நட்புறவு ரீதியான உறவுக்காக உதவி செய்வதென்பது எந்தவிதமான பிரதியுபகாரமும் எதிர்பார்க்காத உதவியாகும். ஆனால், அரசியல் ரீதியாக எவருக்காவது உதவி செய்வதென்பது பிரதியுபகாரமாக எதனையாவது எதிர்பார்க்கும் உதவியாகும். எனவே இரண்டு உறவுகளுக்கும் உள்ள வித்தியாசத்தை புரிந்து கொள்ள வேண்டும்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவிற்கு தங்குவதற்காக எனது வீட்டை வழங்குவது நட்பு ரீதியானதாகும் என தெளிவுபடுத்தினார். இலங்கையின் முன்னணி தொழிலதிபரான ஏ.எஸ்.பி. லியனகே.
எதுவிதமான பிரதியுபகாரத்தையும் எதிர்பார்க்காமல் நட்புக்காக ஒரு ஏக்கரில் நிர்மாணிக்கப்பட்ட (160 பர்ச்சஸ் காணியில்) அமைந்த பீகொக் மாளிகையே முன்னாள் ஜனாதிபதிக்கு வழங்கப்படவுள்ளது.
இந்த பீகொக் மாளிகை இராஜகிரியவில் அமைந்துள்ளது. அது தொடர்பாக அதன் உரிமையாளரான ஏ.எஸ்.பி. லியனகேவை நேரில் சந்தித்து பேட்டி கண்ட போது அவர் தெரிவித்த கருத்துக்களை உங்களோடு பகிர்ந்து கொள்கின்றோம்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுடன் எனக்கு நல்ல நட்பு உள்ளது.
அத்தோடு நாட்டில் யுத்தத்தை முடித்து பயங்கரவாதத்தை ஒழித்து ஒன்றுபடுத்திய தலைவர் அவர்.
எனவே, அவ்வாறானதொரு தலைவர் சிறிய வீட்டில் நான்கு சுவர்களுக்குள் முடங்கியிருப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. எனவேதான் எனது விசாலமான வீட்டை முன்னாள் ஜனாதிபதியின் குடும்பத்தினர் தங்குவதற்காக இலவசமாக வழங்குகின்றேன்.
ஏற்கனவே இந்த விசாலமான வீட்டை 8 இலட்சம் ரூபாவுக்கு வாடகைக்கு வழங்கியிருந்தேன். தற்போது இதனை நட்புக்காக இலவசமாகவே வழங்குகின்றேன். இதில் அரசியல் நோக்கம் எதுவும் கிடையாது. எந்தவிதமான பிரதியுபகாரத்தையும் எதிர்பார்க்கவில்லை.
இது தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் தெளிவாகியுள்ளார்.
அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்னவுக்கும் எனது நோக்கம் தொடர்பாக தெளிவுபடுத்தியுள்ளேன்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது எனக்கு மதிப்பும் மரியாதையும் உள்ளது. எனவே எனது இந்த செயற்பாடு தொடர்பில் உண்மை நிலைமையை அரசு புரிந்து கொண்டிருக்கும்.
எனது வீட்டை அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்த வழங்கவில்லை என்பதை மீண்டும் இங்கு வலியுறுத்த விரும்புகிறேன் எனத் தெரிவித்த ஏ.எஸ்.பி. லியனகே எமது கேள்விகளுக்கு பதிலளிக்கையில்
கேள்வி: கடந்த ஜனாதிபதித் தேர்தலில் நீங்கள் போட்டியிட்டீர்கள்? அத்தோடு இதுவரையில் எத்தனை தேர்தலில் போட்டியிட்டுள்ளீர்கள்?
பதில்: கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தொழிலாளர் கட்சியான எனது தலைமையில் உள்ள கட்சியில் போட்டியிட்டேன்.
இதன் போது மஹிந்த ராஜபக் ஷவிற்கே எனது ஆதரவினை வழங்கினேன். இதற்கு முன்னர் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலிலும் போட்டியிட்டேன்.
கேள்வி: கடந்த ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக் ஷ தோல்வி கண்டு மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றார். எனவே இன்றைய நிலையில் உங்களது ஆதரவு யாருக்கு?
பதில்: ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது எனக்கு மதிப்பும் மரியாதையும் உள்ளது. கடந்த கால ஆட்சியில் சில பிழையான தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. சில பிழைகளாலும் தவறான வழிநடத்தல்களினால் கடந்த ஆட்சியில் சில விடயங்கள் தடம்புரண்ட சந்தர்ப்பங்களும் இருந்தன.
எனவே, கடந்த அரசு தோல்வி கண்டது. இது அரசியல் ஆனால் அதற்காக முன்னாள் ஜனாதிபதியுடனான எனது நட்புறவில் எந்த விதமான முறுகலும் ஏற்படவில்லை. அவர் எனது நல்ல நண்பர். அதற்காகவே உதவி செய்கிறேன். அவர் உதவி கேட்டார் அதனை செய்கிறேன்.
கேள்வி: உங்களது பீ.கொக் மாளிகையை மஹிந்த ராஜபக் ஷவிற்கு இலவசமாக வழங்கும் அளவிற்கு உங்கள் மனதில் தோன்றிய எண்ணம் யாது?
பதில்: இந்த நாட்டை யுத்தத்திலிருந்தும் பயங்கரவாதத்திலிருந்தும் மீட்டு அனைத்து இன மக்களையும் நாட்டையும் பாதுகாத்த ஒரு தலைவர். 10 – 20 பர்ச்சுக்குள் நான்கு சுவர்களுக்குள் முடங்கிக் கிடந்தார்.
அப்போது நான் கேட்டே.ன் ஏன் உங்களுக்கு உத்தியோகபூர்வ வாசஸ்தலம் கிடைக்கவில் லையா என்று. நானும் பிள்ளைகளும் ஒவ்வொரு இடத்தில் தான் தங்கியிருக்கின்றோம் என்றார். இதனை என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
எனவேதான் எனது வீட்டை வழங்கத் தீர்மானித்தேன்.
நான் எனது வாழ்க்கையில் கஷ்டப்பட்டுத்தான் முன்னேறினேன். ஆனால் பெரிய செல்வந்தன் அல்ல.
அதே நேரம் ஏழையும் அல்ல.
எனவே ஒரு ஏக்கரில் (160 பர்ச்சஸ் காணியில் அமைந்த) எனது பீக்கொக் மாளிகைக்கு அவருக்கு வாடகையில்லை தற்காலிகமாக வாழ்வதற்கு வழங்குகின்றேன்.
கேள்வி: இதற்கு பீகொக் மாளிகை என்ற பெயர் வரக் காரணம் என்ன?
பதில்: தியவன்ன ஆற்றுப்படுகை எனது வீட்டை சுற்றிச் செல்கிறது. இங்கு அதிகளவில் அந்தக்காலத்தில் மயில்கள் நடமாடின. எனவே தான் பீகொக் மாளிகை என்ற பெயர் வந்தது.
கேள்வி: ஏற்கனவே நிர்மாணிக்கப்பட்ட வீட்டை விலை கொடுத்து வாங்கினீர்களா?அல்லது உங்களால் நிர்மாணிக்கப்பட்டதா?
பதில்: இது ஏற்கனவே நிர்மாணிக்கப்பட்டதல்ல. காணியை கொள்வனவு செய்து உலகப் புகழ்பெற்ற நிர்மாணக் கட்டடக் கலைஞர் ஜெப்ரி பாவாவினால் வடிவமைக்கப்பட்டு நேர்த்தியாக நிர்மாணிக்கப்பட்டது தான் இந்த மாளிகையாகும்.
கேள்வி: இந்த மாளிகையை அன்பளிப்பாகவா முன்னாள் ஜனாதிபதிக்கு வழங்கப் போகிறீர்கள்.
பதில்: இதற்கு முன்னர் வெளிநாட்டு பிரஜை ஒருவருக்கு இந்த வீட்டை ரூபா 8 இலட்சம் வாடகைக்கு வழங்கியிருந்தேன்.
ஆனால் முன்னாள் ஜனாதிபதி தங்குவதற்கு எதுவிதமான வாடகையும் இல்லாமல் இலவசமாகவே வழங்குகின்றேன்.
கேள்வி: வீட்டை மட்டுமல்ல உங்களது தலைமையிலான தொழிலாளர் கட்சியையும் முன்னாள் ஜனாதிபதிக்கு தாரை வார்க்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளனவே?
பதில்: இதற்கு முன்பும் நான் பதிலளித்தேன். நண்பர் ஒருவர் ஏதாவது உதவி கேட்டால் அதனை நிவர்த்தி செய்ய வேண்டியது நட்பின் இலக்கணமாகும். எனவே தங்குவதற்கு வீட்டையும் கட்சியை கேட்டார் அதனையும் வழங்குகின்றேன்.
இதனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் அரசாங்கமும் பிழையாக தவறாக நினைக்காது.
எனவே, அரசிடமிருந்து எந்தவிதமான பிரச்சினையும் வரவி ல்லை. அரசாங்கம் உண்மையை புரிந்து கொண்டுள்ளது என் றும் ஏ.எஸ்.பி. லியனகே தெரிவித்தார்.
இந்த பீகொக் மாளிகையின் முன்பாகவுள்ள நீச்சல் தடா கம் மண் போட்டு மூடப்பட்டுள்ளமை தொடர்பில் அவர் விளக்கம ளித்த போது இந்த நீச்சல் தடாகத்தை மண்போட்டு நிரப்புமாறு சோதிடர்கள் தெரிவித்தமையால் அதனை செய்யுமாறு முன் னாள் ஜனாதிபதி மஹிந்த என்னிடம் தெரிவித்தார். எனவே தான் இதனை மண்போட்டு நிரப்பினேன் என லியனகே தெரிவித்தார்.
பீகொக் மாளிகையை நேரில் சென்று பார்த்த போது உண்மையிலேயே அதுவொரு மாளிகை தான் என்பதை புரிந்து கொண்டோம்.
இதனை பார்க்கும் போது இப்படியும் ஒரு நட்பா என்ற ஆச்சரியம் எமக்குள் ஏற்பட்டது.