ஒவ்வொரு நாளும் உலகை அதிரவைத்துக்கொண்டிருக்கும், ஈராக்கையும் சிரியாவையும் பதறவைத்துக்கொண்டிருக்கும் ஐ.எஸ்.ஸின் தலைவராக இருந்த அல்–பக்தாதி குண்டுத்தாக்குதலில் காயமடைந்துவிட்டாராம்.
ஐ.எஸ். அமைப்பின் தலைவர், அமெரிக்காவின் வான் தாக்குதலில் காயமடைந்ததாக அண்மைக்காலங்களில் சர்வதேச ஊடகங்கள் பரபரப்பாக செய்தி வெ ளியிட்டுக்கொண்டிருந்தன.
ஆனால் அந்தச் செய்தி பொய் என்றும் ஒரு சிலர் மறுத்துவந்தனர். இந்தச் சந்தர்ப்பத்தில் அது உண்மைதான் என்பதைப்போல தகவல்கள் கசிகின்றன.
அவர் கடந்த மாதம் மேற்கு ஈராக் பகுதியில் பதுங்கியிருந்த போது அமெரிக்க கூட்டு படைகள் ஐ.எஸ்.ஸை குறிவைத்து குண்டு வீச்சு நடத்தியது.
இத்தாக்குதலில் ஐ.எஸ். இயக்கத்தலைவர் அபுபகர் அல் பக்தாதி படுகாயம் அடைந்தது உண்மைதானாம்.
உயிருக்கு போராடும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறதாம். எனவே அவரால் பணியாற்ற முடியாமல் இருப்பதாகவும் சொல்கிறார்கள்.
அதனால் ஐ.எஸ்.அமைப்புக்கு புதிய தலைவர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளாராம்.
பக்தாதி காயமடைந்ததை அடுத்து ஐ.எஸ்.தீவிரவாத இயக்கத்தை வழிநடத்த தற்காலிகமாகத்தான் புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் சொல்கின்றன.
இத்தகவலை ஈராக் அரசு ஆலோசகர் டாக்டர் ஹிசம் அல்– ஹஷிமிதான் (Iraqi government advisor Dr Hisham al Hashimi) தெரிவித்துள்ளார்.
ஒரு வேளை அல்–பக்தாதி இறந்து விட்டால் தற்போது தற்காலிக தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் அப்ரி தொடர்ந்து தலைவராக இருப்பார் என்ற தகவலும் கிடைத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
புதிய தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள அப்ரி ஈராக்கின் மொசூல் நகரை சேர்ந்தவர். தல் அபர் நகரில் உள்ள பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக பணிபுரிந்துள்ளார்.
இவரை ஹாஜி இமான் என்றும் அழைப்பார்களாம்.
இவர் அல்–பக்தாதியின் வலது கரமாக திகழ்ந்தவராம்.
சரி இந்த ஐ.எஸ். அமைப்பை யார் உருவாக்கினார்கள்?
ஒவ்வொரு தகவலும் ஒவ்வொரு மாதிரி சொல்கின்றன. இதில் புதிய தகவல் ஒன்று இப்படி சொல்கிறது.
இந்த இயக்கத்தை உருவாக்கி அதன் மூளையாக செயற்பட்டது சதாமின் ஆட்சிக் காலத்தில் ஈராக் உளவுத்துறை அதிகாரியாக பணியாற்றிய சமிர் அப்த் முகமது அல் கலிஃபா தான் என…
ஜெர்மன் நாட்டின் www.spiegel.de என்ற இணையத் தளம் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் 31 பக்க ஆவணங்களை பெற்றுள்ளது. கையால் எழுதப்பட்டுள்ள அந்த ஆவணங்களில் ஐ.எஸ். இயக்கத்தின் செயற்பாடுகள் எப்படி இருக்க வேண்டும் என விவரிக்கப்பட்டுள்ளது.
www.spiegel.de இணையத்தளம் வெளியிட்டுள்ள கட்டுரையில் ….
ஈராக் அதிபராக சதாம் இருந்த போது விமானப் படையின் உளவுப் பிரிவு அதிகாரியாக இருந்தவர் சமிர் அப்த் முகம்மது அல் கலிஃபாவி. (Samir Abd Muhammad al-Khlifawi,) இவர்தான் ஐ.எஸ். இயக்கத்தின் மூளையாக கருதப்படுகிறார்.
இவரைத்தான் ஹாஜி பக்கர் என ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் அழைக்கிறது. சதாமின் ஆட்சிக் காலத்தில் எப்படியெல்லாம் அரசு இயந்திரம் இயங்கியதோ அதே பாணியில்தான் அதாவது கடத்தல், படுகொலை என்ற பாணியில் சிரியாவின் வடபகுதியை ஆக்கிரமித்துள்ளது ஐ.எஸ்.
2006ஆம் ஆண்டு முதல் 2008ஆம் ஆண்டு வரை அமெரிக்காவின் தடுப்புக் காவலில் இருந்தவர் ஹாஜி பக்கர். 2010ஆம் ஆண்டு பக்கரும் ஈராக் முன்னாள் உளவுத்துறை அதிகாரிகளும் அபு பக்கர் அல்–பக்தாதியை இஸ்லாமிய தேசத்தின் அதிகாரப்பூர்வ தலைவராக உருவாக்கினார்கள்.
2012ஆம் ஆண்டு வடக்கு சிரியாவில் நகரங்கள் ஆக்கிரமிக்கப்படுவதை பார்வையிடுவதற்காக ஹாஜி பக்கர் சென்றார்.
ஹாஜி பக்கர்
அதன் பின்னர் சவூதி அரேபியா, துனிசியா, செச்சேனியா, உஸ்பெஸ்கிஸ்தான் என வெளிநாடுகளில் இருந்து தீவிரவாதிகளை இணைக்கும் திட்டத்தை செயற்படுத்தியவரும் ஹாஜி பக்கர்தானாம்.
2014ஆம் ஆண்டு சிரியாவில் நடைபெற்ற மோதலில் ஹாஜி பக்கர் கொல்லப்பட்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது. ஹாஜி பக்கர் கொல்லப்பட்ட பின்னர் 2014ஆம் ஆண்டு அவர் வீட்டில் இருந்த ஆவணங்கள் துருக்கிக்கு கடத்தப்பட்டு அங்கிருந்து ஜெர்மனுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
இவ்வாறு அந்த இணையத்தள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது இப்படி இருக்கலாம். அதற்கு வாய்ப்பும் இருக்கத்தான் செய்கிறது.
ஆரம்பத்தில் சிரியா உள்நாட்டுப் போரின்போது அங்கு நிலைகொண்டிருந்த ஐ.எஸ் அமைப்பு, அங்கிருந்து ஈராக்கினுள் முன்னேறத் தொடங்கியது.
ரமாடி, பலூஜா என ஒவ்வொரு நகரமாக இதன் கட்டுப்பாட்டுக்குள் விழுந்தன. ஈராக்கின் இரண்டாவது பெரிய நகரமான மொசூல் இவர்களின் பிடிக்குள் போனபோது உலகம் அதிர்ந்தது.
இதைத் தொடர்ந்து சதாமின் சொந்த ஊரான திக்ரித் மற்றும் சமாரா, ஜலாலா, அல் அண்பார்… ஆகிய பகுதிகளும் ஐ.எஸ். வசம் விழுந்தன. தொடர்ந்து பாக்தாத் நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள்.
சிரியாவின் பல பகுதிகளும் இவர்களின் வசம் சென்றுவிட்டன. எகிப்தின் சில பகுதிகளிலும், லிபியாவின் கிழக்குப் பகுதிகளிலும் ஐ.எஸ் ராஜ்ஜியம்தாம். இப்படி தங்களால் கைப்பற்றப்பட்ட பகுதிகளை ‘இஸ்லாமிக் ஸ்டேட்’ என அறிவித்துள்ள ஐ.எஸ் அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல்–பஹ்தாதி, இந்த அரசின் மன்னராகவும் தன்னை அறிவித்துள்ளார்.
இதை உலகின் எந்த இஸ்லாமிய அமைப்பும் ஏற்கவில்லை என்பது ஒரு பக்கம் இருக்க… உண்மையில் ஐ.எஸ் முன்வைக்கும் ‘இஸ்லாமிக் ஸ்டேட்’ என்பது பரந்து விரிந்தது. ஸ்பெயின், இந்தோனேஷியா, இந்தியா என தனித்தனியான மூன்று கண்டங்களைச் சேர்ந்த நாடுகளை வளைத்துச்செல்கிறது அதன் வரைபடம்.
இந்த அமைப்பில் ஜிகாதிகளாகச் சேர விரும்புவோருக்கு, தேச எல்லைகள் ஒரு நிபந்தனை அல்ல. இதனால் உலகின் பல நாடுகளைச் சேர்ந்த இளைஞர்கள் ஐ.எஸ்-ஸில் இணைய ஆர்வம் காட்டிவருகிறார்கள்.
கொலைகளும் மரணங்களும் போர்களும் நமக்கு புதியவை அல்ல. உலகின் ஏதோ ஒரு மூலையில் நடைபெறும் குண்டுவெடிப்புகள் குறித்தும் மனிதச் சாவுகள் குறித்தும் அன்றாடம் செய்திகள் வந்துகொண்டுதான் இருக்கின்றன.
அவை நம் உணர்வுகளை மரத்துப்போக வைத்துவிட்டன.
சிதறிய உடல்களும் ரத்த சிவப்பான நிலமும் நமக்குப் பழகிவிட்டன.
இதையெல்லாம் தினசரி செய்திகளின் ஊடாக நாம் கடந்து செல்கிறோம்.
மொசூல் நகரத்தைக் கைப்பற்றியபோது அங்குள்ள மத்திய வங்கியைச் சூறையாடி, 429 மில்லியன் டொலர் மதிப்புள்ள ஈராக் தினார்களைக் கொள்ளையடித்தனர் ஐ.எஸ் அமைப்பினர்.
இவ்வளவு அதிகப் பணம், உலகில் வேறு எந்தத் அமைப்பிடமும் இல்லை. ஆகவே, இவர்களிடம் ஆயுதங்களுக்குப் பஞ்சம் இல்லை. அவற்றால் சுட்டுத் தீர்க்கவும் செய்கின்றனர். ஆனால், இந்த நவீன ஆயுதங்களின் தாக்குதல் வழியே நிகழும் மரணங்கள் நம்மைத் துணுக்குறச்செய்வது இல்லை.
இப்படி எரித்துக் கொல்வது, கூட்டமாகப் படுக்கவைத்துச் சுட்டுக் கொல்வது, மண்டியிடவைத்து கழுத்தை அறுத்துக் கொல்வது என அனைத்துமே இரக்கம் இல்லாதவை. இவற்றை புகைப்படம், வீடியோ எடுத்து, பின்னணி இசை கொடுத்து வெளி உலகுக்கு அறிவிப்பதன் மூலம், உலகத்துடன் ஓர் உளவியல் போரை நிகழ்த்துகின்றனர்.
தங்களைப் பற்றி உலகம் எவ்வாறு கருத வேண்டும் என்பதை அவர்கள் தீர்மானிக்கிறார்கள். அந்தப் பதற்றம் ஏற்படுத்தும் அச்சத்தில், அவர்கள் இன்னும் ஒரு படி முன்னேறுகின்றனர்.
ஆனால் ‘இஸ்லாமிய பேரரசில்’ வாழ முடியாமல் இதுவரை ஐந்து லட்சத்துக்கும் அதிகமான முஸ்லிம் மக்கள் ஈராக்கில் இருந்தும், சிரியாவில் இருந்தும் அகதிகளாக வெளியேறி உள்ளனர்.
ஐ.எஸ் அமைப்பு நிகழ்த்தும் கொடூரக் கொலைகளின் விளைவாக, உலகத்தின் பார்வை வெறுப்பாகத்தான் அவர்கள் மேல் விழுகிறது.
இப்படி கொன்றுகுவித்துவிட்டு யாரை ஆட்சி செய்யப்போகிறது ‘இஸ்லாமியப் பேரரசு?
Ex-Saddam Intelligence Officer creator of Islamic State Structure for Conquest of Syria and Iraq
www.spiegel.de இணையதளம் வெளியிட்டுள்ள கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது:1. ஈராக் அதிபராக சதாம் உசேன் இருந்த போது விமானப் படையின் உளவுப் பிரிவு அதிகாரியாக இருந்தவர் சமிர் அப்த் முகம்மது அல் கலிஃபாவி. இவர்தான் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தின் மூளையாக கருதப்படுகிறார். இவரைத்தான் ஹாஜி பக்கர் என ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் அழைக்கிறது.2. சதாம் உசேன் ஆட்சிக் காலத்தில் எப்படியெல்லாம் அரசு இயந்திரம் இயங்கியதோ அதே பாணியில்தான் அதாவது கடத்தல், படுகொலை என்ற பாணியில் சிரியாவின் வடபகுதியை ஆக்கிரமித்துள்ளது ஐ.எஸ். இயக்கம்.3. தமது கைப்பட ஐ.எஸ். இயக்கம் எப்படி கட்டமைக்க வேண்டும்; யார் யாருக்கு என்ன என்ன பொறுப்புகள்; இயக்கத்துக்கான நிதியை எப்படி திரட்டுவது என்பதை எழுதியிருக்கிறார் ஹாஜி பக்கர்.
3. 2006ஆம் ஆண்டு முதல் 2008ஆம் ஆண்டு வரை அமெரிக்காவின் தடுப்பு காவலில் இருந்தவர் ஹாஜி பக்கர்.
4. 2010ஆம் ஆண்டு பக்கரும் ஈராக் முன்னாள் உளவுத்துறை அதிகாரிகளும் அபு பக்கர் அல் பக்தாதியை இஸ்லாமிய தேசத்தின் அதிகாரப்பூர்வ தலைவராக உருவாக்கினார்கள்..
5. 2012ஆம் ஆண்டு வடக்கு சிரியாவில் நகரங்கள் ஆக்கிரமிக்கப்படுவதை பார்வையிடுவதற்காக ஹாஜி பக்கர் சென்றார். அதன் பின்னர் செளதி அரேபியா, துனிசியா, செச்சேனியா, உஸ்பெஸ்கிஸ்தான் என வெளிநாடுகளில் இருந்து தீவிரவாதிகளை இணைக்கும் திட்டத்தை செயல்படுத்தியவரும் ஹாஜி பக்கர்தான்.
6. 2014ஆம் ஆண்டு சிரியாவில் நடைபெற்ற மோதலில் ஹாஜி பக்கர் கொல்லப்பட்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது.
7. ஹாஜி பக்கர் கொல்லப்பட்ட பின்னர் 2014ஆம் ஆண்டு அவர் வீட்டில் இருந்த ஆவணங்கள் துருக்கி கடத்தப்பட்டு அங்கிருந்து ஜெர்மனுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
இவ்வாறு அந்த இணைய தள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(முன்னைய தொடர்களை பார்வையிட இங்கே அழுத்தவும்:எரிந்து கொண்டிருக்கின்றது எண்ணொய் )