புங்குடுதீவு பிரதேசத்தின் உயர்தர வகுப்பு மாணவி வித்தியா, பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து பிரதேச மக்களால் நேற்று முன்தினம் யாழ்ப்பாணம் நீதிமன்றத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் நேற்று நீதிமன்ற வளாகத்தினுள் இருந்து மனித கைவிரலொன்று மீட்கப்பட்டுள்ளது.
குறித்த கைவிரலானது பொலிஸாரால் நீதிமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு வேலியில் இருந்தே மீட்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது ஆர்ப்பாட்டக்காரர்கள் நீதிமன்றத்துக்கு கல் எறிந்து பாதுகாப்பு வேலிகளை தூக்கியும் எறிந்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் இப்பகுதியில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டதோடு 129 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நேற்று நீதிமன்ற வளாகத்தை சுத்தப்படுத்தும் போது பாதுகாப்பு வேலி ஒன்றில் இருந்த மனித கைவிரல் ஒன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த கைவிரலானது ஆர்ப்பாட்டக்காரர்களால் பாதுகாப்பு வேலியை தூக்கி எறியும் போது அவர்களில் ஒருவரினது கைவிரல் குறித்த பாதுகாப்பு வேலியில் சிக்குண்டு அறுந்திருக்கலாம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
புங்குடுதீவு மாணவி கொலைச்சம்பவத்தையடுத்து தீவகம் மற்றும் யாழ்.மாவட்டத்தில் இடம்பெற்ற பதற்றச் சம்பவங்களைக் கட்டுப்படுத்தத் தவறியமை மற்றும் நீதிமன்றக் கட்டடத்தின் மீதான தாக்குதல் சம்பவம் என்பவற்றைத் தடுக்கத்தவறியமையால் யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்த 05 பொலிஸ் அதிகாரிகளுக்கு திடீர் இடமாற்றம், பொலிஸ்மா அதிபர் கே.என்.இலங்கக்கோனால் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாழ்ப்பாண பொலிஸ் பிராந்தியம் 1க்குப் பொறுப்பான உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஜி.ஜே.ஏ.விஜயசேகர கிளிநொச்சிக்கும், யாழ்ப்பாண பொலிஸ் பிராந்தியம் 2க்குப் (ஊர்காவற்றுறை) பொறுப்பான உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பி.ஏ.கே.ஏ.சேனாரத்ன முல்லைத்தீவுக்கும், ஊர்காவற்றுறை தலைமைப்பீட பொலிஸ் பொறுப்பதிகாரி கியு.ஆர்.பெரேரா மன்னாருக்கும், யாழ்ப்பாணப் பொலிஸ் பிராந்தியத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லக்ஸ்மன் வீரசேகர சீதா எலியத்துக்கும், யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.ஆர்.பி.என்.பாலசூரிய வவுனியாவுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணப் பொலிஸ் பிராந்தியத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக புதிதாக டப்ளியூ.கே.ஜயலத் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏனைய இடமாற்றப்பட்டவர்களின் இடத்துக்கு கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களில் கடமையாற்றியவர்கள் வருகை தரவுள்ளனர்.