ஆக்ராவை சேர்ந்த 8 வயது சிறுமி தையாபா ஒரு பிறவி இதய நோயாளி. பிறக்கும்போதே அவரது இருதய வால்வு குறைபாட்டுடன் இருந்ததோடு, தமனியும் இடம் மாறி இருந்தது. இதனால் அடிக்கடி இருமல் மற்றும் ஜலதோஷத்தினால் தையாபா அவதிப்பட்டு வந்தார்.
தையாபாவின் தந்தை ஒரு ஷூ தயாரிக்கும் கம்பெனியில் தினக்கூலி வேலை. பெரிய அளவுக்கு வருமானம் இல்லை. வாங்குகிற சம்பளம் குடும்பத்தை கவனிக்கவே போதாது.
இந்த நிலையில் தையாபாவுக்கு சிகிச்சைக்காக இயன்ற அளவுக்கு அவரது பெற்றோர் முயற்சித்தபோதிலும், 15 முதல் 20 லட்சம் ரூபாய் வரை ஆகலாம் என அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அவ்வளவு பணத்திற்கு எங்கே போவது என தவித்த தையாபாவின் பெற்றோர், சில தொண்டு நிறுவனங்கள் மற்றும் சில பெரிய மனிதர்களை அணுகி உதவி கேட்டு பார்த்தனர். ஆனாலும் எந்த உதவியும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் தையாபாவுக்கு 8 வயதாகி விட்ட நிலையில், தன்னால் பெற்றோர் மிகுந்த அவதிப்படுவதை எண்ணி மனம் வருந்தினார்.
சமயங்களில் அவளது தந்தையும் தையாபாவிடம் கோபத்தைக்காட்டி விடுவார். இப்படி துன்பமும், துயரமுமாக நாட்கள் கடந்துகொண்டிருந்த நிலையில்தான், சில நாட்களுக்கு முன்னர் தையாபா தொலைக்காட்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்றை பார்த்துக்கொண்டிருந்தாள். அப்போது அவள் மனதில் மின்னலென ஒரு எண்ணம் தோன்றியது.
பிரதமர் இந்த நாட்டு மக்களுக்காகத்தானே சேவையாற்றுவதாக கூறுகிறார். நாமும் இந்த நாட்டின் பிரஜைதானே…? நாம் ஏன் பிரதமரிடம் உதவி கேட்கக் கூடாது? என எண்ணினாள்.
உடனே தாமதிக்காமல் தனது நிலையையும், தனது குடும்பத்தின் நிலையையும் விளக்கி பிரதமருக்கு கடிதம் எழுதினாள். பின்னர் அதை மறந்தும் போனாள்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிரதமர் அலுவலகத்தில் இருந்து வந்த கடிதம் ஒன்றை பார்த்த தையாபா குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.
உள்ளே படித்தபோது அதில், தையாபாவின் உடல் நிலை குறித்த விவரங்களை அனுப்புமாறு கேட்கப்பட்டிருந்தது.
அத்துடன் பிரதமர் அலுவலகத்திலிருந்து டெல்லி அரசுக்கும் ஒரு உத்தரவு போனது. அதில் செலவைபற்றி கவலைப்படாமல் சிறுமி தையாபாவுக்கு தேவையான சிகிச்சை அளிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கூறப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து தையாபாவுக்கு தேவையான சிகிச்சைகளை மேற்கொள்ளுமாறு குரு தேக் பகதூர் மருத்துவமனைக்கு டெல்லி அரசு உத்தரவிட்டது.
தையாபாவுக்கு அளிக்கப்பட வேண்டிய சிகிச்சைக்கான வசதி ஆக்ரா பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் இல்லாததால், தையாபா குடும்பத்தினரை டெல்லிக்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டது.
அதன்படி அவர்களும் தற்போது டெல்லி வந்துள்ளனர். தையாபாவுக்கும் சிகிச்சை தொடங்கி உள்ளது.
தையாபாவுக்கு சிகிச்சைக்குப் பின்னர் எந்த தொந்தரவும் இருக்காது என்றும், பூரண குணமடைந்துவிடுவாள் என்றும் அவளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர் தெரிவித்துள்ளார்.
சிறுமி தையாபாவின் கடிதத்திற்கு மதிப்பளித்தும், அவள் மீது இரக்கம் கொண்டும் பிரதமர் மோடி உரிய நடவடிக்கை எடுத்ததற்காக அவளது பெற்றோர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துக்கொண்டுள்ளனர்.