிறைச்சாலை தடுப்பு காவலில் இருப்பதாக நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

மேற்குறித்த தரவுகளின் அடிப்படையில் குற்றம் உறுதிப்படுத்தப்பட்டதன் பிரகாரம் 54 பேரிற்கு  தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகவும். மேலும் 9 பேர் வரையில் இதுரரை பினையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் இதன்போது சுட்டிகாட்டினார்.

தமிழ் அரசியல் கைதிகள் , வடக்கில் யுத்ததினால் இடம்பெயர்ந்தோர் தொடர்பிலான சர்வ மத பேரவையுடனான விஷேட கலந்துரையாடல் நீதி அமைச்சில் இடம்பெற்றது. இதன்போது எத்தாலன்பே தம்மாலோக தேரர் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்;பில் உண்மையான தகவலை வெளியிடுமாறு விடுத்த கோரிக்கைக்கு அமையவே  இந்த தகவலை வெளியிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் தகவளிக்கையில்,

யுத்தம் முடிவடைந்து ஆறு வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில் சர்வதேச அளவில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டோர் தொடர்பில் பரவலாக பேசப்படுகிறது.

உள்ளூர் ஊடகங்களில் மாத்திரமின்றி சர்வதேச ஊடகங்களும் இது தொடர்பில் விஷேட கவனம் செலுத்துகிறது.

அத்தோடு சர்வதேச அரங்கிற்கு  சென்றாலும் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பிலேயே இலங்கையின் மீது கேள்வியெழுப்புகின்றனர்.

யுத்தம் முடிவடைந்து ஆறு வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில் எந்நவொரு விசாரணைகளும் இன்றி பல்லாயிரக்கணக்கானோர் சிறையிலேயே பல வருடக்காலம் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவே குற்றம் சுமத்தப்படுகிறது.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பான்மையானோர் அப்பாவிகள் என்றே கூறப்படுகிறது.

இந்நிலையில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் பல்வேறு தரவுகள் வெளியிடப்படுகின்றன. இதன்படி பல்லாயிரக்கணக்கானோர் குறித்த சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாகவே கூறப்படுகின்றன.

எனினும் இது தொடர்பில் சட்டத்திணைக்களம்,சிறைச்சாலை அதிகாரிகளினால் உரிய வகையில் பரிசீலனை மேற்கொண்டதன் பின்னர் இது தொடர்பிலான உண்மை தகவல்கள் எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளன.

இதன்பிரகாரம் தற்போது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 219 பேரே தடுப்பு காவலில் உள்ளனர்.

இதன்படி பயங்கரவாத சட்டத்தின் கீழ் உயர் குற்ற பத்திரத்தின் பிரகாரம் நீதிமன்றினால் வழக்கு தொடரப்பட்டு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டோர்  134 பேரும்   விசாரணை முடிவடையாத வழக்குகளின் அடிப்படையில் 60 பேரும், அதேபோன்று தடுத்து வைத்தல் உத்தரவின் பிரகாரம் மேலும் 25 பேருமாக இதுவரை மொத்தம் 219 பேர் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

எனினும் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு குற்றம் உறுதிப்படுத்தப்ட்டமையினால் 54 பேரிற்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளன.

எனவே இதுவே தற்போது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டொரின் உண்மையான தகவலாகும்.

இதேவேளை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கைது செய்யப்பட்ட 9 பேர் இதுவரையான காலப்பகுதியில் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோன்று குறித்த சட்டத்தின் பிரகாரம் கைது செய்யப்பட்டவர்களில் 45 பேரிற்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் பலர் புனர்வாழ்வு பெற்று சென்றுள்;ளனர்.

அத்தோடு காணமல்போனோர் தொடர்பில்  நியமிக்கப்பட்ட விசாரணை ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதன்பின்னர் காணமல் போனோர் தொடர்பில் காத்திரமான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்

Share.
Leave A Reply

Exit mobile version