சுவிட்சர்லாந்தில் அபாயகரமான அமிலங்கள் மற்றும் ரசாயனங்களை ஏற்றிச்சென்ற சரக்கு ரயில் ஒன்று தடம் புரண்டதால், பயணிகள் ரயில் சேவை முற்றிலும் பாதிப்படைந்துள்ளது.
Lausanne-விலிருந்து 17 கிலோ மீற்றர் சென்றபோது, Daillens என்ற பகுதி அருகே திடீரென ரயில் சக்கரங்கள் தடத்தை விட்டு புரண்டு பெரும் விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் கந்தக அமில டேங்கர் உள்பட, 6 சரக்கு பெட்டிகள் ரயிலிருந்து கவிழ்ந்து சுமார் 300 மீற்றர் தொலைவிற்கு இழுத்து செல்லப்பட்டன.
டேங்கர் பழுதானதால் ரசாயனங்கள் மற்றும் 25 டன் எடையுள்ள கந்தக அமிலம் ரயில் தடம் முழுவதும் கசிந்து வீணாகியது.
இந்த விபத்து குறித்து அறிக்கை வெளியிட்ட Swiss Federal Railways (SBB), லுசேனிலிருந்து, Yverdon நகருக்கு செல்லும் அனைத்து ரயில்களும் சில தினங்களுக்கு செயல்படாது என அறிவித்தது.
மேலும், 300 மீற்றர் தொலைவுள்ள ரயில் தடத்தை சீரமைக்க சில நாட்கள் ஆகும் என்பதால், அந்த வழியாக செல்லக்கூடிய பயணிகளின் வசதிக்காக கூடுதல் பேருந்து வசதி செய்து தரப்பட்டுள்ளது.
Neuchâtel மற்றும் Biel/Bienne நகரங்களிலிருந்து செல்லும் அனைத்து ரயில்களும் Yverdon நகர் வழியாக செல்லாமல் Bern வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது.
மேலும்,லுசேன்(Lausanne) நகரிலிருந்து பாரீஸ் நகருக்கு செல்லும் TGV ரயில் சேவை ஜெனிவா வழியாக மாற்றி விடப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.