உரும்பிராய் சைவத் தமிழ் வித்தியாசாலையில் சிவகுமாரன் மேற்கொண்ட குண்டு வெடிப்பு பற்றி கடந்த பதிவில் எழுதியிருந்தேன்.
இந்த குண்டு வெடிப்பின் பின்னர் கைதுசெய்யப்பட்டு பின்னர் விடுதலையான சிவகுமாரனுடன் இணைந்து நான் மேற்கொண்ட செயற்பாடுகள் பற்றி இந்த பதிவில் குறிப்பிடுகிறேன்.
ஒரு சம்பவத்துடன் தொடர்புள்ள பல சம்பவங்கள் மற்றும் பல்வேறு நபர்கள் பற்றியெல்லாம் நிறையவே எழுத முடியும்.
ஆனாலும் இந்த தொடரை நான் அவசியம் இல்லாதவகையில் நீட்டிச் செல்ல விரும்பாமையினால் முக்கியமான சம்பவங்களை மட்டுமே விபரிக்கவிருக்கிறேன்.
1970 களின் இறுதிப்பகுதியில் எனக்கும் சிவகுமாரனுக்கும் இடையிலான நட்பு பெரிதும் வளர்ந்துவிட்டிருந்தது.
பல்வேறு அரசியல்- சமூக விடயங்கள் குறித்து நாங்கள் கலந்துரையாடினோம். இவற்றுள் தமிழ் மாணவர்களுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தரப்படுத்தல் முறைமை முக்கியமானது.
இந்த தரப்படுத்தலின் பிரகாரம் க.பொ.த. (உயர்தர) பரீட்சையில் ஒரேவினாத்தாளை இருவேறு மொழிகளில் (தமிழ் மற்றும் சிங்களம் ) எழுதும் மாணவர்கள் வேறுபட்ட வெட்டுப்புள்ளிகளால் கணிக்கப்பட்டு பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டனர்.
பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிபெறும் தமிழ் மற்றும் சிங்கள மாணவர்களுக்கு இடையே பெரும் வித்தியாசம் ஏற்படும் வகையில் இவ்வெட்டுப்புள்ளி முறைமை அமைந்தது.
இந்த தரப்படுத்தல் முறைமையை அறிமுகப்படுத்தி நடைமுறைப்படுத்தியவர் அப்போதைய கல்வி அமைச்சராக இருந்த தமிழ் பேசும் பதியுதீன்முகமட் ஆவார்.
1970 தரப்படுத்தல் அடிப்படையில் இனரீதியாக மாணவர்கள் பெறவேண்டிய வெட்டுப்புள்ளிகள்
பாடநெறி தமிழர் சிங்களவர்
பொறியியல்
(பேராதனைபல்கலைக்கழகம்) 250 227
(கட்டுப்பெத்தை வளாகம்) 232 212
மருத்துவம் (பல்மருத்துவம்) 250 229
பௌதிகவிஞ்ஞானம் 204 183
கட்டிடக்கலை 194 180
உயிரியல்விஞ்ஞானம் 184 175
(ஆதாரம்: இலங்கை பாராளுமன்ற ஹன்சார்ட் – 1983)
இந்த முறைமை காரணமாக பல்கலைக்களகங்களுக்கு தெரிவாகும் தமிழ் மாணவர்களின் எண்ணிக்கை பெரிதும் வீழ்ச்சி அடைந்தது.
இதன் காரணமாக தரப்படுத்தலுக்கு எதிராக மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வையும் போராட்டத்தையும் ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்ந்த நாம், 1970 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் யாழ் பொது நூலகத்தில் ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்கிறோம்.
இந்த கூட்டத்தில் நான், சிவகுமாரன், அரியரத்தினம், குமார் உட்பட யாழ்ப்பாணத்தின் பிரபலமான பாடசாலைகளின் பல மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் எல்லா பாடசாலைகளுக்கும் சென்று தரப்படுத்தல் பற்றி விளக்கம் கொடுப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
அத்துடன், மாணவர்களுக்கான ஒரு அமைப்பை தொடங்க வேண்டும் என்றும் இதுபற்றி அட்டுத்த கூடத்தில் தீர்மானிப்பது என்றும் முடிவுசெய்யப்பட்டது.
எமது அடுத்த கூட்டம் யாழ்ப்பாணம் மலேயன் கபேயில் நவம்பர் 13 ஆம் திகதி 1970 ஆம் ஆண்டு நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் என்னுடன், பொன்.சிவகுமாரன், தம்பித்துரை, முத்துக்குமாரசாமி, அரியரத்தினம், சந்திரசேகரம், சிவஞானசுந்தரம், தவராசா, வில்வராசா, சேயோன்(லோரன்ஸ் திலகர்), இலங்கைமன்னன், மைக்கல் தம்பிநாயகம், ஆனந்தன், வலன்ரைன் கருணாகரன், நாராயணதாஸ், சபாலிங்கம் ஆகியோருடன் சுமார் 150 வரையான மாணவர்கள் கலந்துகொண்டனர். மலேயன் கபே மாணவர்களால் நிரம்பி வழிந்தது.
முன்னர் தீர்மானித்திருந்தபடி புதிய அமைப்பை தொடங்குவது பற்றி விவாதித்தோம். என்ன பெயர் வைப்பது என்றும் கலந்துரையாடினோம். ‘தமிழ் மாணவர் பேரவை’ என்ற பெயரை நான் முன்மொழிந்தேன்.
இதனை பலரும் ஏற்றுக்கொண்டனர். அத்துடன், என்னையும் அரியரத்தினத்தையும் ஒருங்கிணைப்பாளர்களாக தெரிவு செய்தனர்.
தரப்படுத்தலுக்கு எதிராக 1970 ஆம் ஆண்டு நவம்பர் 13 ஆம் திகதி ஒரு எதிர்ப்பு பேரணியை நடத்துவது என்று இந்த கூட்டத்தில் தீர்மானித்தோம்.
அன்று தான், நான் கடந்த பதிவில் விபரித்த யாழ் முற்றவெளி கூட்டமும் எம்மால் நடத்தப்பட்டது. இதுவே தமிழ் மாணவர் பேரவையின் முதலாவது கூட்டமுமாகும்.
நவம்பர் 23ம் திகதி நடத்தப்படும் ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டத்திற்கான பிரச்சாரம் மற்றும் ஆயத்தவேலைகளில் நானும், சிவகுமாரனும், சந்திரசேகரமும், அரியரத்தினமும் தீவிரமாக ஈடுபட்டோம்.
முற்றவெளிக் கூட்டம் மற்றும் பேரணிக்கு பொலிசாரின் அனுமதியை பெறவேண்டியிருந்தது. அன்றைய அரசியல் மற்றும் சமூக தலைவர்களின் பங்குபற்றல் இன்றி இந்த கூட்டமும் பேரணியும் ஒழுங்கு செய்யப்பட்டதால் பல காரணங்களைக் கூறி அன்று கண்ணியமான பொலிஸ் அதிகாரியென கூறப்பட்ட பி. சுந்தரலிங்கம் அனுமதியை மறுத்தார்.
இதனால் பொலிசாரின் அனுமதி இன்றியே பேரணியையும் கூட்டத்தையும் நடத்துவது என்று தீர்மானித்தோம்.
1970 நவம்பர் 23 அன்று ஊர்வலம் ஆரம்பமாகவிருந்த கொக்குவில் அம்மன்கோவில் முன்றலை நோக்கி மாணவர்கள் யாழ்ப்பாணக் குடாநாட்டின் சகல பகுதிகளிலிருந்தும் திரளத்தொடங்கினர்.
அன்று திங்கட் கிழமை பாடசாலை நாளாக இருந்ததால், காலையிலே பாடசாலைகளில் ஒன்று கூடிய மாணவர்கள் தமது வகுப்புகளை பகிஸ்கரித்து விட்டு ஊர்வலத்தில் கலந்து கொள்ள வந்திருந்தனர்.
1961 சத்தியாக்கிரகத்தின் பின்னர் நடைபெற்ற முதலாவது அரச எதிர்ப்பு ஊர்வலமாகையால் யாழ் நகரத்தில் மட்டுமன்றி யாழ் குடாநாடெங்கும் பொலிசார் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.
ஊர்வலம் ஆரம்பமாகவிருந்த இடத்திற்கு அன்றைய உதவிப்பொலிஸ் அதியஸ்தராக இருந்த ஆரியசிங்கா மற்றும் கடும்போக்குடைய இன்ஸ்பெக்டரான பராகொட ஆகியோர் வந்திருந்தனர். எனினும், பெரும் இழுபறியின் பின்னர் நண்பகல் 1 மணிக்கு பேரணி ஆரம்பமானது.
கொக்குவிலில் இருந்து புறப்பட்ட பேரணி காங்கேசன்துறை வீதியூடாக நகர்ந்து கஸ்தூரியார் வீதி வழியாக கச்சேரி வரை சென்று அங்கு அரசஅதிபரிடம் தமது மகஜரை கொடுத்து விட்டு பின்னர் கண்டிவீதியூடாக யாழ் முற்றவெளியை அடைந்தது.
முற்றவெளியில் நடைபெற்ற கூட்டம் பற்றி ஏற்கனவே நான் எனது முதல் பதிவில் குறிப்பிட்டிருக்கிறேன்.
பிரபலமான பாடசாலைகளின் மாணவர்களுடன் யாழ். வேம்படி மகளிர் கல்லூரியைச்சேர்ந்த மாணவி ஒருவரும் உணர்ச்சிகரமாக உரையாற்றி தரப்படுத்தல் முறை எத்தகைய பாதிப்பை எதிர்காலத்தில் தமிழ் மாணவர்களுக்கு ஏற்படுத்தப் போகின்றது என்பதை விளக்கினார்.
அங்கு இறுதியாக உரையாற்றிய நான் சிங்களத்தின் அடக்குமுறைகளில் இருந்து விடுபட தமிழ் மக்களுக்கென்று தனி நாட்டை உருவாக்குவதே ஒரே வழி என்று கூறினேன்.
இந்தக் கூட்டத்தின் பின்னர் புதிய தரப்படுத்தல் கல்விமுறையை அமுலாக்கிய கல்வி அமைச்சர் பதியுதீன் முகமட்டின் கொடும்பாவி முற்றவெளியை சுற்றி இழுத்து வரப்பட்டு மாணவர்களால் கொழுத்தப்பட்டது.
ஒவ்வொரு பாடசாலைகளுக்கும் சென்று விழிப்புணர்வு கூட்டங்களை நடத்துவது என்றும் எமது மலாயன் கபே கூட்டத்தில் முடிவு செய்திருந்தோம்.
முற்றவெளி கூட்டம் முடிவடைந்த பின்னர் டிசம்பர் மாதம் வந்திருந்ததால் பாடசாலைகளில் விடுமுறை விடப்பட்டிருந்தது.
இதனால் யாழ். மாவட்ட பாடசாலைகளில் இறுதியாக விடுமுறையை எதிர்நோக்கி இருந்த வல்வெட்டித்துறை சிதம்பரா கல்லூரிக்கு சென்று எமது முதல் பிரசார கூட்டத்தை நடத்துவதற்கு முடிவு செய்தோம்.
சிதம்ரா கல்லூரிக்கு எதிராக அமைந்திருந்த கைப்பந்தாட்ட மைதானத்துடன் இணைந்து காணப்பட்ட இடத்தில் திரண்டிருந்த மாணவர்கள் மத்தியில் நான் மாணவர் பேரவையைப் பற்றிய ஒரு விளக்கவுரையை ஆற்றி தரப்படுத்தல் பற்றியும் விளக்கமளித்தேன்.
ஒரு வெட்டப்பட்ட பனைமரக் குற்றியொன்றில் நின்று உரை ஆற்றியமையும் மாணவர்கள் எராளமான கேள்விகளை என்னிடம் கேட்டமையும் இன்றும் நல்ல ஞாபகமாக இருக்கிறது.
அப்போது தனது விருப்பத்துக்குரிய ஆசிரியரான வேணுகோபாலிடமிருந்து தமிழரின் சுயாட்சி பற்றிய கருத்துக்களை ஆழமாக உள்வாங்கியிருந்த தம்பி பிரபாகரன் என்னை அந்த கூட்டத்தின் போது சந்திக்க விரும்பியதாகவும் ஆனால் கூட்டம் அதிகமாக இருந்தபடியினால் முடியாமல் போய்விட்டதாகவும் கூறினார்.
மாணவர்கள் மட்டுமன்றி பொது மக்களும் இந்த கூட்டத்தில் ஏராளமாக கலந்து கொண்டதால் எதிர்பார்த்தபடி எமது பிரசாரத்தை இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் அன்று எம்மால் நடத்த முடியவில்லை.
பல மாணவர்கள் எம்மை மீண்டும் சந்திக்க வேண்டும் என்றும் கோரியிருந்தனர். இதனால் மறுநாள் (29.11.1970 ) அன்று ரேவடிக் கடற்கரையில் பிற்பகல் ஐந்துமணிக்கு கூட்டம் நடைபெறும் என்றும் ஆர்வமுள்ள மாணவர்களை வருமாறும் அழைத்திருந்தோம்.
எமது கருத்துக்களுக்கு மக்கள் செவிமடுத்த விதமும் ஏராளமான மாணவர்களும் மக்களும் வருகை தந்திருந்தமையும் எமக்கு பெரும் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் தந்திருந்தது.
வல்வெட்டித்துறை பற்றி சிவகுமாரன் எனக்கு முன்னமே நல்லமுறையில் கூறியிருந்தார். அன்றைய கூட்டம் அவற்றை நிரூபிப்பதுபோல அமைந்திருந்தது. இந்த மண்ணில் இருந்து எமக்கு நிறையவே ஆதரவும் உதவியும் கிடைக்கும் என்பதை உணர்ந்து கொண்டேன்.
குறிப்பிட்டிருந்தபடி மறுநாள் 29.11.1970 பிற்பகல் ரேவடிக்கடற்கரையில் மாணவர்களுடனான சந்திப்பு நடைபெற்றது.
முதல்நாள் கூட்டத்தில் கிடைத்த உற்சாகம் காரணமாக சிவகுமாரனின் துணையின்றி நான் தனியாகவே இந்த சந்திப்பை நடத்தினேன். சிவகுமாரன் வேறு சில வேலைகளில் ஈடுபட்டிருந்தார்.
இந்த கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த மாணவர்களை மாணவர் பேரவையில் இணையுமாறு கேட்டேன்.
ஏராளமானவர்கள் இணைவதற்கு முன்வந்தனர். எனினும் அப்போது (டிசம்பர்) பரீட்சைக் காலமாதலால் பரீட்சைமுடிந்தவுடன் மீண்டும் அவர்களை சந்திப்பதாகவும் அதன்போது பேரவையில் அவர்கள் இணைய முடியும் என்றும் கூறினேன்.
மாணவர் பேரவை ஆரம்பிக்கப்பட்டு அபோது தான் ஒரு வாரம் ஆகி இருந்ததால் எம்மிடம் சரியான செயற்திட்டங்களும் உறுப்பினர்களுக்கான விதி முறைகளும் இருக்கவில்லை என்பதும் இதற்கான மற்றொரு காரணம்.
ரேவடிக் கடற்கரையில் மாணவர்களுடனான அன்றைய சந்திப்பு முடிவடைந்ததைத் தொடர்ந்து மாணவர்கள் அல்லாத இளைஞர்களுக்கான தனியான சந்திப்பு ஒன்று நடைபெற்றது. வல்வெட்டித்துறை சந்தியில் சனசமூக நிலையத்தின் மேற்குப்புறத்தில் அமைந்திருந்த நடராசா பில்டிங்கின் மேல்மாடியில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பெரியசோதி, வேணுகோபால், குட்டித்துரை, கணபதிப்பிள்ளை, யோகரெத்தினராசா, அத்தண்ணா, குட்டிமணி, தங்கத்துரை, நடேசுதாசன், சின்னச்சோதி, சக்கோட்டைமோகன், சற்குணாடி, சுந்தர்ராஜன், கண்ணன் எனப்பலர் கலந்துகொண்டனர்.
இந்த வல்வெட்டித்துறை இளைஞர்களின் தமிழ் மக்களின் விடுதலை பற்றிய சிந்தனைகளும் செயற்பாடுகளும் என்னை வியக்கவைத்தது. மெய்சிலிர்த்துப் போய்விட்டேன்.
இவர்களது நடைமுறை செயற்பபாடுகளும் எமது கொள்கைகளும் ஒன்றாக இருந்ததால் இந்த இளைஞர்கள் மாணவர் பேரவையுடன் இணைந்து செயற்படுவதில் எந்த தயக்கமும் இல்லை என்று கூறினேன்.
23 நவம்பர் 1970 யாழ் முற்றவெளியில் நடந்த கூட்டத்தில் எனது பேச்சை நேரடியாக கேட்டிருந்த பெரியசோதி அதுபற்றி குறிப்பிட்டதுடன் எனது கருத்துக்களுடன் முழுமையாக உடன்பட்டார். இந்த சந்திப்பில் அவர்கள் எம்முடன் இணைந்து செயற்படுவதற்கு மனமொத்து சம்மதித்தனர்.
ஏற்கெனவே சிவகுமாரன் இந்த இளைஞர்களை நெற்கொழு கோழிப்பண்ணையில் இனம்கண்டு சிபார்சு செய்திருந்தார்.
இந்த நிலையில் எம்முடன் சேர்ந்து இயங்குவதற்கு இந்த இளைஞர்கள் சம்மதித்தமை பெரும் திருப்தியையும் மன நிறைவையும் தந்தது.
ஒரு உறுதியான பக்கபலம் ஏற்பட்டிருந்ததாக உணர்ந்தேன். நாங்கள் அப்போது தான் அமைப்பு ரீதியாக என்ன செய்யலாம் என்று சிந்தித்துக் கொண்டிருந்தோம்.
ஆனால், அவர்கள் ஒரு குழுவாக எதிர்கால செயற்பாடுகளுக்கான தயார்படுத்தல்களில் ஏற்கனவே இறங்கியிருந்தார்கள். இவர்களுக்கு ஊர் மக்களின் ஆதரவும் பல வழிகளில் இருந்தது.
அன்று பிற்பகல் ரேவடிக் கடற்கரையில் நடந்த கூட்டத்தில் கலந்துகொள்ள முடியாமல் போய்விட்டதாகவும் அதனால் இந்தக் கூட்டத்தில் தன்னையும் கலந்து கொள்ள அனுமதிக்குமாறு கேட்டுள்ளார்.
ஆனால், இந்த கலந்துரையாடல் மாணவர் அல்லாத இளைஞர்களுக்கானது என்றும் சுரேஸ்குமாரின் மூத்தசகோதரன் துரையும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டிருந்ததாலும் இவர்களை இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள அந்த இளைஞர்கள் அனுமதிக்கவில்லை.
ஆனாலும், ஏறத்தாழ இரண்டுமணித்தியாலங்கள் இக்கலந்துரையாடல் மாடியில் நடந்து கொண்டிருந்தவேளையில் எப்படியும் என்னை சந்திக்க வேண்டுமென்ற பிடிவாதத்துடன் இவர்கள் இருவரும் கீழே காத்திருந்துள்ளனர்.
இறுதியாக கலந்துரையாடல் முடிந்து வெளியே வந்தபோது பிரபா என்னை முதன் முதலில் சனசமூக நிலையத்தின் முன்றலில் சந்தித்து உரையாடினார்.
இந்த சந்திப்பில் தம்பி பிரபா என்னிடம் என்ன கேட்டார் அதன் பின்னர் என்ன நடைபெற்றது என்பவற்றை எல்லாம் எனது அடுத்த பதிவில் எழுதுகிறேன்.
(சத்தியசீலன்)
சிவகுமாரன் வைத்த குண்டு: ஈழ விடுதலைப் போராட்டம் – (பாகம்-3)
ஈழத் தமிழ் இயக்கத்தின்’ தோற்றமும் வீழ்ச்சியும்: ஈழ விடுதலைப் போராட்டம் – (பாகம்-2)
தமிழ் மாணவர் பேரவையின் தோற்றம்: ஈழ விடுதலைப் போராட்டம் – (பாகம்-1)