விடுதலைப் புலிகள் மீதோ அவர்களின் கொள்கை மீது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, பற்றுறுதி கொண்டதல்ல என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றுக்கு சுமந்திரன் அளித்துள்ள செவ்வியில் இதனைக் குறிப்பிட்டுள்ளதாக, சீன செய்தி நிறுவனமான சின்ஹுவா செய்தி வெளியிட்டுள்ளது.

“நாம் விடுதலைப் புலிகள் மீதோ அவர்களின் சித்தாந்தம் மீதோ பற்றுறுதி கொண்டவர்கள் அல்ல.

நாம் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக நிற்கிறோம். நாம் தீவிரவாதத்தை ஆதரிக்கவோ, ஊக்குவிக்கவோ இல்லை என்பது அனைவருக்கும் தெரியும்.

விடுதலைப் புலிகள் மீள ஒருங்கிணைய முனைவதாக கூறப்படுவதில் எந்த உண்மையும் இல்லை.

ஆனால், அவ்வாறு அத்தகையதொரு நகர்வு முன்னெடுக்கப்பட்டால் கூட, அதற்கு தமிழ் மக்கள் ஆதரவளிக்கவோ, அனுமதிக்கவோ மாட்டார்கள். ஏனென்றால் அவர்களில் பெரும்பாலானவர்கள் போரினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, தீவிரவாதத்தை மீண்டும் ஆரம்பிக்க அனுமதிப்பதில்லை என்பதில் மக்கள் உறுதியாக உள்ளனர். அதனால் தமக்கு மோசமான பாதிப்புகள் ஏற்படும் என்பதை அவர்கள் அறிவார்கள்.

சில தரப்புகள் தான், புலிகள் மீள ஒருங்கிணைவதாக கூறி, மக்களிடையே பீதியை ஏற்படுத்த முனைகின்றன.” என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version