திவிநெகும (வாழ்வின் எழுச்சி) திணைக்களத்தில் இடம்பெற்ற நிதி மோசடிகள் தொடர்பில் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, முன்னாள் பொருளாதார அமைச்சின் செயலாளர் டாக்டர் நிஹால் ஜயதிலக மற்றும் திவிநெகும திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் கே.ஆர்.கே.ரணவக்க ஆகியோர் கைதுசெய்யப்பட்டு எதிர்வரும் மே மாதம் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கொள்ளுப்பிட்டியில் உள்ள நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு நேற்று அழைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ உள்ளிட்ட மூவரும் அங்கு சுமார் 7 மணி நேரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டபின்னர் கைதுசெய்யப்பட்டு கடுவலை பிரதான நீதிவான் தம்மிக ஹேமபால முன்னிலையில் இரவு வேளையில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து அவர்களை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.
இது தொடர்பில் திவிநெகும திட்டத்தின் முன்னாள் பணிப்பாளர் ஆர்.ஆர்.கே.ரணவக்கவிடம் ஏற்கனவே பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி வைத்தியலங்காரவின் தலைமையிலான நிதிக் குற்றப் புலனாய்வுப்பிரிவு மேற்கொண்ட விசாரணைகளில் அப்போதைய பொருளாதார அமைச்சர் பஷில் ராஜபக்ஷவின் உத்தரவுக்கு அமையவே அத்திணைக்களத்தின் அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளமை தெரியவந்தது.
அதன்படி பஷில் ராஜபக்ஷ வெளி நாடொன்றில் இருந்த நிலையில் அவரை நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டது.
நீதிமன்றம் ஊடாகவும் இதுதொடர்பில் அறிவித்தல் விடுக்கப்பட்டது.
இந் நிலையில் நேற்று முன் தினம் நாடு திரும்பிய முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ நேற்று நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வாக்கு மூலம் அளிக்கச் சென்றார்.
இந் நிலையில் அவருக்கு மேலதிகமாக அவர் அமைச்சராக இருந்தபோது அவரது செயலாளராக இருந்த டாக்டர் நிஹால் ஜயதிலகவும் விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்ததுடன் ஏற்கனவே விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்த திவி நெகும திட்டத்தின் பணிப்பாளரக இருந்த ஆர்.கே.கே.ரணவக்கவும் அழைக்கப்பட்டிருந்தார்.
இந் நிலையில் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி வைத்தியலங்காரவின் கீழ் இடம்பெற்ற இந்த விசாரணைகளில் முதலில் முன்னாள் செயலாளர் நிஹால் ஜயதிலக, முன்னாள் பணிப்பாளர் கே.கே.ரணவக்க ஆகியோரை நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு கைது செய்தது.
நேற்றைய தினம் விசாரணைகள் ஆரம்பமான போது நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு அமைந்துள்ள கொள்ளுப்பிட்டி, கார்வில் பிரதேசத்தில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு பொலிஸ் கலகத்தடுப்புப் பிரிவினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
இந் நிலையில் மாலை 6 மணியளவில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, ஏனைய இருவரும் பொலிஸாரின் ஆரம்பகட்ட நடவடிக்கைகளின் பின்னர் இரவு 9.35 மணியளவில் கொள்ளுபிட்டியில் இருந்து குற்றப் புலனாய்வுப் பிரிவின் விஷேட வேன் ஊடாக கடுவலை நீதிவான் நீதிமன்றுக்கு கொண்டுசெல்லப்பட்டார்.
இந் நிலையில் கடுவலை நீதிமன்றின் முன்னால் சுமார் 1000 பேர் வரையில் திரண்டு பஷில் ராஜபக்ஷவுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பிய நிலையில் அப்பிரதேசத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
இந் நிலையில் நீதிமன்றுக்கு 10 மணியளவில் பஷில் ராஜபக்ஷவும், நிஹால் ஜயதிலகவும், ரணவக்கவும் ஆஜர்படுத்தப்பட்ட போதும் 50 நிமிடங்களின் பின்னரேயே அவர்களது விவகாரத்தை நீதிவான் விசாரணைக்கு எடுத்துக்கொண்டார்.
இதனையடுத்தே அம்மூவரையும் எதிர்வரும் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து சிறைச்சாலை வாகனத்தில் ஏற்றப்பட்ட பஷில் ராஜபக்ஷ உள்ளிட்ட மூவரும் வெலிக்கடை விளமறியலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதன் காரணமாக வெலிக்கடை பொலிஸ் பிரிவின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. சிறைசாலையை அண்மித்த பகுதிகளில் பொலிஸ் கலகத்தடுப்புப் பிரிவும் மேலதிக பொலிஸாரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
திவி நெகும திணைக்களத்தில் ஊக்குவிப்பு தொடர்பிலான நிதியில் 70 மில்லியன் ரூபா மோசடி செய்யப்பட்டமை, திவிநெகும வீடமைப்பு உதவித் திட்டத்திலும் நிதி மோசடி செய்யப்பட்டமை, ‘லிதோ’ அச்சுப்பதிப்பு தொடர்பிலும் பாரிய நிதி மோசடி,
கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்காக அல்லது பிரசாரங்களுக்காக அத் திணைக்களத்திலிருந்து பல இலட்ச ரூபா நிதி செலவு செய்யப்பட்டமை உள்ளிட்ட பல குற்றச் சாட்டுக்கள் பஷில் ராஜபக்ஷ மற்றும் நிஹால் ஜயதிலக, ரணவக்க ஆகியோருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளன.
அத்துடன் தேசிய சம்மேளனம் ஒன்று திவி நெகும நிதியில் நடத்திவரப்பட்டமை தொடர்பிலும் விசாரணைகள் தொடர்கின்றன.
மேளனம் ஒன்று திவி நெகும நிதியில் நடத்திவரப்பட்டமை தொடர்பிலும் விசாரணைகள் தொடர்கின்றன.
இந் நிலையிலேயே இந்த திவி நெகும நிதி மோசடிகள் தொடர்பில் பிரதான சந்தேக நபர்களான முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, முன்னாள் பொருளாதார அமைச்சின் செயலாளர் டாக்டர் நிஹால் ஜயதிலக மற்றும் திவி நெகும திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் கே.ஆர்.கே.ரணவக ஆகியோர் கைது செய்யப்பட்டு எதிர்வரும் மே மாதம் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
விசாரணைக்குச் சென்ற பசில் ராஜபக்ச கைது
22-04-2015
திவிநெகும திணைக்களத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் குறித்து வாக்குமூலம் அளிப்பதற்காக, இன்று காலை 11 மணியளவில், நிதிக்குற்ற விசாரணைப் பிரிவுக்கு பசில் ராஜபக்ச சமூகமளித்திருந்தார்.
அவரிடம், மாலை 5 மணி வரை விசாரணைகள் நடத்தப்பட்டதையடுத்தே, கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, இன்று பிற்பகல், பசில் ராஜபக்ச விசாரிக்கப்பட்டு வந்த நிதிக்குற்ற விசாரணைப் பிரிவின் முன்பாக, வீதித்தடைகள் போடப்பட்டு, கலகத் தடுப்பு பிரிவு காவல்துறையினரும், குற்றப்புலனாய்வுத் துறை அதிகாரிகளும் குவிக்கப்பட்டனர்.
இதனால் பசில் ராஜபக்ச எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்று ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன.
அதேவேளை, பசில் ராஜபக்ச கைது செய்யப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவரை கடுவெல நீதிமன்றத்தில், முன்னிலைப்படுத்துவதற்காக இரகசியமாக கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பஷில் வியட்நாமில் இருந்தே இலங்கை வந்தார்
22-04-2014
கடந்த ஜனாதிபதி தேர்தலின் வாக்கெண்ணும் பணிகள் நிறைவடைந்த, ஜனவரி 11ஆம் திகதியே நாட்டை விட்டு வெளியேறிய பஷில் தம்பதியினர் அமெரிக்காவுக்குச் சென்றதாகவே அப்போது செய்திகள் வெளியாகியிருந்தன.
பஷில் அமெரிக்க குடியுரிமை பெற்றிருப்பதும் இதற்கு காரணமாக இருக்கலாம்.
ஆயினும், பஷில் தம்பதியினர் இதுவரை காலமும் வியட்நாமிலேயே தங்கியிருந்ததாக வெளியுறவு அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன.