ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நீதிபதி குமாரசாமி முன்னிலையில் நடைபெற்றது. அதில் அரசுத் தரப்பு வழக்கறிஞர் பவானிசிங்கின் வாதம் தொடர்கிறது…

ஜெ.வை தவிர மற்றவர்களுக்கு வருமானம் இல்லை…

அரசு தரப்பு சாட்சி 255, புலன்விசாரணை அதிகாரி நல்லமநாயுடுவின் வாக்குமூலத்தை பவானிசிங் வாசிக்கிறார்.

bavani singh

பவானிசிங்: ஏ1 ஜெயலலிதா 1982-84 காலகட்டத்தில் அதிமுகவின் கொள்கைப் பரப்புச் செயலாளராகவும், 1984 – 89 ல் நாடாளுமன்ற மேலவை உறுப்பினராகவும், 1989 – 91 ல் எம்.எல்.ஏ-வாகவும், எதிர்க்கட்சி தலைவராகவும் இருந்தார். 1991 – 96 ல் முதல்வராக இருந்தார். இந்த காலகட்டம்தான் வழக்கு காலகட்டமாக கருதப்படுகிறது.

நீதிபதி: ஜெயலலிதா எம்.பி.யாக இருந்தபோது அவருடைய சம்பளம் என்ன?

பவானிசிங்: (சற்று நேர மௌனத்திற்குப் பிறகு…) ஏ2 சசிகலா ஹவுஸ் ஒய்ஃப். அவருடைய கணவர் நடராஜன். இவர் பி.ஆர்.ஓ.-வாக பணிபுரிந்தார். சசிகலாவின் தந்தை பெயர் விவேகானந்தன். அவருக்குச் சொந்தமாக 7.5 ஏக்கர் நிலம் இருந்தது.

அவருக்கு ஜெயராமன், வினோதனன், வனிதாமணி, சசிகலா என 4 குழந்தைகள். நால்வருக்கும் அந்த நிலத்தைப் பிரிந்து கொடுத்தார். இவருக்கு சொல்லிக்கொள்ளும் அளவுக்கு வருமானம் எதுவும் இல்லை.

ஏ3 சுதாகரன், ஏ2 சசிகலாவின் அக்கா வனிதாமணி, சுந்தரவதனத்தின் மகன். 1992 ல் தன் சின்னம்மா தங்கி இருந்த சென்னை போயஸ்கார்டன் வீட்டில் இவரும் தங்கினார். இவருக்கும் தனிப்பட்ட வருமானம் எதுவும் கிடையாது.

ஏ4 இளவரசி, ஏ2 சசிகலாவின் அண்ணன் ஜெயராமனின் மனைவி. அரசு சிவில் சப்ளையில் வேலை பார்த்து ஓய்வுபெற்ற ஜெயராமன், பின்னர் ஜெயலலிதாவின் ஹைதராபாத் தோட்டத்தில் வேலை பார்த்தார்.

அப்போது மின்சாரம் தாக்கி இறந்ததால், இளவரசி தன் குழந்தைகளோடு போயஸ்கார்டனில் வந்து தங்கினார். இவருடைய கணவனின் ஓய்வூதியத் தொகையை தவிர வேறு தொகை எதுவும் இல்லை.

சுதாகரனின் ஆண்டு வருமானம் ரூ.40,000 என்றும், இளவரசியின் ஆண்டு வருமானம் ரூ.48,000 என்றும் தாசில்தார் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வளவு குறைவாக வருமானம் உள்ளவர்கள் எப்படி பல கம்பெனிகளில் இயக்குநர்களாகவும், பங்குதாரர்களாகவும் இருந்து பல கோடி முதலீடு செய்ய முடியும்?

கம்பெனிகள், வழக்கு காலகட்டத்துக்கு முன்பே தொடங்கப்பட்டிருந்தாலும், செயல்படாமல் இருந்தது. வழக்கு காலகட்டமான 1991 முதல் 96 வரையில்தான் அனைத்து கம்பெனிகளும் பல வங்கிகளில் கணக்கு தொடங்கி, பணப்பரிமாற்றம் நடைபெற்றது.

இதைப் பார்க்கும்போது ஏ1 ஜெயலலிதாவின் ஏஜென்டுகளாகத்தான் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் இருந்திருக்கிறார்கள் என்பது உறுதியாகிறது.

ஜெயலலிதா, ஆட்சி அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து வருமானத்திற்கு அதிகமாக 66.65 கோடி சம்பாதித்து இருப்பது உறுதி செய்யப்பட்டதால், ஊழல் தடுப்புப் பிரிவின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நீதிபதி: இப்படி வாய்மொழியாக ரூ.66.65 கோடி என்று சொல்லக் கூடாது. எந்த சொத்து ஜெயலலிதாவுக்கு சொந்தமானது என்று எந்த சாட்சியத்தால் உறுதி செய்தீர்கள்? அதற்கான முழு விவரம் கொடுங்கள்.

பவானிசிங்: (மௌனம்)

சம்பந்தம்: அனைத்துக்கும் ஆதாரங்கள் உள்ளது.

நீதிபதி: (பவானிசிங்கைப் பார்த்து…) தமிழக ஊழல் தடுப்பு போலீஸார் ஆதாரங்கள் இருப்பதாக சொல்கிறார்கள்.

அதை நீதிமன்றத்தில் கொடுக்க மறுப்பது ஏன்? தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையின் ஆதாரங்களைப் படித்துள்ளீர்களா? அதைப் பார்த்து இருக்கிறீர்களா? நீங்கள்தானே கீழமை நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராக இருந்தீர்கள்?

பவானிசிங்: (மௌனம்)

நீதிபதி: நீங்கள் மூத்த வழக்கறிஞர். இப்படி மௌனமாக இருக்கக் கூடாது. இதன் பின்னணியில் உள்நோக்கம் இருப்பதாகத் தெரிகிறது. இப்படி அலட்சியமாக இருந்தால், நீதிமன்றமே ஆவணங்களை எடுத்துக்கொள்ளும்.

பவானிசிங்: (சற்று மௌனத்திற்குப் பிறகு..) 1987 -91 காலகட்டத்தில் ஜெயலலிதாவும், சசிகலாவும் சேர்ந்து ஜெயா பப்ளிகேஷன், சசி என்டர்பிரைசஸ், நமது எம்.ஜி.ஆர் என்ற நிறுவனங்களை தொடங்கி நடத்தி வந்தார்கள். 1990, 91, 92 இந்த 3 வருட காலகட்டத்தில் தனித்தனியே 3 வாகனங்கள் வாங்கினார்கள். இது ஜெயா பப்ளிகேஷன் நிறுவனத்திற்குப் பயன்படுத்தப்பட்டது.

நீதிபதியின் சரமாரி கேள்விகளும் பவானிசிங்கின் பதறலும்…

நீதிபதி: வழக்கு காலகட்டத்திற்கு முன்பே போயஸ்கார்டன் வாங்கப்பட்டுள்ளது. ஏன் இந்த வழக்கில் போயஸ்கார்டனைச் சேர்த்துள்ளீர்கள்?

பவானிசிங்: (சம்பந்தத்தைப் பார்த்து…) ஏன் சேர்த்தீர்கள்?

சம்மந்தம்: போயஸ்கார்டனில் கூடுதல் கட்டடமும், மராமத்து வேலைகளும்தான் சேர்க்கப்பட்டுள்ளது.

kumarasamy karnataka

நீதிபதி: ஜெயா பப்ளிகேஷன், சசி என்டர்பிரைசஸ் நிறுவனத்தில் ஜெயலலிதா, சசிகலா 2 பேரும் பார்ட்டனர்களாக இருக்கும்போது, ஜெயலலிதாவுடைய பணம் என்று குறிப்பிடுகிறீர்களே… ஏன்?

பவானிசிங்: (மௌனம்)

நீதிபதி: ஜெயலலிதாவின் பினாமிகளாக சசிகலா, சுதாகரன், இளவரசி செயல்பட்டதாகச் சொல்கிறீர்கள். அதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது? பினாமி சட்டப்படி ரத்த உறவினர்களாக இருக்கும்பட்சத்தில்தான் பொருத்தும். இவர்களுக்கு எப்படி பொருந்தும்?

பவானிசிங்: (மௌனம்)

நீதிபதி: ஊழல் தடுப்புச் சட்டம் 13(1)இ… அரசு ஊழியர்கள் இல்லாதவர்களை எப்படி இந்தச் சட்டத்தில் கொண்டுவருகிறீர்கள்? 120(பி) கூட்டுச்சதி… ஒரே வீட்டில் தங்கி இருக்கிறார்கள் என்பதால் மட்டுமே கூட்டுச்சதி என்று கூறிவிட முடியாது. இதற்கு வேறு என்ன ஆதாரங்கள் வைத்திருக்கிறீர்கள்?

பவானிசிங்: (மௌனம்)

நீதிபதி: ஜெயலலிதாவிடம் இருந்து எப்படி சசிகலா, சுதாகரன், இளவரசி மற்றும் கம்பெனிகளுக்கு பண பரிமாற்றம் நடைபெற்றது?

பவானிசிங்: (மௌனம்)

நீதிபதி: ஜெயா பப்ளிகேஷனில் ஜெயலலிதா யாருக்கு பவர் ஆஃப் அட்டர்னி கொடுத்தார்?

பவானிசிங்: ஜெயலலிதா, சசிகலாவிற்கு கொடுத்தார்.

நீதிபதி: கம்பெனி ஆடிட்டர் சொக்கலிங்கத்தின் வாக்குமூலத்தை ஏன் இதில் கொண்டுவரவில்லை?

பவானிசிங்: தெரியவில்லை யுவர் ஆனர். எனக்கு ஒரு வாரம் படிப்பதற்கு கால அவகாசம் கொடுக்க வேண்டும்.

நீதிபதி: அப்படி கொடுக்க முடியாது. நாளைக்கு வந்து புலன்விசாரணை அதிகாரிகளின் வாக்குமூலங்களைப் படியுங்கள். நாளைக்கு யாருடைய வாக்குமூலத்தைப் படிக்கிறீர்கள்? கால அவகாசத்தைப் பற்றி நாளைக்குப் பாக்கலாம்.

பவானிசிங்: புலன்விசாரணை அதிகாரி லத்திகாசரண், வி.சி.பெருமாள், கதிரேசன் என 3 பேரின் வாக்குமூலங்களைப் படிக்கிறேன்.

புலன்விசாரணை அதிகாரிகளின் வாக்குமூலங்களைப் படித்தபோதும் நீதிபதி குமாரசாமி கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல், தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை டி.எஸ்.பி சம்பந்தத்திடமும், ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்கள் குமார், மணிசங்கரைப் பார்த்தும், நீதிபதி கேட்கும் கேள்விகளுக்கு பதில் கேட்டு வருவதோடு, சுயமாக ஒரு கேள்விக்குக்கூட பதில் சொல்ல முடியாமல் மௌனம் சாதிக்கிறார்.

நீதிபதி கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும் பவானிசிங் பதில் சொல்லாமல், தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை டி.எஸ்.பி சம்பந்தத்தை மாட்டிவிடுகிறார்.

சம்பந்தமும் பதில் சொல்லத் தயங்கவே, நீதிபதி அவருக்கு ஆங்கிலம் தெரியவில்லை என நினைக்கிறார்.

உண்மையில் சம்பந்தத்திற்கு ஆங்கிலம் நன்றாக தெரியும். அவர் ஒரு அரசு ஊழியர் என்பதால், தான் ஏதாவது சொல்ல அது ஆளுங்கட்சிக்கு கோபத்தை ஏற்படுத் விடும் என்பதால் பதில் சொல்ல முடியாமல் மௌனம் சாதிக்கிறார்.

நீதிபதி கேட்கும் ஒவ்வொரு கேள்விகளுக்கும் பவானிசிங் தொடர்ந்து பதில் சொல்லாமல் சம்பந்தத்தையும், மணிசங்கரையும் பார்த்துவரும் நிலையில், ‘‘திடீரென நீதிபதி ‘உங்கள் பெயர் என்ன?’ என்று கேட்கப் போகிறார்.

அதற்கும் மணிசங்கரையோ, சம்பந்ததையோ பார்த்து ‘என் பெயர் என்ன?’ என்று பவானிசிங் கேட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை’’ என்று கிண்டல் அடித்தனர் நீதிமன்ற காட்சிகளைப் பார்க்கும் பத்திரிகையாளர்கள்.

– வீ.கே.ரமேஷ்

படங்கள்: ரமேஷ் கந்தசாமி

முன்னைய தொடர்களை பார்வையிட  இங்கே அழுத்தவும் »» ஜெ. வழக்கு விசாரணை…..

Share.
Leave A Reply

Exit mobile version