“கயிற்றின் நுனி வரை சென்று விட்டாலும் தளராமல் அதில் ஒரு முடிச்சை போட்டு இறுக பற்றிக்கொள்ளுங்கள் ஏனெனில் எமக்கு சந்தர்ப்பங்கள் பல உள்ளன” என்று கூறியிருக்கிறார் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன்.
எந்த சந்தர்ப்பத்தில் அவர் கூறியிருக்கிறார் தெரியுமா? தற்கொலை செய்து கொள்ளும் மனவோட்டத்தில் இருப்பவர்களுக்கே இந்த சிந்தனை.
தற்காலிக பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வு தற்கொலையாகுமா என்ற கேள்வி தற்கொலைசெய்து கொள்பவர்களிடம் எழுவதில்லை.
வெளியாகியுள்ள கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளை ஆராய முன்னர் சித்தியடையாததால் ஏற்பட்ட தற்கொலை சம்பவங்கள் மற்றும் தற்கொலை முயற்சிகள் பற்றி ஆராய்ந்து எழுத வேண்டியுள்ளது.
புஸல்லாவை இந்து தேசிய கல்லூரியில் தரம் 12 இல் கல்வி பயின்ற லிதுர்ஸனா மகேஸ்வரன் என்ற மாணவி பரீட்சை பெறுபேறுகள் வெளிவந்த தினமன்று, தான் கணிதபாடத்தில் சித்தியடையவில்லையே என்ற மன விரக்தியில் கடிதம் எழுதி வைத்துவிட்டுத் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
2013 ஆம் ஆண்டு கல்வி பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சை எழுதிய இவர் கணித பாடத்தில் சித்தியெய்தவில்லை.
தொடர்ந்து 2014 ஆம் ஆண்டு கணித பாடத்தை இரண்டாவது தடவை எடுத்து தருவதாகக் கூறி கல்விப் பொதுத் தராதர உயர்தர வகுப்பில் பயின்று வந்துள்ளார்.
அதன் படி 2014 ஆம் ஆண்டு பரீட்சை எழுதிய இவர் அதிலும் தனக்கு வெற்றி கிடைக்கவில்லையென விரக்தி அடைந்து இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
புஸல்லாவைப்பகுதியில் தொடர்ச்சியாக 7 தற்கொலை சம்பவங்கள்
பரீட்சையில் சித்தியடையாத காரணங்கள் மட்டுமில்லாது மேலும் பல காரணிகளுக்காக புஸல்லாவை பகுதியில் கடந்த காலங்களில் தற்கொலை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
இப்பிரதேசத்தில் இரட்டைப்பாதை, அட்டபாகை, வகுகப்பிட்டிய, சவுக்குமலை, பிளக்போரஸ்ட், ரொத்சைல்ட் ,ஆகிய தோட்டங்களிலேயே இவ்வாறான தற்கொலை சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
தற்கொலை முயற்சி சம்பவங்கள்
இதேவேளை, சாதாரண தர பெறுபேறுகள் வெளிவந்தவுடன் பல இடங்களில் தற்கொலை முயற்சி சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.
அட்டன் பகுதி பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 17 மற்றும் 18 வயதுடைய இரண்டு மாணவிகள் பரீட்சை பெறுபேறு சிறந்ததாக இல்லை என்ற காரணத்தால் கால்நடைகளுக்கு வழங்கப்படும் ஒரு வகை மருந்தை உட்கொண்டுள்ளனர்.
எனினும் அயலவர்களால் உடனடியாக இவர்கள் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டுள்ளார்கள்.
இதே வேளை புஸல்லாவை டெல்டா தோட்டத்தைச்சேர்ந்த ஒரு மாணவியும் அளவுக்கதிகமான மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இலங்கையின் தற்கொலை விகிதம்
உலக நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கை தற்கொலை செய்து கொள்ளும் நாடுகளின் வரிசையில் பிரதான இடத்தை வகிப்பது சற்று அதிர்ச்சியான செய்தி தான்.
இலங்கையில் வருடந்தோறும் சராசரியாக நான்காயிரம் பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். இது நாௌான்றுக்கு சாரசரியாக 11 பேர் என்ற விகிதத்தில் அமைகின்றது.
இதில் பெரும்பான்மையானோர் 15–-44 வயதுக்கிடைப்பட்டவர்கள். 1950 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இலங்கையின் வருடாந்த தற்கொலை விகிதம் ஒரு இலட்சம் பேருக்கு 6.5 என்ற அளவில் இருந்தது.
2001 ஆம் ஆண்டு இதுவே 55 ஆக அதிகரித்துள்ளது. இதே வேளை 1996 ஆம் ஆண்டு இலங்கையில் தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 9000 ஆக பதிவாகியதில் அந்த ஆண்டு அதிக தற்கொலை செய்து கொண்ட உலக நாடுகளில் இலங்கை முதலிடத்தைப் பிடித்ததும் முக்கிய விடயம்.
2011 ஆம் ஆண்டு ஒரு இலட்சம் பேருக்கு 16 பேர் என்ற வகையில் தற்கொலை செய்து கொள்வோர் விகிதம் இருந்தது. அந்த ஆண்டிலிருந்து இந்த விகிதம் தொடர்வது வேதனைக்குரியவிடயமே
பாடசாலை மாணவர்களும் ஆற்றுப்படுத்தல் (counseling) செயல்முறைகளும்
பல்வேறு காரணங்களுக்காக தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வந்தாலும் மலையகப் பெருந்தோட்டப்பகுதிகளில் பரீட்சை பெறுபேறுகள் மற்றும் வேறு சில காரணங்களுக்காக மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதை ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது.
இந்த சம்பவங்களுக்கான அக புறக் காரணிகளை ஆராய்ந்து பார்க்க எவரும் ஆர்வம் காட்டுவதில்லை. பெறுபேறுகள் எதிர்பார்த்தவண்ணம் வராத காரணத்தினால் விரக்தியடைந்து தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் ஒரு புறம் இருக்க குடும்பத்தினர், அயலவர்கள்,நண்பர்களின் கேலிப்பேச்சுக்கு ஆளாகி மனமுடைந்து தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களையும் இங்கு குறிப்பிடல் அவசியம்.
மேலும் மலையகத்தைப் பொறுத்தவரை மாணவர் இடைவிலகல், மெல்ல கற்கும் நிலை மற்றும் தற்கொலை முயற்சி சம்பவங்களுக்கு குடும்ப மற்றும் சூழல் காரணிகளோடு பாடசாலைகளும் கூட காரணங்களாக அமைந்துள்ளன.
ஆலோசனை வழிகாட்டல் துறையின் தேவையும் தற்கொலையும்
இளம் வயதினரின் தற்கொலை முயற்சிகளை குறைப்பதற்காக முறையான வேலைத்திட்டத்தினை பாடசாலை மட்டத்தில் இருந்தே ஏற்படுத்த வேண்டும். தற்போது நடைபெற்று வருகின்ற தற்கொலை முயற்சிகளை அழகான முறையில் சம்பவ ஆய்வின் (Case Study)) ஊடாக மாணவர்களுக்கு கொண்டு சென்று தீர்வினை பெற முயற்சிக்க வேண்டும்.
பாடசாலை காலத்தில் ஏற்படுகின்ற தற்கொலைகளை குறைப்பதற்கான முறையான ஆலோசனை சேவையை அனைத்து ஆசிரியர்களும் முன்னெடுக்க வேண்டும். ஆலோசனை சேவை என்பது வெறுமனே கற்றலுக்கு மாத்திரம் உரித்தானது அல்ல என்பது இங்கு முக்கியத்துவம் பெறுகிறது.
மாணவர்களின் தற்கொலைக்கான காரணங்கள்.
வீட்டில் ஏற்படும் விரக்தி
காதல் தோல்வி
பரீட்சையில் தோல்வி
செய்யக் கூடாததை செய்து விடல்
சினிமா தாக்கம்.
நாடகங்களின் தாக்கம்
மற்றவர்களின் தூண்டுதல்கள்
மற்றவர்களின் தேவையற்ற நடவடிக்கைகள்.
பாடசாலை காலத்தில் ஏற்படும்
தற்கொலையை குறைப்பதற்கான வழிமுறைகள்
* மாணவர்களுக்கு தற்கொலை கூடாததது என்பதை வலியுறுத்த வேண்டும்.
* இறப்பு ஒரு முறைதான், போன உயிர் வராது என்பதை ஏற்றுக்கொள்ளச் செய்ய வேண்டும்.
* மாணவர்களின் பிரச்சினைகளை ஆசிரியர்களிடம் சொல்லப் பழக்குதல் வேண்டும்.
* ஆசிரியர்கள், ஆலோசனை சேவையை முறையாக வழங்க வேண்டும்.
* மாணவர்களின் பிரச்சினையை நண்பர்கள் ஊடாக ஆசிரியர்களிடம் சொல்வதற்கு பழக்குதல் வேண்டும்.
* ஆசிரியர்கள் மாணவர்களின் விரக்தி நிலையை சுமுகமாக நீக்குவதற்கான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
* பெற்றோருக்கான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
* பாடசாலைகளின் ஆலோசனை சேவையை ஸ்திரப்படுத்த வேண்டும்.
இன்று மாணவர்களுக்கு ஏற்படும் பிரச்சினையை கவனத்திற் கொண்டால், பாடசாலைகளில் ஆலோசனை சேவை அவசியம் என்ற விடயம் வெளிப்படும்.
ஆசிரியர்கள் அனைவரும் அவர்களது பயிற்சிக் காலத்தில் ஆலோசனை வழிகாட்டல் என்னும் பாடத்தை பூர்த்தி செய்தவர்களாகவே காணப்படுகின்றார்கள்.
இவர்கள் பெற்றுக் கொண்ட பயிற்சியினை அனுபவ ரீதியாகவும் தேடல் ரீதியாகவும் மாணவர்களிடம் கொண்டு சென்று ஆலோசனை வழங்க வேண்டும்.
நடைமுறைக்கேற்ப ஆசிரியர்கள் மாணவர் களை அணுகி ஆலோசனை சேவையை வழங்க வேண்டும். குறிப்பாக தற்கொலை முயற்சிகள் தொடர்பான விடயங்களை அனைத்து ஆசிரியர்களும் தெரிந்து வைத்திருத்தல், தற்கொலை தொடர்பான முடிவினை வைத்திருக்கும் மாணவர்கள் தொடர்பாக தகவல்களை சக நண்பர்களிடம் பெற்று மாணவருக்கு உரிய ஆலோசனைகளை வழங்குதல், மாணவர்களிடம் விரக்தி நிலை காணப்படுமாயின் அதற்கு பொருத்தமான ஆலோசனைகளை வழங்குதல் என்பன முக்கிய விடயங்கள்.
கல்வித் திணைக்கள மட்டத்தில் ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் செயற்பாடுகளும் மிக முக்கியமானவை.
இவ்வாறு தற்கொலையை குறைப்பதற்கான வேலைத் திட்டத்தை ஆலோசனை வழிகாட்டல் துறையின் ஊடாக தீர்த்து கொள்ள வேண்டும்.
இன்று பாடசாலைகளில் ஆலோ சனை துறையானது வெறுமனே பெயரளவில் மாத்திரம் இருந்து வருகின்றது. அதனை பயனுறுதி வாய்ந்ததாக மாற்ற உரியோர் முன்வரவேண்டும்.