தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புதிய அரசுடன் எழுதப்படாத உடன்படிக்கை ஒன்றைச் செய்துள்ளது. ஆனால் அதனை வெளிப்படுத்த முடியாத நிலையில் உள்ளோம்.
பொதுத் தேர்தலுக்கு முன் அந்த உடன்படிக்கை என்ன என்பதை பகிரங்கப்படுத்துவோம் என தமிழ்க் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் யுரோவில் மாநாட்டு மண்டபத்தில் ”தமிழ் மக்களின் தீர்வுக்கான பாதை’ என்ற தொனிப்பொருளில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற பகிரங்கக் கலந்துரையாடலில் கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
இக்கலந்துரையாடலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. எம்.ஏ. சுமந்திரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணித் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், வடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் தவராசா உட்பட யாழ்ப்பாண சிவில் சமூகத்தினர், சமூக, சமயத் தலைவர்கள், வர்த்தக சமூகத்தினர், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பங்கேற்றனர்.
இங்கு சுமந்திரன் மேலும் கூறுகையில்; ஐ.தே.க., சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆகிய இரு கட்சிகளில் எதுவும் தமிழ் மக்கள் நம்பும் வகையில் இல்லை. இரண்டும் எம்மை குழிதோண்டி புதைக்கும் அபாயம் உள்ளது. ஆனாலும் தீர்வுக்காக அவர்களுடன் நாம் பேசித்தான் ஆகவேண்டியுள்ளது.
நாங்கள் கடந்த அறுபது வருடங்களுக்கும் மேலாக சிக்கிக்கொண்டுள்ள பிரச்சினைகளில் இருந்து வெளிவருவது, விடுபடுவது எவ்வாறு என்பதனை ஆராய வேண்டும்.
மாறாக கடந்து வந்த பாதைகளை விமர்சித்து எமது சரித்திரத்தில் பிழை கண்டு பிடித்து காலத்தை வீணாகக் கழித்துக்கொண்டிருப்பது முறையற்றது.
2009 ஆம் ஆண்டு ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் எமது அரசியல் போராட்டத்தை எவ்வாறு முன்னெடுப்பது என்பது கேள்விக்குறியாகவே இருந்தது.
ஏனைய நாடுகளில் ஆயுதப் போராட்டம் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் போது இராஜதந்திர ரீதியிலான அரசியல் போராட்டமும் ஆயுதப் போராட்டத்துடன் சம நிலையாக முன்னெடுக்கப்பட்டு வந்தது.
ஆனால் ஆயுத ரீதியிலான எமது விடுதலைப் போராட்டத்தில் அவ்வாறான நிலை இல்லை. அரசியல் கட்சிகள் இருந்தாலும் குறிப்பிட்டு சொல்லக்கூடிய பணியை முன்னெடுக்க முடியாத நிலை காணப்பட்டுள்ளது.
ஆயுத ரீதியிலான எமது போராட்டத்தை சிங்களத் தலைவர்கள் முறியடித்தமை வெறுமனே ஆயுதப் போராட்டத்தை தோற்கடிக்க வேண்டுமென்ற நோக்கத்திற்காக மட்டுமல்ல, மாறாக தமிழ் மக்கள் இனி மேல் தமது உரிமைகளை எக்காலமும் கேட்டுவிடக்கூடாது என்பதே அவர்களின் ஒரே நோக்கமாக இருந்தது.
இதில் விடுதலைப்புலிகள் மட்டும் தோற்கடிக்கப்படவில்லை. தமிழ் மக்களின் உரிமைகள் அனைத்துமே தோற்கடிக்கப்பட்டுள்ளன.
வென்றோர் வெற்றியை தாம் நினைத்தபடி கொண்டாடினர். போரின் பின்னர் மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் முட்கம்பிகளுக்குள் அடைக்கப்பட்டும் படிப்படியாக தமிழ் மக்களின் நிலங்களை அபகரித்தும் வைத்துள்ளனர்.
ஆனாலும் எமது மக்கள் அரசியல் ரீதியாக தொடர்ந்தும் போராடி வந்தனர்.
போரில் வெற்றி பெற்ற முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற தேர்தல்கள் அனைத்திலுமே எம்மை ஆள்வதற்கு உங்களுக்கு சந்தர்ப்பம் வழங்க மாட்டோம் எனக் கூறும் விதத்தில் அவரை எமது மக்கள் தொடர்ச்சியாக நிராகரித்து வந்தனர்.
இதன் மூலம் தமிழ் மக்களை ஆள்வதற்கு ராஜபக்ஷ ஏற்றவர் அல்ல என்பதனையும் சர்வதேசம் ஏற்றுக்கொண்டது.
இறுதியில் தனது மக்களையும் அடித்தார். இந்த நிலையிலேயே ராஜபக்ஷவை கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தோற்கடிக்க முடிந்தது.
நாம் சந்தர்ப்பங்களை நழுவவிட முடியாது. ஏதாவது கதவு திறந்திருந்தால் அதனை நாம் பயன்படுத்தி கொள்ள வேண்டும். புதிய அரசின் காலத்தில் அந்தக் கதவு திறந்துள்ளது. அதனை நாம் பயன்படுத்த முயல்கின்றோம்.
ராஜபக்ஷவின் ஆட்சி தொடருமாக இருந்தால் இங்கு தமிழ் மக்கள் இருந்திருக்க முடியுமா? அரசியல் விடுதலை கிடைக்குமா? இங்கே உள்ள இராணுவம் எமது மக்களின் காணிகளை தொடர்ந்தும் அபகரித்து நாம் கூறிவரும் தமிழ்த் தேசத்தை இல்லாமல் செய்திருப்பார்கள். இந்த நிலையை அவசரமாக மாற்ற வேண்டிய நிலை காணப்பட்டிருந்தது.
இதற்காக எமக்கு அவசர எதிரி மாற்றம் ஒன்றும் தேவைப்பட்டது. இதனையே நாமும் மேற்கொண்டிருந்தோம். எமது மக்களும் வடமாகாண சபை தேர்தலில் வாக்களித்ததைவிட ஜனாதிபதித் தேர்தலில் அதிகமாகவே வாக்களித்திருந்தனர்.
வீடு பற்றி எரிந்து கொண்டிருக்கும் போது தப்பி ஓடும் அவசர வேலை ஒன்றினையே கடந்த ஜனாதிபதித் தேர்தலில் நாம் மேற்கொண்டிருந்தோம். இத்தப்பித்தலின் பின்னர் எமக்கு தீர்வைப் பெற படகொன்று கடந்த ஜனவரி மாதம் எட்டாம் திகதி கிடைத்தது.
அந்தப் படகில் ஏறியுள்ளோம். அந்தப் படகு மறு கரைக்கு போய்ச்சேர வேண்டுமாகவிருந்தால் கூத்தாடி, கும்மியடித்து துள்ளிக் குதித்துப் படகைக் கவிழ்த்துவிடக்கூடாது.
அதற்காக விமர்சிக்க வேண்டாம் எனக் கூறவில்லை. தவறுகள் விடப்படும்போது சுட்டிக்காட்டப்படல் வேண்டும். இதனையே புதிய அரசின் காலத்திலும் நாம் மேற்கொண்டு வருகின்றோம்.
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு இல்லை. ஆனாலும் இழந்தவற்றில் சிலவற்றை பெறமுடியும் என்ற ஒரே நோக்கத்திலேயே நாம் செயற்படுகின்றோம்.
தமிழ் மக்களின் காணிகளில் சிலவற்றை மீள பெற்றுள்ளதோடு அரசியல் கைதிகளின் விடுதலையும் சாத்தியமாகவுள்ளது.மேலும் ஆயிரம் ஏக்கர் பொதுத் தேர்தலின் பின்னர் விடுவிக்கப்படலாம்.
அரசியல் தீர்வினைப் பொறுத்தவரையில் எந்த நிலைப்பாட்டில் நாம் உள்ளோமோ அந்த அரசியல் தீர்வினைத் தருவதாக அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஒற்றையாட்சி முறையை அகற்ற முடியாது எனக் குறிப்பிட்டிருந்தனர்.
ஆனால் நாம் எதிர்த்த பின்னர் அதனை நீக்கிவிட்டனர். மேலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டின் சுதந்திர தினத்தில் ஆற்றிய உரையும் எமக்கு ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
எனினும் புதிய அரசை முழுமையாக நாம் நம்புமாறு கூறவில்லை. ஐ.தே.க மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆகியன எம்மை குழிதோண்டி புதைக்கும் அபாயமும் உள்ளது.
ஆனாலும் அவ்வாறு செய்யமுடியாத நிலை உள்ளது. சர்வதேசம் முன்பு போல் இல்லாமல் அவதானிப்புடன் உள்ளது.
இத்தனை காலமும் காத்திருந்து எமது மக்களின் அபிலாசைகளைப் பெறக்கூடியதற்கான கதவு ஒன்று திறந்துள்ளது. அதனை நாம் பயன்படுத்த வேண்டும். சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்த வேண்டும்.
எமது இனப்பிரச்சினைத் தீர்வில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கொள்கையிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கையிலும் வித்தியாசம் இல்லை.
அணுகுமுறையில்தான் வித்தியாசம் உள்ளது. உணர்வுகளை வைத்துக்கொண்டு நிரந்தரத் தீர்வைப் பெற வேண்டும் என்றார்.
எஸ்.நிதர்ஷன்