அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் விமானம் ஒன்றில் சரக்குகள் வைக்கும் இடத்தில் ஊழியர் ஒருவர் தூங்கியதை அடுத்து, விமானம் திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது.
அமெரிக்காவின் சியாட்டிலில் இருந்து புறப்பட்ட இந்த விமானத்தின் அடிப்பகுதியில் பயணிகளின் பெட்டி போன்ற சரக்குகளை வைக்கும் இடத்தில், பெட்டிகளை வைக்கும் ஊழியர்களில் ஒருவர் தூங்கிவிட்டாராம்.
திடீரென்று விழித்துக்கொண்ட அவர், தான் சிக்கிக்கொண்டதை உணர்ந்து, அந்த சரக்குப் பகுதியின் கதவைத் தட்ட, என்னவோ ஏதோ என்று கவலை அடைந்த விமானிகள் மீண்டும் விமானத்தை சியாட்டில் நகருக்கே திருப்பினர்.
விமானத்திலிருந்து சரக்குப் பகுதியைத் திறந்து பார்த்தால், அங்கு அந்த ஊழியர் இருப்பதைக் கண்டனர்.
நல்லவேளையாக, சரக்குப் பகுதியிலும், சீதோஷ்ண நிலை கட்டுக்குள் வைக்கப்பட்டிருப்பதால், அவரது உயிருக்கு ஆபத்து ஏதும் ஏற்படவில்லை. எனினும் அவரை மருத்துவமனைக்கு சோதனைக்கு அனுப்பிவைத்தனர்.