நாஜி கொலை முகாமின் காவலர் ஜெர்மன் நீதிமன்றத்தில் மன்னிப்பு
ஒஸ்விட்ச் கொலை முகாமின் காவலராக இருந்த முன்னாள் நாஜி ஜெர்மனி அதிகாரி ஒஸ்கார் கிரோனின் (Oskar Groening) ஜெர்மன் நீதிமன்றத்தில் தனது செயலுக்காக மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.
“தார்மீக ரீதியில் குற்றத்தில் நானும் பங்காளியாவேன் என்பதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை” என்று செவ்வாயன்று தன் மீதான வழக்கு விசாரணைக்கு வந்தபோது 93 வயதான கிரோனின் குறிப்பிட்டார்.
தான் பணியாற்றிய முகாமில் யூதர்கள் மற்றும் ஏனைய கைதிகள் நச்சுவாயு ஏற்றி படுகொலை செய்யப்படுவது பற்றி தெரிந்து வைத்திருந்ததாக அவர் ஒப்புக்கொண்டார்.
இந்த வழக்கு விசாரணையில் நாஜிக்களின் வதை முகாமில் இருந்து உயிர்தப்பியவர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் என்று 70 பேர் வரை பங்கேற்றிருந்தனர்.
“நான் மன்னிப் புக் கேட்டுக்கொள்கிறேன்” என்று கிரோனின் இதன்போது தெரிவித்தார். எனினும் அந்த முகாமில் இருந்த எந்த கைதிக்கும் தான் எந்த வொரு கேடும் செய்யவில்லை என்றார்.
ஜெர்மனியின் வடக்கு நகரான லன்பேர்க் நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கில், “சட்டரீதியான எனது குற்றச்செயல் பற்றி நீங்கள் தீர்மானியுங்கள்” என்று கிரோனின் கூறினார்.
நாஜி யுத்த குற்ற சந்தேக நபர்கள் தற்போது அதிக வயது முதிர்ந்தவர்களாக இருக்கும் சூழலில் கிரோனின் இவ்வாறான வழக்கிற்கு முகம்கொடுக்கும் கடைசி நபராக இருப்பார் என்று நம்பப்படுகிறது. இரண்டாவது உலகப் போர் முடிந்து நாஜி வதை முகாம்கள் முடப்பட்டு தற்போது 70 ஆண்டுகள் கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கிரோனின் (Oskar Groening) மீது 300,000 பேரை கொலை செய்ய உடந்தையாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் 15 வருடங்கள் வரை சிறைதண்டனை அனுபவிக்கவேண்டிவரும்.
நாஜி வதைமுகாமில் கிரோனின் ஒரு கணக்குப் பதிவாளராக கொலை செய்யப்படுபவர்களின் பணங்களை பெற்று பதிவு செய்பவராக இருந்துள்ளார் என்று அரச வழக்கறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். தவிர அவர் வதை முகாம் வேலிப்பகுதியின் காவலராகவும் இருந்துள்ளார்.
யுத்த காலத்தில் அதில் பங்கேற்கும் கட்டாயத்திலேயே நாஜிப் படை யில் இணைந்ததாக குறிப்பிட்ட கிரோனின், அப்போது நச்சுவாயு அறைபற்றி தனக்கு எதுவும் தெரியாமல் இருந்ததாக தெரிவித்தார்.
உறுதியான குரலில் வாக்குமூலம் அளித்த கிரோனின், தான் கண்ட கொ^ர நிகழ்வுகளையும் விபரித்தார்.
நாஜி வீரர் ஒருவர் அழும் குழந்தையை டிரக் வண்டியில் தலையை மோதவிட்டு கொலைசெய்தது பற்றியும் அவர் குறிப்பிட்டார். தான் அதிர்ச்சியடைந்து மூன்று தடவைகள் இடமாற்றத் திற்கு கோரியபோதும் அது நிராகரிக்கப்பட் டதாகவும் கிரோனின் குறிப்பிட்டார்.
தான் ஒருமுறை நச்சுவாயு அறைக்கு அருகால் போகும்போது அங்கிருந்து பலத்த அழுகை மற்றும் கூச்சல் கேட்டு பின்னர் அது பலவீனம் அடைந்து அமைதியானது பற்றியும் கிரோனின் நீதிமன்றத்தில் விபரித்தார்.
நாஜிப்படுகொலைகள், “எந்தவகையான வெறுப்பின் பின்னணியில் ஏற்படுகிறது? எனக்கு அது பற்றி புரிந்துகொள்ள முடி யாமல் இருக்கிறது” என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஒஸ்விட்ச் கொலை முகாமிலிருந்த உயிர்தப்பிய 81 வயது இவா கோர் இந்த வழக்கு விசாரணைக்கு முன் கருத்து தெரிவித்தபோது, “பாரிய படுகொலை கட்டமைப்புக்குள் இருந்தவர் என்ற வகையில் அவரும் ஒரு கொலையாளிதான்” என்று கிரோனின் மீது குற்றம்சாட்டினார்.
ஏனைய நாஜி குற்றவாளிகள் போலன்றி கிரோனின் கொலை முகாமில் தான் செய்தவை மற்றும் கண்டவைகள் பற்றி ஊடகங்களுக்கு வெளிப்படையாக பேட்டி களை அளித்துள்ளார்.
ஒஸ்விட்ச் கொலை முகாமில் 1940 மற்றும் 1945 ஆம் ஆண்டுகளில் சுமார் 1.1 மில்லியன் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
இதில் ஐரோப்பிய யூதர்களே பெரும்பான்மையானவர்களாவர். சோவியட் படை இந்த முகாமை விடுவித்தது.