சுவிட்சர்லாந்து நாட்டில் தொடர் குற்றங்களை புரிந்துவந்த துனிஷியா நாட்டு இளைஞரை சுவிஸ் அதிகாரிகள் நாட்டை விட்டு வெளியேற்றி உள்ளனர்.
சுவிஸில் பிறந்த துனிஷியா நாட்டு குடிமகனான மேதி(Medhi Age-24) என்ற வாலிபர் வாட்(Vaud) மண்டலத்தில் தன் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார்.
கடந்த சில வருடங்களாக திருட்டு, வழிப்பறி, பொதுச்சொத்துக்களை சேதாரப்படுத்தியது உள்ளிட்ட பல குற்றங்களை இவர் புரிந்து வந்துள்ளார்.
மேலும் வீடு புகுந்து திருடிய குற்றத்திற்காக சுவிஸ் சிறையில் சுமார் 3 வருடங்கள் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், அந்த வாலிபரிடம் இருந்த அகதிகளுக்கான C பிரிவு தங்கும் அனுமதியை கடந்த சனவரி மாதம் அதிகாரிகள் ரத்து செய்தனர்.
இதனை தொடர்ந்து, சுவிசில் குடியிருக்க அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், சிறப்பு விமானத்தின் மூலம் அவரது சொந்த நாடான துனிஷியாவிற்கு சுவிஸ் அதிகாரிகள் திருப்பி அனுப்பி வைத்தனர்.
அதிகாரிகளின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த அந்த வாலிபரின் தாயார் கூறியதாவது, எனது மகன் இதற்கு முன் துனிஷியா நாட்டிற்கு சென்றதே இல்லை என்றும், அவரை வற்புறுத்தி நாட்டை விட்டு வெளியேற்றியது கண்டிக்கத்தக்கது எனவும் கூறியுள்ளார்.
சுவிஸ் வழக்கறிஞர்களில் ஒருவரான Véronique Fontana கூறுகையில், சுவிஸ் தொடர்ந்து குடியிருக்க மேதிக்கு தகுந்த அனுமதி அளிக்கப்படாததால், அவரை நாட்டை விட்டு வெளியேற்றும் சூழல் ஏற்பட்டது என தெரிவித்துள்ளார்.
சுவிட்சர்லாந்து சட்ட விதிகள் படி, சுவிஸில் குடியிறுக்கும் வெளிநாட்டவர்களுக்கு குழந்தைகள் பிறந்தால் கூட, அவர்களுக்கு சுவிஸ் குடியுரிமை கிடைக்காது. அவர்கள் வெளிநாட்டவர்களாகவே கருதப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.