ஜனாதிபதியை கொலைசெய்ய சதிதிட்டமா? அது கடந்த ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி சனிக்­கி­ழமை. அம்­பாந்­தோட்டை மாவட்­டத்தின் ஸ்ரீலங்கா சுதந்தி­ரக்­கட்­சியின் பொதுக்­கூட்டம் அன்­றைய தினம் கூட்­டப்­பட்­டது.

அம்­பாந்­தோட்டை மாவட்­டத்தின் அங்­கு­ணு­கொல பெலஸ்­ஸவில் உள்ள கோட்­டை­யி­லேயே இந்த கூட்டம் நடை­பெற்­றது. இந்த கூட்­டத்தின் பிர­தானி அல்­லது தலைவர் ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் தலைவர் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன.

இந்­நி­லையில் ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் பல்­வேறு உறுப்­பி­னர்­களும் அன்­றைய தினம் அங்­கு­ணு­கொல பெலஸ்­ஸவை அடை­ய­லா­யினர்.

ஜனா­தி­பதி, பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் என்ற சிறப்பு பிர­மு­கர்கள் கலந்து கொள்ளும் நிலையில் அங்கு­ணு­கொ­ல­பெ­லஸ்ஸ கோட்­டையின் பாது­காப்பு தொடர்பில் நான் சொல்ல வேண்­டி­ய­தில்லை.

அப்­போது முற்­பகல் 10.30 மணி­யி­ருக்கும் ஏனைய பிர­மு­கர்­களை போன்றே பாரா­ளு­மன்ற உறுப்பினர்கள் நாமல் ராஜ­பக் ஷவும் அந்த கூட்­டத்­திற்கு வருகை தர­லானார்.

நாமல் ராஜ­பக் ஷ பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அந்த கூட்­டத்­துக்கு வரும் அந்த சந்­தர்ப்­பத்­திலும் அங்கு மூன்று வரி­சை­களை கொண்ட சோதனை சாவ­டி­களில் சோதனை ஆரம்­பிக்­கப்­பட்­டி­ருந்­துள்­ளன.

உள்ளே செல்ல மக்கள் நிரம்­பி­யி­ருந்த நிலையில் பாது­காப்பு சோத­னை­க­ளுக்கு அவர்கள் முகம் கொடுத்­தி­ருந்­தனர்.

இந்­நி­லையில் தான் கூட்­டத்­திற்கு வந்த பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நாமல் ராஜ­பக்ஷ சோதனை சாவடியை கடந்து ஓரிரு அடிகள் முன்­னோக்கி நகரும் போது ஜனா­தி­பதி பாது­காப்பு பிரிவின் உதவி பொலிஸ் அத்­தி­யட்­ச­ரான மல்­வ­ல­கேயை கண்டு உரை­யா­டி­யுள்ளார்.

உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் மல்­வ­ல­கேயை ஏற்­க­னவே அறிந்­தி­ருந்­த­தாலோ என்­னவோ நாமல்ராஜபக் ஷ உரை­யா­டலை மேற்­கொண்­டுள்ளார்.

உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் மல்­வ­லகே ஏற்­க­னவே முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்­ ஷவின் பாது­காப்பு பிரி­விலும் கட­மை­யாற்றி இருந்த நிலை­யி­லேயே தற்­போது ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறிசே­னவின் பாது­காப்பு பணி­க­ளிலும் ஈடு­பட்டு வந்தார்.

இந்­நி­லையில் பழைய அறி­மு­கத்­தாலோ என்­னவோ நாமல் ராஜ­பக் ஷ உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் மல்­வ­ல­கே­யுடன் உரை­யா­டி­யுள்­ள­தாக அறிய முடி­கின்­றது.

093
(இடுப்பில் இருந்தது தண்ணீர் போத்­தலே: நாமல் இடுப்பில் இருந்­தது கைத்­துப்­பாக்­கியே: பொலிஸ் ஜனா­தி­பதி பாதுகாப்பு பிரிவு கடமை தவ­றி­யுள்­ளது? மஹிந்­தவின் பாது­காப்பு வீரர் நாம­லுடன் சென்­றது ஏன்? )

நாமல்: இந்த இடத்­திலா டியூட்டி (கடமை)?

மல்­வ­லகே: ஆம்

நாமல்: இவ­ரையும் உள்ளே செல்ல அனு­ம­தி­யுங்கள் என்று கூறி­ய­வாறு நபர் ஒரு­வரை நாமல் ராஜபக்ஷ காட்­டி­யுள்ளார்.

அவர் வேறு யாரு­மல்ல நாமல் ராஜ­பக்­ ஷவுடன் வந்த முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்­ ஷவின் பாது­காப்பு படை­ய­ணியில் கட­மை­யாற்­றிய இரா­ணு­வத்தின் 4 ஆம் ரெஜி­மன்ட்டை சேர்ந்த கொமாண்டோ படை வீர­ரான கோப்ரல் சேனக குமார.

நாமலின் வேண்­டு­கோ­ளுக்கு அமை­வாக கோப்­ரல் சேனக குமா­ரவை அழைத்த உதவி பொலிஸ் அத்தியட்சர் மல்­வ­லகே அவ­ரிடம்”ஆயுதம் ஏதும் உடன் வைத்­துள்­ளீரா? என வின­வினார்.

இதற்கு கோப்ரல் சேன­க­கு­மார இல்லை என பதி­ல­ளிக்­கவே உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் மல்­வ­லகே அவரை உடல் சோத­னை­க­ளுக்கு உட்­ப­டுத்­தாது உள்ளே செல்ல அனு­ம­தித்­துள்ளார்.

இந்­நி­லையில் தான் கூட்டம் ஆரம்­பித்த போது ஜனா­தி­ப­தியின் மெய்ப்­பா­து­காப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் விசேட அதி­ர­டிப்­படை வீரர் ஒருவர் கோப்ரல் சேனக குமா­ரவின் உடலில் பின்பக்கம் இடது புறத்தே காற்­சட்டை பையானது சாதா­ர­ண­மாக இல்­லாமல் புடைத்­தி­ருப்­பது தெரிந்துள்­ளது.

இது தொடர்பில் அந்த பொலிஸ் விசேட அதி­ர­டிப்­படை வீரர் தனக்கு அருகில் இருந்த மற்­றொரு அதிரடிப்­ப­டையின் வீர­ருக்கு விட­யத்தை கூறி கோப்ரல் சேனக குமா­ரவை விசா­ரித்­துள்ளார்.

அந்த கோப்ரல் சேனக குமா­ர­விடம் பொலிஸ் விஷேட அதி­ர­டிப்­ப­டை­யினர் நீர் யார் ? என கேள்வி எழுப்­பி­யுள்­ளனர்.

அதற்கு அந்த கோப்ரல் நான் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நாமல் ராஜபக் ஷவுடன் கூட்­டத்­திற்கு வந்ததாகவும் அவ­ரது பாது­காப்பு தொடர்­பி­லேயே வந்­த­தா­கவும் கூறி­யுள்ளார்.

இதன்­போது கோப்ரல் சேனக குமா­ரவின் வலது புற இடுப்புப் பகு­தியும் சற்று புடைத்­தி­ருப்­பதை அவதானித்­துள்ள குறித்த விஷேட அதி­ர­டிப்­படை வீரர் கோப்ரல் சேனக குமார அணிந்­தி­ருந்த சேர்ட்டை சற்று விலக்கி என்ன என்று பார்த்­துள்ளார்.

இதன்­போதே இடுப்பின் கைத்­துப்­பாக்கி ஒன்று இருப்­பதை அவர் அவ­தா­னித்­துள்ளார். இது தொடர்பில் குற்றப் புல­னாய்வுப் பிரி­வினர் முன்­னெ­டுக்கும் விசா­ர­ணை­களில் அதி­ர­டிப்­படை வீரர்­களால் வாக்கு மூலம் வழங்­கப்­பட்­டுள்­ளது.

இவ்­வாறு அந்த கோப்ரல் தர வீரர் துப்­பாக்­கி­யுடன் கையும் கள­வு­மாக பிடி­படும் போது அவர் கூட்டத்திற்கு   வந்­தி­ருந்த ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை நோக்கி முன்­னே­றி­ய­தா­கவும் அதனா­லேயே பொலிஸ் விஷேட அதி­ர­டிப்­ப­டை­யினர் அவரை விஷே­ட­மாக அவ­தா­னித்­த­தா­கவும் அதன் பல­னா­கவே அவர் சிக்­கி­ய­தா­கவும் கூறப்­ப­டு­கின்­றது.

இந்­நி­லையில் தான் இடுப்பில் கைத்­துப்­பாக்­கி­யுடன் இருந்த கோப்ரல் சானக குமார உட­ன­டி­யாக அங்கிருந்த ஜனா­தி­பதி பாது­காப்புப் பிரிவின் சார்ஜன்ட் தர அதி­கா­ரி­யான நிஸங்­க­விடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இந்­நி­லையில் அந்த கோப்­ரலை எவ்­வித சோத­னை­க­ளுக்கும் உட்­ப­டுத்­தாது அந்த பாது­காப்பு அதி­காரி அவரை உட­ன­டி­யாக நிகழ்வு மண்­ட­பத்­தி­லி­ருந்து வெளி­யேற்­றி­யுள்ளார்.

இதுதான் நடந்த சம்­பவம். இந்­நி­லையில் இந்த சம்­ப­வ­மா­னது ஊட­கங்கள் வாயி­லாக பிர­சித்தம் செய்யப்­ப­டவே ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் பாது­காப்பு குறித்து கேள்­விகள் பல எழுப்பப்பட்­டன.

இந்­நி­லை­யி­லேயே உட­ன­டி­யாக செயற்­பட்ட பொலிஸ் மா அதிபர் என்.கே. இலங்­ககோன் விசாரணைகளை குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரி­விற்கு உடன் கைய­ளித்தார்.

குற்றப் புல­னாய்வுப் பிரி­வுக்கு பொறுப்­பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி சென­வி­ரத்ன அதன் பணிப்பாளர் தக­ஹ­முல்ல ஆகி­யோரின் நேரடி கட்­டுப்­பாட்டில் இது தொடர்­பி­லான விசா­ர­ணைகள் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் சானி அபே­சே­கர தலை­மை­யி­லான சிறப்புக் குழு­விடம் கையளிக்கப்பட்டன.

இந்­நி­லையில் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் சானி அபே­சே­கர தலை­மை­யி­லான பொலிஸ் குழு இந்த விவ­காரம் குறித்து மிக சூட்­சு­ம­மாக விசா­ர­ணை­களை ஆரம்­பித்து வாக்கு மூலங்­களை பதிவு செய்யும் நட­வ­டிக்­கை­களை ஆரம்­பித்­தது.

இந்­நி­லையில் தான் கடந்த ஏப்ரல் மாதம் 27ஆம் திகதி திங்­க­ளன்று கோப்ரல் சேனக குமார நாமல் ராஜபக் ஷவின் சாரதி ஆகியோர் வாக்கு மூலம் ஒன்றை வழங்க குற்றப் புல­னாய்வு பிரி­வுக்கு சுய­மாக வருகை தந்­துள்­ளனர்.

இதன்­போது குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­ன­ருக்கு வாக்கு மூலம் அளித்­துள்ள கோப்ரல் சேனக குமார எனது உத்­தி­யோ­க­பூர்வ கைத்­துப்­பாக்­கியை நான் வாக­னத்­தி­லேயே வைத்து விட்டு தான் சென்றேன்.

வாக­னத்தின் ‘கெப் ஹோலில்’ நான் அதனை வைத்து விட்­டுத்தான் சென்றேன் என குறிப்­பிட்­டுள்ளார். இந்­நி­லையில் கோப்­ர­லுடன் வந்த சார­தியும் துப்­பாக்­கியை கோப்ரல் வாக­னத்­தி­லேயே வைத்துச் சென்றதை உறுதி செய்­துள்ளார்.

இந்­நி­லையில் சம்­பவம் இடம்­பெற்ற போது குறித்த கோப்­ரலை பிடித்து ஜனா­தி­பதி பாது­காப்பு பிரி­வி­ன­ரிடம் ஒப்­ப­டைத்த விஷேட அதி­ர­டிப்­படை வீரர் அருகில் இருந்த ஏனைய வீரர்­க­ளிடம் வாக்கு மூலங்­களை புல­னாய்வுப் பிரி­வினர் பதிவு செய்­தனர்.

இதன்­போது வாக்கு மூல­ம­ளித்த நான்கு பொலிஸ் விஷேட அதி­ர­டிப்­ப­டை­யி­னரும் குறித்த கோப்ரலிடம் கைத்­துப்­பாக்­கி­யொன்று இருந்­த­தாக வாக்கு மூல­ம­ளித்­துள்­ளனர்.

இந்­நி­லையில் கோப்ரல் தனது துப்­பாக்­கியை வாக­னத்தில் வைத்து விட்டுச் சென்­றி­ருந்தால் அவ­ரது இடுப்பில் இருந்த துப்­பாக்கி யாரு­டை­யது என்ற கேள்வி எழுப்­பப்­பட்­டது.

இந்­நி­லையில் தான் கோப்ரல் சேனக குமா­ரவை கடந்த மே மாதம் 2 ஆம் திகதி அநா­வ­சி­ய­மாக ஆயுதம் ஒன்றை வைத்­தி­ருந்தார் என்ற குற்­றச்­சாட்டின் பேரில் கைது செய்த குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரி­வினர் அன்­றைய தினம் இர­வோ­டி­ர­வாக அவரை அங்­கு­ணு­பொ­ல­பெ­லஸ்ஸ நீதிவான் நயன்த சமர­துங்க முன்­னி­லையில் ஆஜர்ப்­ப­டுத்தி கடந்த 11ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைத்­தனர்.

அதன் பின்னர் விசா­ர­ணைகள் நிறைவு பெறா­ததை காரணம் காட்­டியும் கோப்­ரலின் இடுப்­பி­லி­ருந்த துப்பாக்கி இன்னும் கண்­டு­பி­டிக்­கப்­ப­ட­வில்லை என்­பதை காரணம் காட்­டியும் அவரை மீண்டும் இம்மாதம் 19ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்க அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லையில் இச்­சம்­பவம் குறித்து பல்­வேறு சந்­தே­கங்கள் எழுப்­பப்­பட்­டுள்­ள­துடன் சில முக்­கி­ய­மான அடிப்­ப­டை­களைக் கொண்டு புல­னாய்வு பிரி­வி­னரின் விசா­ர­ணைகள் இடம்­பெ­று­கின்­றன.

முக்­கி­ய­மாக குறித்த கோப்ரல் வீரர் உள் நுழைந்­ததன் நோக்கம் என்ன? அவ்­வாறு உள் நுழைந்­தவர் ஜனா­தி­ப­தியை நெருங்க முற்­பட்­டதன் மர்மம் என்ன?

வாக­னத்தில் துப்­பாக்­கியை வைத்­து­விட்டு வந்திருந்தால் இடுப்பில் இருந்த துப்­பாக்கி சட்ட விரோத செயல் ஒன்­றினை அல்­லது சதி­யொன்­றினை நிறை­வேற்ற திட்­ட­மிட்டு கொண்டு வரப்­பட்­டதா?

ஜனாதி­பதி பாது­காப்புப் பிரிவு இந்த விவ­கா­ரத்தில் கடமை தவ­றி­யுள்­ளதா? போன்ற பல விட­யங்கள் உதவி பொலிஸ் அத்­தி­யட்­சகர் சாணி அபே­சே­கர தலை­மை­யி­லான விசா­ரணைக் குழு­வி­னரின் அவதானத்­துக்கு உட்­பட்­டுள்­ள­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் உதவி பொலிஸ் அத்­தி­யட்­சகர் ருவன் குண­சே­கர தெரி­விக்­கின்றார்.

அத்­துடன் குறித்த தினம் அவ்­வி­டத்தில் கட­மையில் ஈடு­பட்­டி­ருந்த ஜனா­தி­பதி பாது­காப்பு பிரிவின் உதவி பொலிஸ் அத்­தி­யட்­சகர் மல்­வ­ல­கே­யிற்கும் இட­மாற்றம் வழங்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் இந்த விவகாரம் குறித்து 15 இற்கும் அதி­க­மான வாக்கு மூலங்­களை புல­னாய்வுப் பிரி­வினர் பதிவு செய்துள்ள­தா­கவும் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர தெரி­வித்தார்.

இந்­நி­லையில் இந்தச் சம்­பவம் குறித்து பல்­வேறு சந்­தே­கங்கள் தற்­போது வரை எழுப்­பப்­பட்டுக் கொண்டி­ருக்­கின்­றன.

குறித்த கோப்ரல் சட்ட விரோ­த­மாக எத­னையும் செய்­ய­வில்­லை­யெனில் அவரை வெளி­யேற்­றும்­போது தமது பிரபு (நாமல்) உள்­ளி­ருக்க அவரை விட்டு விட்டு எப்­படி வெளி­யேறி இருக்க முடியும்.

அத்­துடன் இந்த சம்­ப­வத்தின் போது ஜனா­தி­ப­திக்கு எதி­ராக ஏதேனும் சதி முயற்­சிகள் பின்­னப்­பட்டு அதன் பொருட்டு அக்­கோப்­ரலின் உத்­தி­யோ­க­பூர்வ துப்­பாக்­கிக்கு பதி­லாக வேறு ஒரு சட்ட விரோத துப்பாக்கி கூட பயன்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கலாம்.

எனினும் இச்­சந்­தே­கங்­க­ளுக்கு பதில் சொல்ல புல­னாய்வு பிரி­வினர் அத்­துப்­பாக்­கியை கண்­டு­பி­டிக்க வேண்டும்.

இத­னி­டையே மேடை­க­ளிலும் ஊட­கங்கள் முன்னும் பேசி­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நாமல் ராஜபக் ஷ கோப்­ர­லிடம் இருந்­தது தண்ணீர் போத்­தலே எனவும் துப்­பாக்கி இருக்­க­வில்லை எனவும் அத­னா­லேயே ஜனா­தி­பதி பாது­காப்பு பிரி­வினர் அவரை கைது செய்­தி­ருக்­க­வில்லை எனவும் கூறி வருகிறார்.

அதி­ர­டிப்­ப­டை­யி­ன­ரி­ட­மி­ருந்து அந்த கோப்ரல் சேனக குமா­ரவை பொறுப்­பேற்ற ஜனா­தி­பதி பாது­காப்புப் பிரிவின் சார்­ஜனும் அவ­ரிடம் துப்­பாக்கி எதுவும் இருக்­கா­த­தா­லேயே அவரை விடு­வித்­த­தாக புலனாய்வு பிரி­வி­ன­ருக்கு தெரி­வித்­துள்ள நிலையில் நேரில் கண்ட சாட்­சி­யங்கள் ஊடாக அவரின் இடுப்பில் கைத் துப்­பாக்­கி­யொன்று இருந்­தமை உறுதி செய்­யப்­பட்­ட­தா­கவும்

அத­னா­லேயே கோப்ரல் சேனக குமா­ரவை கைது செய்­த­தா­கவும் நாமலின் தண்ணீர் போத்தல் கதைகள் சாட்­சி­யங்­க­ளுக்கு அப்பால் பட்­டவை எனவும் பொலிஸ் பேச்­சாளர் ருவன் குண­சே­கர சுட்டிக் காட்டுகின்றார்.

இந்­நி­லையில் இது தொடர்­பாக விசேட அறிக்கை ஒன்­றினை வெளி­யிட்­டி­ருந்த முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ அதில் இப்­படி குறிப்­பி­டு­கிறார்.

கோப்ரல் குமார எனது பாது­காப்பு வீரர். எனது கோரிக்கையின் பிர­கா­ரமே அவர் எனது மகன் நாம­லுடன் அன்று கூட்­டத்­துக்கு சென்றார்.

அவர்­க­ளுக்கு பிர­புக்கள் வாயி­லி­னூ­டாக உள் நுழைய அனு­மதி மறுக்கப்­ப­டவே அவர்கள் சாதா­ரண வாயில் ஊடாக உள் நுழைந்­துள்­ளனர். கோப்ரல் குமார வாயி­லி­லேயே நின்­றுள்ளார்.

சிறிது நேரத்தில் விசேட அதி­ர­டிப்­படை வீரர் குமா­ரவை யார் என கேட்­டுள்ளார். அதற்கு தான் இரா­ணுவ வீரர் எனவும் நாம­லுடன் பாது­காப்­புக்கு வந்­தவர் எனவும் பதி­ல­ளித்­துள்ளார்.

அவ்விடத்தில் இருக்க வேண்டாம் என குமாரவுக்கு அறிவுறுத்தல் வழங்கப்படவே அவர் வாகனத்தில் வந்து இருந்துள்ளார்.

கூட்டத்தின் பின்னர் அனைவரும் வீட்டுக்கு வந்தனர். ஊடகங்கள் ஊடாக வே கோப்ரல் குமார ஆயுதம் கொண்டு போன கதையை தான் அறிந்தேன். என அந்த அறிக்கை ஊடாக மஹிந்த ராஜபக் ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில் இவ் விவகாரமானது பாரதூரமானது ஜனாதிபதியின் கூட்டம் ஒன்றின் பாதுகாப்பு தொடர்பிலான முழு பொறுப்பும் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவையே சாரும் நிலையில் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எஸ்.எம்.விக்ரம சிங்கவும் இதற்கு பொறுப்புக் கூற வேண்டும்.

அங்குணுகொல பெலஸ்ஸ கூட்டத்தில் நடந்த இந்த சம்பவத்தை ஜனாதிபதியின் பாதுகாப்பில் உள்ள பாரிய குறைபாடாகவே நோக்க வேண்டியுள்ளது.

நாட்டின் இரு தலைவர்கள் ஏற்கனவே கொலை செய்யப்பட்டுள்ளார்கள். (பண்டாரநாயக்க, பிரேமதாஸ) என்ற மோசமான வரலாறு கொண்ட நாம் நாட்டின் முதன்மை பிரஜையான ஜனாதிபதியின் பாதுகாப்பில் இதனைவிட விழிப்பாக இருக்க வேண்டும்.

இந்நிலையில் குற்றப்புலனாய்வு பிரிவு முன்னெடுக்கும் விசாரணைகளில் எதிர்காலத்தில் அதிர்ச்சித் தகவல்கள் வெளியானாலும் அது ஆச்சரியப்படுவதற்கில்லை.

Share.
Leave A Reply

Exit mobile version