ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு விசாரணையில் ஜெ. தரப்பு வாதங்கள் அனைத்தும் முடிந்ததை அடுத்து, அரசுத் தரப்பு வழக்கறிஞரான பவானிசிங் விசாரணை அதிகாரிகளின் வாக்குமூலத்தை படிக்க ஆரம்பித்தார். அந்த வாக்குமூலங்களில் இருந்து…
அரசு சாட்சி: 240
பெயர்: லத்திகா சரண் ஐ.பி.எஸ்
தந்தை பெயர்: என்.எஸ்.தார்
இருப்பிடம்: சென்னை
பதவி: ஐ.ஜி., சென்னை.
வயது: 48.
16.8.2000 ல் கொடுத்த வாக்குமூலம்…
‘‘தற்போது நான் சென்னை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையின் சிறப்பு புலனாய்வுப் பிரிவில் ஐ.ஜி-யாகப் பணிபுரிந்து வருகிறேன்.
1996 ல் இதே துறையில் நான் டி.ஐ.ஜி-யாக பணியாற்றி வந்தேன். அப்போது குற்றவியல் நடைமுறைச் சட்டம் 202-ன்படி சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்த மனுவின் மீது விசாரணை செய்யும்படி எனக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிபதி உத்தரவிட்டார்.
அதையடுத்து நான் நீதிமன்றத்தில் இருந்து புகார் நகலை பெற்றுக்கொண்டு உடனடியாக விசாரணையைத் தொடங்கினேன்.
ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையில் அப்போது ஏ.டி.எஸ்.பி-யாக இருந்த நல்லமநாயுடு மற்றும் அதே துறையைச் சேர்ந்த சில அதிகாரிகள் எனக்கு உதவியாக இருந்தார்கள். 1.7.1996ல் ஒரு ஊழல் தடுப்பு சட்டம் பிரிவு 17ன் கீழ் ஓர் உத்தரவு பிறப்பித்தேன்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா மற்றும் அவர்களின் நெருங்கிய உறவினர்களின் வங்கி ஆவணங்கள், சார் பதிவாளரின் பதிவேடுகள், முதலீடுகள் மற்றும் பதிவாளரிடமிருந்து பெறப்பட்ட அவர்களின் சொத்துகளைச் சேகரித்தோம்.
சென்னை மாநகர ஊழல் தடுப்பு அலுவலகத்தில் என் முன்னிலையில் நல்லமநாயுடு, சுப்பிரமணியன் சுவாமியை விசாரித்தார்.
14.8.1996 ல் சென்னை உயர்நீதிமன்றம் விசாரணைக்குத் தடை விதித்தது. 4.9.1996 ல் சென்னை உயர்நீதிமன்றம் தடையை விலக்கி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையின் இயக்குநருக்கு ஓர் உத்தரவு பிறப்பித்தது.
தன் விருப்பத்திற்கேற்ப ஒரு அதிகாரியை நியமித்து விசாரணையைத் தொடர உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் 7.9.1996-ல் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையின் இயக்குநரால் இவ்வழக்கின் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்ட நல்லமநாயுடுவிடம் விசாரணை தொடர்பான அனைத்து ஆவணங்களையும் ஒப்படைத்தேன்.
நீதிபதி குமாரசாமி: லத்திகா சரண் கோர்ட் உத்தரவுபடி விசாரணை செய்துகொண்டிருக்கும்போது, இன்னொருவர் எஃப்.ஐ.ஆர் போடுகிறார்.
அப்படி இருக்கும்போது எப்படி லத்திகாசரண் விசாரணை வாக்குமூலத்தை எடுத்துக்கொண்டீர்கள்?
பவானிசிங்: (மௌனம்)
வி.சி.பெருமாள் வாக்குமூலம்…
அரசு சாட்சி: 241
பெயர்: வி.சி.பெருமாள்.
தந்தை பெயர்: சின்னுசாமி
இருப்பிடம்: அண்ணாநகர், சென்னை.
பதவி: ஸ்பெஷல் ஆபீஸர் (தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு)
வயது: 61.
‘‘நான் காவல்துறை சிறப்பு பிரிவில் ஐ.ஜி-யாகப் பணியாற்றினேன். அதன் பிறகு தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவில் டிவிஷன் 1ல் ஏ.டி.ஜி.பி-யாக வேலை பார்த்தேன்.
மீண்டும் சிறப்பு அதிகாரியாக அதே பணியில் பணியமர்த்தப்பட்டேன். 31.7.2000 ல் ஓய்வு பெற்றேன்.
சென்னை செசன்ஸ் கோர்ட்டில் சுப்பிரமணியன் சுவாமி மனுதாக்கல் செய்ததை அடுத்து, டி.ஐ.ஜி லத்திகா சரணை இந்த வழக்கை விசாரிக்க நீதிமன்றம் ஆணையிட்டது. லத்திகா சரணுக்கு உதவியாக எஸ்.பி நல்லமநாயுடு மற்றும் பல ஊழல் தடுப்பு போலீஸாரை அத்துறையின் இயக்குநர் நியமித்தார்.
இந்த டீம் விசாரணையைத் தொடங்கினார்கள். சுப்பிரமணியன் சுவாமி மற்றும் இதர சாட்சியங்களையும் விசாரணை செய்தனர்.
வங்கிகள், நிதி நிறுவனங்கள், பதிவேடுகள் அனைத்தையும் பதிவுத் துறை அலுவலகத்தில் இருந்து பெற்றார்கள்.
இந்த தடை ஆணை 4.9.1996 ல் மறு ஆய்வு செய்யப்பட்டது. அதன் பிறகு நல்லமநாயுடு அந்த விசாரணையைத் தொடரலாம் என்று உத்தரவிடப்பட்டது.
ஜெயலலிதா சம்பந்தமான ஆவணங்களை சீஸ் செய்தார்கள். இந்த சூழ்நிலையில் மீண்டும் நான் 9.9.1996 ல் ஐ.ஜி-யாக பதவியேற்று, இந்த வழக்கை விரிவாக ஆய்வு செய்தேன்.
இந்த ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் ஜெயலலிதா மீது ஊழல் தடுப்பு சட்டம் 13(1)இன்படி 18.9.96ல் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துவிட்டு நல்லமநாயுடுவை முழுமையாக விசாரிக்க ஆணையிட்டேன்.
இந்த விசாரணை தமிழ்நாட்டில் உள்ள பல மாவட்டங்களிலும் பிற மாநிலங்களிலும் விரிந்து இருந்ததால், நல்லமநாயுடுக்கு உதவியாக சில அதிகாரிகளை நியமித்தேன்.
அத்துடன் 14 உத்தரவுகளைப் பிறப்பித்தேன். என் மேற்பார்வையில் நல்லமநாயுடு வழக்கு விசாரணையை முடித்து, விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. 4.6.1997ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
4 குற்றவாளிகளிடமும் குறுக்கு விசாரணை செய்ய முற்பட்டேன். நீதிமன்றம் தடை விதித்ததால் குறுக்கு விசாரணை செய்ய முடியவில்லை.
27.1.2003 ல் என்னிடம் குறுக்கு விசாரணை நடைபெற்றது. நான் 1965 ல் காவல் துறையில் சேர்ந்தேன். 1994 ல் ஐ.ஜி-யாக பதவி உயர்வு கிடைத்தது.
தமிழ்நாடு அரசின் உத்தரவுபடி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை இயக்குநர் மூலமாக இந்த கேஸ் ஃபைல் எனக்கு வந்தது. எங்கள் துறையின் இயக்குநர் ராகவனிடமும், சட்ட வல்லுநர்களிடமும் ஆலோசனை பெற்றுதான் நான் எஃப்.ஐ.ஆர் போட்டேன். அதையடுத்து 300 சாட்சிகளிடம் விசாரணை செய்தேன்.
அதில் ஆவணங்களை சீஸ் செய்தேன். விசாரணை செய்த ஆவணங்கள் அனைத்தையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தோம்.
அதன் பிறகு எஃப்.ஐ.ஆரில் எந்த மாற்றமும் செய்யவில்லை. நீதிமன்றத்தில் இந்த கேஸை முடித்து வையுங்கள் என்றும் சொல்லவில்லை.
இந்த வழக்கு முழுவதும் ஏ1 ஜெயலலிதாவை மையப்படுத்தி வருவதாலும், ஆவணங்கள் மற்றும் வாக்குமூலத்தின் அடிப்படையில் ஏ1 மீது எஃப்.ஐ.ஆர் ஃபைல் செய்தேன். எஃ.ப்.ஐ.ஆரை குற்றப்பத்திரிகையில் இணைக்கவில்லை.
இந்த கேஸ் மட்டுமலாமல் ஏழெட்டு கேஸ்களை விசாரித்தேன். நான் மேற்பார்வை செய்ததை என் தலைமை அதிகாரிகள் பார்த்துக்கொண்டுதான் இருந்தார்கள். எங்கள் காவல்துறையில் வாராந்திர, மாதாந்திர கூட்டத்தில் விவாதித்துக்கொண்டுதான் இருந்தார்கள்.
18, தெற்கு அபிராமபுரம் 3 வது தெருவில் கீழ் வீட்டில் பரிசு பொருட்கள் சீஸ் பண்ணி சீல் வைத்தது தெரியும்.
2 தனி நபரிடம் 2 ரிவால்வர் சீஸ் பண்ணியதும் தெரியும். இந்தப் பரிசு பொருட்களும், ரிவால்வரும் இந்த வழக்கு சம்பந்தமானது என்பது தெரியாது. விசாரணை, பறிமுதல் ஆதாரங்கள், நகைகள் மதிப்பீடு தெரியும்.
5 இடங்கள் நேரடியாக சோதனை செய்தேன். இது அனைத்தையும் மகஜரில் பதிவு செய்திருக்கிறார்களா என்பது எனக்குத் தெரியாது.
இந்த ஆய்வு நடக்கும்போது எந்த ஆவணத்திலும் கையொப்பம் இடவில்லை. அப்போது ஜெயலலிதாவை சி.பி.சிஐ.டி அரெஸ்ட் செய்தது தெரியும் அவர்களை ஜெயிலில் வைத்தார்களா என்பது தெரியாது.
7.12.1996 முதல் 12.12.1996 வரை போயஸ்கார்டனில் சோதனை நடைபெற்றது. நான் 7.12.1996 ம் தேதி 6 டூ 7 மணி நேரம் இருந்தேன். எங்கள் சோதனையை ஒளிபரப்ப செய்ய சன் டிவி உட்பட எந்த சேனலுக்கும் நாங்கள் அனுமதி கொடுக்கவில்லை.
சோதனை நடந்து முடிந்த பிறகுதான், வீட்டை ஒளிபரப்பு செய்தார்கள். நல்லமநாயுடு 6.12.2015 ம் தேதி ஒரு மனு போட்டார்.
அதன் அடிப்படையில் போயஸ்கார்டன் உள்ளிட்ட இடங்களில் சோதனை செய்யும்போது தரமணி ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில் இருந்து வீடியோக்களும், புகைப்படங்களும் எடுத்தார்கள். அவர்கள் எந்த சேனல்களுக்கும் புகைப்படமோ வீடியோவோ கொடுக்க இல்லை.
நான் போயஸ்கார்டன் ரூம்களை சீல் வைக்க சொன்னேன். புடவைகள், செருப்புகள், சூட்கேஸ்கள், நகைகள் ஆகியவற்றை சீல் வைக்க சொன்னேன்.
எங்கள் துறையில் உள்ள வழக்கறிஞர்களின் ஆலோசனைபடிதான் ஆய்வுகள் செய்தேன். நல்லமநாயுடுவை ஓய்வு பெற்ற பிறகும் பணி அமர்த்தினார்கள். நான் நல்லமநாயுடுக்கு எந்த பவரும் கொடுக்கவில்லை.
நல்லமநாயுடுதான் தங்க ஆசாரிகள் வெங்கடேஷன், ஜவகர்லால் அவர்களோடு 2 பேரை கூட்டி வர என்னிடம் வாய்மொழி உத்தரவு பெற்றார். அவர்கள் ஐந்தாறு பக்கங்களுக்கு மதிப்பீடு எழுதி இருந்தார்கள்.
இந்த அறிக்கைகளை நீதிமன்றத்தில் சமர்பித்தார்களா இல்லையா என்று எனக்குத் தெரியாது. போயஸ் கார்டன் சோதனை செய்வதற்கு முன்பு 135 இடங்களில் சோதனைகள் மேற்கொண்டோம்.
குற்ற அறிக்கையில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரை மட்டும்தான் பதிவு செய்தோம். சசிகலா, சுதாகரன், இளவரசி உறுதியாக குற்றவாளிகள் என்று நீதிமன்றத்தில் சொன்னார்களா, இல்லையா என்று எனக்குத் தெரியாது.
ஆனால், நான் விசாரிக்கும்போது இவர்கள் குற்றவாளிகள் என்பது உறுதியாகத் தெரிந்தது. போயஸ் கார்டன் அறிக்கையைத் தயார் செய்ய நாலைந்து டீம் இருந்தது.
ஒவ்வொரு டீமிலும் நாலைந்து அதிகாரிகள் இருந்தார்கள். இதில் யார் வழிகாட்டினார்கள் என்பது தெரியவில்லை. எனக்கு வேலை அதிகமாக இருந்ததால் 7.12.1996 மதியம் 12.30 மணிக்கு சோதனையிட சென்றோம்.
பொதுவாக போயஸ்கார்டனில் உள்ள எல்லா இடத்தையும் பார்த்தோம். அங்கு பாஸ்கரன் மற்றும் வழக்கறிஞர் ஒருவர் இருந்தார்கள். முதலில் எங்கள் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள்.
கோர்ட் ஆர்டரைக் காண்பித்ததும் அமைதியாகி விட்டார்கள். பிறகு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வுகள் அனைத்தும் நல்லமநாயுடுக்குதான் நன்றாகத் தெரியும்.
தொடரும்…
– வீ.கே.ரமேஷ்
முன்னைய தொடர்களை பார்வையிட இங்கே அழுத்தவும் »» ஜெ. வழக்கு விசாரணை…..