இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கின் பகுதிகளில் மிகவும் உணர்வுபூர்வமாக முள்ளிவாய்க்கால் இனஅழிப்பு நினைவு கூரல் நிகழ்வுகள் இன்று நடைபெற்ற அதேவேளை, புலம்பெயர் நாடுகளிலும் தமிழ் மக்கள் பல நிகழ்வுகளை நடத்தி உயிரிழந்த தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.

முள்ளிவாய்கால் இனப்படுகொலையின் இன்றைய 6 ஆம் ஆண்டு நினைவு நாளை பிரித்தானிய தமிழ்மக்கள் லண்டன் நகரில் மாபெரும் பேரணி ஒன்றையும் பொதுக்கூட்டம் ஒன்றையும் நடத்தி நினைவு கூர்ந்தனர். இந்த நிகழ்வுகளில் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கலந்து கொண்டனர்.

தாயகத்தில் தொடர்ந்தும் தமிழ் மக்களுக்கு எதிரான இன அழிப்பு நடைபெற்று வரும் நிலையிலும் ஐ. நா. மனித உரிமைகள் சபை தனது விசாரணை அறிக்கையை பிற்போட்டுள்ள நிலையிலும் ஆயிரக்கணக்கில் தமிழ் மக்கள் இந்த பேரணியில் கலந்துகொண்டு விடுதலைக்கான தமது போராட்டமும் நீதிக்கான தமது போரரட்டமும் ஓய்ந்து விடவில்லை என்பதை என்பதை சர்வதேச சமூகத்துக்கு காட்டும் வகையில் பல்வேறு பாதாகைகளையும் சுலோக அட்டைகளையும் பேரணியில் ஏந்தி வந்ததுடன் கோசங்களையும் எழுப்பினர்.

லண்டன் எம்பாங்க்மெண்டில் உள்ள வைட்கோல் எனும் இடத்தில் பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமான பேரணி மாலை 5 மணியளவில் வெஸ்ட்மினிஸ்ரரில் உள்ள பிரித்தானிய பிரதமரின் வாசஸ்தலம் முன்பாக முடிவடைந்தது. பின்னர் அங்கு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த பொதுக்கூட்டத்தில் பல பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டதுடன் மனித உரிமை செயற்ப்பாட்டாளர்களும் கலந்து கொண்டு உரையாற்றினர். அண்மையில் நடைபெற்ற பிரித்தானிய தேர்தலில் தெரிவுசெய்யப்பட்ட புதிய பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்த நிகழ்வில் உரைநிகழ்த்தினர்.

இதேவளை, இறுதி யுத்தத்தில் இலங்கை இராணுவத்திடம் சரணடைந்து காணாமல் போனவர்கள் இன்னமும் உயிருடன் இருக்கிறார்களா என்பதை இலங்கை அரசாங்கம் தெரியப்படுத்த வலியுறுத்தும் Are They Alive ? என்ற பிரசார செயற்திட்டமும் இந்த கூட்டத்தில் மீள ஆரம்பித்து வைக்கப்பட்டது.

Share.
Leave A Reply

Exit mobile version