இலுப்பூர்: கள்ளக்காதல் தகராறில் 80 வயது முதியவரை வெட்டிய 70 வயது பெரிசு, கள்ளக்காதலியுடன் கைது செய்யப்பட்டார். திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த அமையபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் மூக்கன் (80), வெள்ளையன்(70). இருவரும் உறவினர்கள்.

இதே பகுதியை சேர்ந்தவர் மீனாட்சி(50). கணவரை இழந்து தனியாக வசித்து வருகிறார்.

வெள்ளையனுக்கும், மீனாட்சிக்கும் கடந்த சில வருடங்களாக கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. இதற்கிடையே சில மாதங்களுக்கு முன் மூக்கனுக்கும் மீனாட்சிக்கும் கள்ளத் தொடர்பு எற்பட்டுள்ளது.

இருவரும் வெள்ளையனுக்கு தெரியாமல் உல்லாசமாக இருந்துள்ளனர். இதையறிந்த வெள்ளையன், மீனாட்சியையும், மூக்கனையும் கண்டித்துள்ளார். இருந்தும் அவர்களுக்கிடையே தொடர்பு நீடித்து வந்தது.

கடந்த சில நாட்களுக்கு முன் மணப்பாறை சந்தைக்கு மீனாட்சியை அழைத்து வந்த மூக்கன் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டு சென்றுள்ளார்.

இதைப்பார்த்த வெள்ளையன் மீனாட்சியை மீண்டும் கண்டித்துள்ளார். மேலும் மீனாட்சியிடம் வெள்ளையன் நைசாக பேசி ஒரு நல்ல முடிவு எடுக்க வேண்டும் என்று கூறி மீனாட்சியின் மனதை மாற்றினார்.

அதன்படி புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே இடையப்பட்டியில் உள்ள குறி சொல்லும் இடத்திற்கு மூக்கனை அழைத்து வரும்படியும், அங்கு செல்லும் வழியில் மூக்கனை தீர்த்துக் கட்டிவிடலாம் என்றும்  வெள்ளையன் யோசனை கூறியுள்ளார்.

அதன்படி மூக்கனை அழைத்துக் கொண்டு மீனாட்சி விராலிமலை புறப்பட்டார். செல்லும் வழியில் விராலிமலையை அடுத்த கொடும்பாளூரில் அவர்கள் இறங்கினர். அப்போது மூக்கனை மீனாட்சி மது வாங்கி வரும்படி கூறியுள்ளார்.

அதன்படி மூக்கன் மது வாங்கி வந்தவுடன், அவரை இடையப்பட்டி செல்லும் பாதையில் மீனாட்சி அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த வெள்ளையன் மூக்கனை அரிவாளால் வெட்டினார்.

இதில் மூக்கன் படுகாயமடைந்து சாய்ந்ததைக்கண்டு இறந்துவிட்டார் என்று நினைத்து இருவரும் தப்பியோட முயன்றனர்.

அப்போது அவ்வழியாக வந்தவர்கள் மூக்கன் வெட்டுப்பட்டு கிடப்பதை பார்த்து, இருவரையும் பிடித்து வைத்துக் கொண்டு விராலிமலை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் அங்கு சென்று விசாரித்தபோது, மேற்கண்ட விவரங்கள் தெரியவந்தது.

இது குறித்து விராலிமலை போலீசார் வழக்குப் பதிந்து முதியவர் வெள்ளையன், மீனாட்சி இருவரையும் கைது செய்தனர்.

படுகாயமடைந்த மூக்கனுக்கு மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.

 

Share.
Leave A Reply

Exit mobile version