வாஷிங்டன்: அமெரிக்காவில் பணியின்போது 2 போலீஸ் அதிகாரிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். 5 மாதத்தில் ஐந்து போலீசார் சுட்டுக்கொல்லப்பட்டதால், போலீஸ் துறையில் பதற்றம் நிலவுகிறது.
வளர்ந்த நாடான அமெரிக்காவில் சமீப காலமாக துப்பாக்கி கலாசாரம் பெருகி வருகிறது. குறிப்பாக போலீஸ் அதிகாரிகள் குறி வைத்து தாக்கப்பட்டு வருகின்றனர்.
கடந்த ஆண்டு, டிசம்பர் மாதம் நியூயார்க் நகரில் 2 போலீசார் சுட்டுக்கொல்லப்பட்டனர். கடந்த திங்கட்கிழமை சாதாரண உடையில் இருந்த ஒரு போலீஸ் அதிகாரி சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்த நிலையில் மிசிசிப்பி மாகாணத்தில், ஹட்டிஸ்பர்க் நகரில் நேற்று முன்தினம் பணியின்போது 2 போலீஸ் அதிகாரிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். அவர்களை சுட்டு வீழ்த்திய ஆசாமிகள், போலீஸ் வாகனத்தில் சம்பவ இடத்தில் இருந்து தப்பினர்.
ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்த போலீஸ் அதிகாரிகள் உடனடியாக அங்குள்ள மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டனர். ஆனால் அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் அவர்களது உயிர் வழியிலேயே பிரிந்து விட்டதாக அறிவித்தனர்.
சுட்டுக்கொல்லப்பட்ட போலீஸ் அதிகாரிகள் பெஞ்சமின் டீன் (வயது 34), லிக்குவாரி டேட் (25) ஆவார்கள்.
இவர்கள் 2 பேரும் சுட்டுக்கொல்லப்பட்டதின் பின்னணி என்ன என்பது உடனடியாக தெரிய வரவில்லை. கொலையாளிகள் தப்பிய கார், அநாதையாக விடப்பட்டு, பின்னர் போலீசாரால் மீட்கப்பட்டது.
இந்த படுகொலை சம்பவத்தில், சந்தேகத்தின் பேரில் மார்வின் பேங்க்ஸ் என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த கொலையில் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படுகிற மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
இது தொடர்பாக அந்த நகரின் மேயர் ஜானி டுபிரி விடுத்துள்ள அறிக்கையில், “ நம்மை பாதுகாக்கிறவர்கள் குறி வைத்து கொல்லப்பட்டுள்ளனர்.
இதே போன்று 30 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்றிருக்கிறது. போலீஸ் அதிகாரிகள் படுகொலையில் குற்றவாளி தேடப்படுகிறார். பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம்” என கேட்டுக்கொண்டுள்ளார்.
2 போலீஸ் அதிகாரிகள் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பதற்கு ஆக்ஸ்போர்டு போலீஸ் துறை இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளது.
இது குறித்து ‘டுவிட்டர்’ சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில், “சுடப்பட்ட ஹட்டிஸ்பர்க் போலீஸ் அதிகாரிகள் இருவரும் இறந்து விட்டனர்.
இது பயங்கரமானது. ஒட்டுமொத்த போலீஸ் சமுதாயத்துக்கும், அவர்களது குடும்பத்தினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
5 மாதத்தில் ஐந்து போலீசார் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பது, அமெரிக்க போலீஸ் துறையில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.