ஜெயலலிதா சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு விசாரணையில் ஏ2 சசிகலாவின் வழக்கறிஞர் பசந்த் 9 நாட்கள் வாதிட்டு தன் வாதத்தை நிறைவு செய்த பிறகு, ஏ3 சுதாகரன், ஏ4 இளவரசி சார்பாக அவரின் வழக்கறிஞர் சுதந்திரம் தன் வாதத்தைத் தொடங்கினார்.
நீதிபதி குமாரசாமி: இவ்வழக்கில் முக்கியமானது, 120பி கூட்டுச்சதி, 109 குற்றத்திற்கு உடந்தையாக இருந்தல்.
சுதந்திரம்: ஊழல் தடுப்பு சட்டம் 13(1) இ&யில் 120பி, 109 வராது. இந்த இரண்டு சட்டங்களும் ஐ.பி.சி (இந்திய தண்டனை சட்டத்தில்) தான் வரும். ஆனால் 13(1)இ&யில் இதைச் சேர்த்துள்ளது தவறு. சுதாகரன், இளவரசியும் அரசு ஊழியர்கள் கிடையாது.
அதனால், அவர்களுக்கு 13(1)இ பொருந்தாது. ஏ1 ஜெயலலிதா கூட்டுச்சதியில் ஈடுப்பட்டதற்கான எந்த ஆதாரங்களும் தமிழக ஊழல் தடுப்பு போலீஸாரால் நிரூபிக்கப்படவில்லை.
நீதிபதி: ஜெயலலிதாவை ஏன் காப்பாற்ற நினைக்கிறீர்கள் உங்கள் தரப்பு குற்றச்சாட்டுகளை மட்டும் வாதிடுங்கள். ஏ2-க்காக வாதிட்டவர், சாட்சியங்களின் ஆதாரங்களைக் சுட்டி காட்டி வாதிடவில்லை.
நீங்களாவது குற்றப் பின்னணி கொண்ட கூட்டுச்சதி, குற்றத்திற்கு உடந்தையாக இருந்தலை சாட்சிகளின் ஆதாரங்களை சுட்டிக் காட்டி வாதிட வேண்டும்.
சுதந்திரம்: உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற நல்லம்மாள் வழக்கில் அவரின் கணவர் பரமசிவம் அரசு ஊழியராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமான சொத்துகள் சேர்த்த வழக்கு நடைபெற்றது.
அந்த வழக்கில் பரமசிவமும், நல்லம்மாளும் கூட்டுச்சதி குற்றம் செய்ய உடந்தையாக இருந்ததாக 120பி, 109 பதிவு செய்யப்பட்டது.
அதை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. அதை எதிர்த்து 1999ல் உச்சநீதிமன்றத்திற்குச் சென்றார்கள் உச்சநீதிமன்றமும் அந்தக் குற்றச்சாட்டை உறுதிசெய்திருக்கிறது.
ஆனால், அதில் உச்சநீதிமன்றம் சொன்ன கருத்து என்னவென்றால், அரசு ஊழியராக இல்லாதவர்களின் விளக்கத்தைக் கேட்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறது.
ஆனால், என் மனுதாரர்களிடம் கேட்காமல் 120பி, 109 பதிவு செய்யப்பட்டுள்ளது. திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் கொடுத்த எழுத்துபூர்வமான ஆவணங்களைப் பார்க்க வேண்டாம்.
அவர்கள் எந்த ஒரு ஆதாரங்களும் இல்லாமல் கொடுத்திருக்கிறார்கள். அவர்கள் பதிவு செய்துள்ள கணக்குகள் அனைத்தும் தவறானவை.
தன்னிலை விளக்கத்தைப் படியுங்கள்!
lawyer sudanthiram
சுதந்திரம்: பல பேர் ஒரு கம்பெனியில் பங்குதாரர்களாக இருப்பதைப்போலதான் என் மனுதாரர்கள் சுதாகரனும், இளவரசியும் மெடோ அக்ரோ ஃபார்ம்ஸ், ராம்ராஜ் அக்ரோ மில்ஸ், லெக்ஸ் பிராபர்டீஸ், ரிவர்வே அக்ரோ உட்பட்ட 7 கம்பெனிகளில் பங்குதாரர்களாக இருந்தார்கள் என்பதற்காக, அந்த கம்பெனிகளின் சொத்துகள் அனைத்தும் சுதாகரனுக்கும் இளவரசிக்கும் சொந்தமானது என்று சொல்வது தவறு. ஒவ்வொரு கம்பெனிகளுக்கும் தனிப்பட்ட உரிமையாளர்கள் இருக்கிறார்கள்.
சுதாகரன் அவராகவே சூப்பர் டூப்பர் கம்பெனியைத் தொடங்கி நடத்தி வந்தார். இந்த கம்பெனிக்கு ஜெயலலிதா பணம் கொடுத்தார் என்று சொல்வது தவறு.
கம்பெனியின் வரவு செலவு குறித்து வருமானவரியில் கணக்கு காட்டி, ஒவ்வொரு வருடமும் வருமான வரி கட்டி இருக்கிறோம்.
இப்படி ஒவ்வொரு கம்பெனிகளும் வருமானவரித் துறையில் காட்டி வரியும் கட்டி இருக்கிறோம். கம்பெனியில் பங்குதாரர்கள் என்கிறபோது அந்த கம்பெனியின் லாபத்தை மட்டும்தான் பிரித்து கொடுப்பார்கள்.
ஆனால், அந்த கம்பெனியின் சொத்துகளுக்கும் என் மனுதாரர்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இதை நிரூபிக்க வேண்டியது தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறைதான்.
ஆனால் ஏ1 ஜெயலலிதாவின் பணத்தின் மூலம்தான் கம்பெனிகள் தொடங்கினார்கள் என்பதற்கு எந்த ஆதாரத்தையும் அவர்கள் நிரூபிக்கவில்லை. போயஸ்கார்டனில் தங்கி இருந்தார்கள் என்பதற்காக, என்னுடைய மனுதாரர்களை இந்த வழக்கில் சேர்த்திருக்கிறார்கள்.
நீதிபதி: இதையெல்லாம் ஏன் அப்போது சொல்லவில்லை. சொல்லி இருந்தால் அப்போது உங்கள் வழக்கில் இருந்து இந்த கம்பெனிகளை நீக்கி இருப்பார்கள்தானே?
சுதந்திரம்: இதையெல்லம் கீழமை நீதிமன்றத்தில் சொன்னோம். அதை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை.
நீதிபதி: சி.ஆர்.பி.சி 313-ன்படி குற்றவாளிகள் நீதிமன்றத்தில் சொன்ன தன்னிலை விளக்கத்தைப் படியுங்கள்.
மணிசங்கர்: 313 ஸ்டேட்மென்ட்டை முழுவதுமாகப் படித்தார்.
நீதிபதி: இதில் உங்களுக்கும் கம்பெனிகளின் சொத்துகளுக்கும் சம்பந்தம் இல்லை என்று எந்த இடத்திலும் சொல்லவில்லையே?
மணிசங்கர்: சட்டத்திற்குப் புறம்பாக போடப்பட்டுள்ளது என்று சொல்லி இருப்பதிலிருந்தே அனைத்தும் அடங்கும்.
கிரிமினல் வழக்கில் வாதிட தெரியுமா?
judge.
சுதந்திரம்: என் மனுதாரர்கள் சுதாகரனும் இளவரசியும் 7 கம்பெனிகளில் பங்குதாரராக இருந்ததோடு, நிர்வாக இயக்குநர்களாகவும் இருந்துள்ளனர். ஏ1 ஜெயலலிதாவின் வங்கிக் கணக்கில் இருந்து என் மனுதார்களுக்கோ, கம்பெனிகளுக்கோ பணப்பரிமாற்றம் நடைபெறவில்லை. அதை உரிய ஆதாரங்களோடு தமிழக ஊழல் தடுப்பு போலீஸார் நிரூபிக்கவும் இல்லை.
இதுபற்றி அரசு தரப்பு சாட்சியம் அளித்துள்ள இந்தியன் வங்கி மேலாளர் அருணாசலம் ஏ1 கணக்கில் இருந்து பணப்பரிமாற்றம் நடைபெற்றதாகக் கூறவும் இல்லை.
ஆனால், இவ்வழக்கை விசாரித்த கீழமை நீதிமன்றம் ஜெயலலிதா உட்பட நான்கு பேருக்கும் கடுமையான தண்டனை வழங்கியது. ஜெயலலிதா உட்பட நான்கு பேரும் கூட்டுச்சதியில் ஈடுபட்டதாகவும், ஜெயலலிதா குற்றம்செய்ய உடந்தையாக சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் இருந்ததற்கும் எந்த ஒரு அடிப்படை ஆதாரமும் இல்லாமல் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
நீதிபதி: (குறுக்கிட்டு) கூட்டுச்சதியில் ஈடுபடாதவர்களை எப்படி கீழமை நீதிமன்றம் தண்டித்து இருக்கும்? தமிழக ஊழல் தடுப்பு போலீஸார் ஆதாரங்கள் இல்லாமல் வழக்கைப் பதிவுசெய்யத்தான் முடியுமா?
இல்லை இந்த வழக்கை 18 வருடங்கள் நடத்தி இருக்கத்தான் முடியுமா? இல்லை, இதையெல்லாம் ஆராயாமல் கீழமை நீதிமன்றம் தீர்ப்பை வழங்கி இருக்கத்தான் முடியுமா? தேவையில்லாததைப் பேசி நீதிமன்றத்தின் நேரத்தை வீணாக்குவதைவிட, கீழமை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் உள்ள தவறுகளை உங்கள் தரப்பு ஆதாரங்களோடு நிரூபியுங்கள்.
இதுவரை 65 க்கும் மேற்பட்ட வழக்குகளின் தீர்ப்புகளை மேற்கோள் காட்டி தேவையில்லாமல் வாதிட்டுக்கொண்டிருக்கிறீர்கள். இதுவரை 20% கூட ஆதாரங்களோடு வாதிடவில்லை.
சுதந்திரம்: இல்லையென்றால், பவானிசிங் எங்கள் மீதுள்ள குற்றச்சாட்டுகளைக் கூறி வாதிடட்டும் அதற்கு பதில் சொல்கிறோம்.
நீதிபதி: (கோபத்தோடு) இதுபோன்ற கிரிமினல் வழக்குகளை எதன் அடிப்படையில் வாதிட வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஏ1 ஜெயலலிதாவைப் பற்றியே கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள்? உங்கள் மனுதாரரைப் பற்றி கவலைப்படுங்கள்.
அவர்களுடைய குற்றச்சாட்டுகளைப் பற்றி வாதிடுங்கள். உங்கள் மனுதாரருடைய தொழில்கள் என்ன? அவர்களின் மொத்த வருமானம் எவ்வளவு? அதுபோன்ற சொத்து விவரங்களைத் தாக்கல் செய்யுங்கள். வாதத்தின் அடிப்படையில்தான் தீர்ப்பு அமையும். (பவானிசிங்கைப் பார்த்து…) இதற்கு என்ன சொல்கிறீர்கள்?
பவானிசிங்: இவ்வளவு பெரிய வழக்கில் ஆதாரங்கள் இல்லாமல் வழக்கை நடத்தி இருக்க முடியாது. ஏ1 ஜெயலலிதாவின் பணம்தான் மற்றவர்களுக்கு பணபரிமாற்றம் நடைபெற்றதாக வங்கி மேனேஜர்கள் சொல்லி இருக்கிறார்கள்.
சுதந்திரம்: ஏ1 அக்கவுன்டில் இருந்து ஏ2 அக்கவுன்ட்டுக்கோ, இல்லை ஏ3, ஏ4க்கோ ஒரு சிங்கிள் பேமன்ட் போயிருந்தால்கூட என்னுடைய இந்த வழக்கறிஞர் பணியில் இருந்து விலகிக்கொள்கிறேன்.
நவநீதகிருஷ்ணன் (அதிமுக வழக்கறிஞர்): (எமோஷனாக…) யுவர் ஆனர்… பவானிசிங் இப்படி தவறான வாதம் செய்வதைப் பார்த்து தாங்க முடியவில்லை யுவர் ஆனர். தாங்க முடியவில்லை.
நீதிபதி: 201 சென்னை மைலாப்பூர் கனரா வங்கி மேலாளர் வித்யாசாகர் அரசு சாட்சியமாக கொடுத்த வாக்குமூலத்தைப் படித்து பார்க்காமல் வந்திருக்கிறீர்கள். 304 சாட்சியங்களின் வாக்குமூலங்களையும் படித்துவிட்டு வாதிடுங்கள்.
ஜெயலலிதா கைது மனித உரிமை மீறல்!
சுதந்திரம்: இவ்வழக்கில் 27.9.2014ல் கீழமை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியபோது தண்டனையை 15 நிமிடத்தில் உறுதி செய்ததுமே போலீஸ் கஸ்டடி எடுத்துக்கொள்ள உத்தரவிட்டுவிட்டார்.
வாரன்ட் காண்பித்து அதில் கையெழுத்து வாங்கிய பிறகுதான் அரெஸ்ட் செய்ய வேண்டும். ஆனால், வாரன்ட் காண்பித்து கையெழுத்து வாங்காமலேயே அரெஸ்ட் செய்தார்கள். அதேபோல தீர்ப்பு நகல் மொத்தத்தையும் குற்றவாளிகளிடம் கொடுக்க வேண்டும்.
அதுவும் கொடுக்கவில்லை. மதியம் 1 மணிக்கு வாருங்கள் சென்று சொல்லிவிட்டு மாலை 4 மணிக்கு நீதிபதி வந்தார். தண்டனை காலத்தின் நகலை 3 பக்கத்திற்கு கொடுத்தார்கள். பிறகு 14 பக்கத்தில் கொடுத்தார்கள். இப்படி சட்ட விதிமுறைகளுக்கு புறம்பாக கைது செய்யப்பட்டார். இச்செயல் மனித உரிமை மீறலாகும்.
நீதிபதி: ஆயிரம் பக்கங்களுக்கு மேல் இருப்பதால் பிரின்ட் எடுக்க தாமதமாகி இருக்கலாம். இவ்வளவு பெரிய வழக்கில் தீர்ப்பு வழங்கும் நீதிபதி, தவறுதலாக செயல்பட வாய்ப்பு இல்லை. முடிந்து போனதைப் பேசி நேரத்தை வீணாக்குவதைவிட தீர்ப்பின் தவறுகளைச் சுட்டிக்காட்டி அதற்கு ஆதாரங்கள் கொடுத்து வாதிட வேண்டும்.
எம்.ஆர்.ராதாவுக்கும் சிவாஜிக்கும் என்ன தொடர்பு?
குமார்: ஜெயலலிதாவிற்கு சொந்தமான கட்டடங்களில் கூடுதல் கட்டடம் கட்டியதற்கும், கட்டட மராமத்து வேலை செய்ததற்கும் தமிழக ஊழல் தடுப்பு போலீஸார் ரூ.13,65,31,900 செலவு என்று பதிவு செய்திருக்கிறார்கள்.
ஆனால், நாங்கள் உண்மையில் ரூ.3,62,47,700 தான் செலவு செய்தோம். தமிழக ஊழல் தடுப்பு போலீஸார் சொன்னதற்கும், நாங்கள் சொல்வதற்கும் ரூ.10,05,84,222 வேறுபாடு இருக்கிறது. அதனால், இந்த வேறுபாட்டுத் தொகையை என் மனுதாரருடைய செலவுப் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும்.
அதேபோல சுதாகரன் திருமணச் செலவுகளை ஜெயலலிதா செய்ததாக தமிழக ஊழல் தடுப்பு போலீஸார் ரூ.6,45,00,000 என்று பதிவு செய்திருக்கிறார்கள்.
ஆனால், ஜெயலலிதா ரூ.29,00,000 தான் செலவு செய்தார். சுதாகரன் திருமணம் செய்த பெண், நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகள் வழி பேத்தி. சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமார், மணப்பெண்ணின் தாய்மாமா என்ற முறையில் 1 கோடி செலவு செய்தார். அதை வருமானவரித் துறையிலும் தாக்கல் செய்திருக்கிறார்.
நீதிபதி: ராம்குமாரின் தொழில் என்ன?
குமார்: சினிமா தயாரிப்பாளர். அவருடைய அம்மா கமலா பெயரிலும், சகோதரி சாந்தி பெயரிலும் சினிமா தியேட்டர்கள் இருக்கிறது. அவருடைய தம்பி பிரபு மூவீஸ் படங்களை வெளிநாடுகளில் விற்றதன் மூலமும் வருமானம் கிடைத்தது. அதனால், திருமணத்தை சீரும் சிறப்புமாக நடத்தினார்கள்.
நீதிபதி: சிவாஜி கணேசனுக்கும் எம்.ஆர்.ராதாவுக்கும் என்ன தொடர்பு?
குமார்: இருவரும் நடிகர்கள். ஆனால், அவர் வேறு. இவர் வேறு.
நீதிபதி: என்னுடைய ஸ்கூல் லைஃப்பில் எம்.ஆர்.ராதா பற்றிய புத்தகங்களை நிறைய படித்திருக்கிறேன். அப்போது தமிழகத்தைப் பற்றி அறியத் தொடங்கிய காலம்.
குமார்: ஜெயலலிதா செலவு பட்டியலில் இருந்து இந்த திருமண செலவு ரூ.6.45 கோடியை நீக்க வேண்டும். அதேபோல வழக்கு காலகட்டத்திற்கு முன்பே தங்க, வைர நகைகள் இருந்தது. அதன் மதிப்பு 5 கோடி என்று காட்டி இருக்கிறர்கள். அதையும் என் மனுதாரர் செலவு பட்டியலில் இருந்து நீக்க வேண்டும்.
35 மார்க் வாங்கினால் பாஸ்!
நீதிபதி: உங்கள் தரப்பு வாதங்களை இப்படி வாய்மொழியாகவே பேசி வருகிறீர்கள். கட்டட மராமத்து பணிக்காக நீங்கள் செய்த தொகைகளுக்கான ஆதாரங்கள் என்ன, அதற்கான சாட்சியங்கள் என்ன என்பதை நிரூபிக்க வேண்டும்.
ஆனால், தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையினர் உங்கள் மீதுள்ள குற்றச்சாட்டுகளுக்கு தகுந்த சாட்சியங்களோடும் ஆதாரங்களோடும் 82% முதல் 92% நிரூபித்து இருக்கிறார்கள். ஆனால், நீங்கள் இதுவரை சாட்சிய ஆதாரங்களைக் காட்டவும் இல்லை. 30% முதல் 35% வரைதான் வாதிட்டு இருக்கிறீர்கள்.
குமார்: 35 மார்க் எடுத்தாலே பாஸ்தான்.
நீதிபதி: பள்ளிக்கூடத்தில் 35 மார்க் எடுத்தால் பாஸாக இருக்கலாம். ஆனால், நீதிமன்றத்தில் எதிர்தரப்பைவிட அதிக மார்க் வாங்கினால்தான் பாஸ் செய்ய முடியும். அப்படி பார்த்தால் உங்களைவிட அவர்கள் 65 மார்க் அதிகமாக வாங்கி இருக்கிறார்கள். அதனால் அவர்கள்தான் பாஸ்.
ஜெயலலிதாவின் ரகசிய டைரி...
குமார்: இந்த வழக்கில் எஃப்.ஐ.ஆர் போட்டது தவறு. ஒரு வழக்கில் எஃப்.ஐ.ஆர் போட வேண்டும் என்றால், புகார்தாரரிடம் மனு பெற்று ஸ்டேஷன் பொறுப்பில் இருப்பவர்கள்தான் எஃப்.ஐ.ஆர் போடுவார்கள். அதாவது எஸ்.ஐ, இன்ஸ்பெக்டர்கள்தான் போடுவார்கள். ஆனால், இந்த வழக்கில் எஸ்.பி நல்லமநாயுடுவே புகார்தாரராக இருந்து இருந்து எஃப்.ஐ.ஆர் போட்டிருக்கிறார்.
நீதிபதி: இதுபோன்ற பெரிய வழக்குகளில் அதிகாரிகளுக்கும் மேல் இடத்து பிரஷர் வரும். அப்டேட் தகவல்கள் கேட்டுக் கொண்டிருப்பார்கள். அதனால் அவர்களே எஃப்.ஐ.ஆர் போடுவது தவறில்லை. இந்திரா காந்தி ஊழல் வழக்கில்கூட எஸ்.பி ஒருவர்தான் எஃப்.ஐ.ஆர் போட்டுள்ளார்.
குமார்: ஜெயலலிதாவின் போயஸ்கார்டன் இல்லத்தில் சோதனை செய்தபோது இந்திய அரசியலமைப்பு சட்டம் 21ன்படி தனிமனித சுதந்திரத்திற்கு எதிராக செயல்பட்டிருக்கிறார்கள்.
புலன்விசாரணை செய்த எஸ்.பி நல்லமநாயுடு சன் டி.வி-யை அழைத்து வந்து வீட்டில் இருந்த சேலைகள், செருப்புகள், நகைகளை அனைத்தையும் வெளிப்பரப்ப செய்ததோடு, ஜெயலலிதா ரகசிய டைரி வைத்திருந்தார்.
அந்த டைரியில் தன் அம்மாவோடு சின்ன வயதில் எடுத்துக்கொண்ட போட்டோக்களை வைத்திருந்தார். அதையெல்லாம் ஒளிப்பரப்பச் செய்து இருப்பது. தனிமனித சுதந்திரத்திற்கு எதிரானது.
– வீ.கே.ரமேஷ்
படங்கள்: ரமேஷ் கந்தசாமி
முன்னைய தொடர்களை பார்வைிடுங்கள்..