தமிழகத்தின் முன்னணி எழுத்தாளர்களில் ஒருவரும் இந்தியாவில் இலக்கியத்துக்கான அதியுயர் விருதான ஞானபீட விருதைப் பெற்றவருமான ஜெயகாந்தன் புதன்கிழமை இரவு சென்னையில் காலமானர்.

ஜெயகாந்தனின் பல படைப்புகள் திரைப்படங்களாக வெளிவந்துள்ளன.

அவருக்கு வயது 81.

கடலூரில் 1934 ஆண்டு பிறந்த அவருக்கு சிறு வயதிலிருந்து பாரதியாரின் படைப்புகள் மற்றும் இடதுசாரி சித்தாந்தங்கள் மீது அதிக ஆர்வம் இருந்தது.

பள்ளிப்படிப்புக்கு பிறகு சென்னை வந்த அவர் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் சிறிய வேலைகளைச் செய்யும் பணியில் சேர்ந்தார்.

அச்சமையத்தில் அவருக்கு ஜீவா போன்ற மூத்த இடதுசாரி தலைவர்களுடன் தொடர்பு ஏற்பட்டது.

இதன் காரணமாக அவர் எழுத ஆரம்பித்தபோது அவரது படைப்புகளில் இடதுசாரி சிந்தனைகள் தெரிய ஆரம்பித்தன.

ஆழமான சமூக சிந்தனைகள், பாட்டாளி மக்களின் பிரச்சினைகள் ஆகியவற்றை கருவாகக் கொண்டு பல படைப்புகளை ஜெயகாந்தன் படைத்துள்ளார்.

ஆரம்பகாலங்களில் இடதுசாரி சிந்தனைகளின் ஆளுமைக்கு உள்ளான ஜெயகாந்தன் பின்னாளில் கம்யூனிஸக் கட்சிகளின் கொள்கைகளிலிருந்து முரண்படவும் செய்தார்.

அவர் எழுதிய ‘கருங்காலி’ எனும் சிறுகதையில் அவருக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மீதிருந்த அதிருப்தி வெளிப்படும் என்று இலக்கிய ஆய்வாளர்கள் கூறுவார்கள்.

கம்யூனிஸ சித்தாந்தங்களில் இருந்து விலகிய அவர் அரசியல் ரீதியாக காங்கிரஸ் கட்சியையும் சில காலம் ஆதரித்து, அக்கட்சியின் பத்திரிகையின் ஆசிரியராகவும் இருந்தார்.

அவர் ஏராளமான சிறுகதைகளும் நாற்பது புதினங்களையும் எழுதியுள்ளார்.

அவரது பல படைப்புகள் திரைப்படங்களாவும் வெளியாயின.

இந்தியாவில் இலக்கியத்துக்கான மிக உயரிய விருதான ஞானபீட விருது 2002 ஆம் ஆண்டுக்காக அவருக்கு வழங்கப்பட்டது.

சில நேரங்களில் சில மனிதர்கள், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள், உன்னைப் போல் ஒருவன், ஊருக்கு நூறு பேர் போன்ற அவரது படைப்புகள் மிகவும் பிரபலமானவை.

அவரது அக்னிப் பிரவேசம் சிறுகதை இன்றளவும் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.

Share.
Leave A Reply

Exit mobile version