தன் மீது சுமத்தப்படும் ஊழல் மற்றும், அதிபர் தேர்தலை அடுத்து ஆட்சியைத் தக்கவைப்பதற்கான சதித்திட்டம் தீட்டியதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை, சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, நிராகரித்துள்ளார்.
கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியில் அவர்,
“புதிய அரசாங்கத்தில் உள்ள சிலர் கூறுவது போன்று சீஷெல்சில் எனக்கு எந்த வங்கிக் கணக்கும் கிடையாது.
சிறிலங்காவில் எனக்கு ஒரே ஒரு வங்கிக் கணக்கு மாத்திரம் உள்ளது. அமெரிக்காவில் ஒரு வங்கிக் கணக்கு இருந்தது. பின்னர் அதனையும் மூடி விட்டேன்.
கடந்த ஜனவரி 8ம் நாள் அதிபர் தேர்தல் அன்று, அலரி மாளிகையில், நடந்த கூட்டத்தில், பாதுகாப்பு விவகாரங்கள் குறித்தே ஆராயப்பட்டன.
தேர்தலுக்குப் பின்னர், சில குழுக்கள் வன்முறைகளை ஆரம்பிக்கலாம் என்று காவல்துறை தரப்பில் கவலைகள் இருந்தன.
எனவே, அந்தக் கூட்டத்தில் சிறிலங்கா அதிபராக இருந்த மகிந்த ராஜபக்ச, பாதுகாப்புப் படைகள், காவல்துறை தலைவர்கள், சட்டமா அதிபர் ஆகியோர் அதுபற்றிக் கலந்துரையாடியிருந்தனர்.
தேர்தலுக்குப் பின்னர் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்துரையாடுவதற்காக மட்டுமே அந்தக் கூட்டம் நடத்தப்பட்டது.
பின்னர், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்திப்பதற்கும், அமைதியான முறையில் அதிகாரத்தைக் கைமாற்றம் செய்வது குறித்து கலந்துரையாடவும் தீர்மானிக்கப்பட்டது.
2010ம் ஆண்டு அதிபர் தேர்தலில் தோல்வியுற்ற பின்னர், முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, கைது செய்யப்பட்டதை நான் ஆதரிக்கவில்லை.
பொன்சேகா மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டாலும், அவரை வெலிக்கடைச் சிறையில் அடைக்காமல், இராணுவ முகாம் ஒன்றில் தடுத்து வைக்குமாறு அப்போதைய அதிபர் மகிந்த ராஜபக்சவிடம் கேட்டிருந்தேன்.
சரத் பொன்சேகாவுக்கு அண்மையில் பீல்ட் மார்ஷல் பதவி நிலை வழங்கப்பட்டுள்ள நிலையில், விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதில், தொடர்புபட்டிருந்த ஏனைய எல்லா இராணுவ அதிகாரிகளுக்கும், அதுபோன்ற அங்கீகாரம் அளிக்கப்பட வேண்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.