மட்டக்களப்பு மாவட்டத்தின், ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாசிகசாலை வீதி, கொம்மாதுரை, செங்கலடி எனும் பிரதேசத்தை சேர்ந்த உதயகுமார் விதுஷினி என்ற 38 நாள் பெண் குழந்தை நேற்று காலை தனது தாயிடம் தாய்ப்பால் குடித்துக் கொண்டிருக்கும் போது பால் புரைக்கேறியதால் உயிரிழந்துள்ளது.
இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது,
இக்குழந்தை தனது தாயிடம் தாய்ப்பால் குடித்துக் கொண்டிருக்கும்போது பால் புரைக்கேறியதால் மயக்கமடைந்த குழந்தையை அருகிலுள்ள செங்கலடி வைதியசாலைக்கு கொண்டுசென்றபோது குழந்தை மரணமடைந்துள்ளது.
இக் குடும்பத்தில் ஏற்கனவே 8 வயதிலும், 4 வயதிலும் இரு ஆண் பிள்ளைகள் உள்ள நிலையில் மூன்றாவதாக இப் பெண் குழந்தை கடந்த 15-04-2015 யில் செங்கலடி வைத்தியசாலையில் சுகப் பிரசவமாக பிறந்துள்ளது.
ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதியின் உத்தரவுக்கு அமைய ஏறாவூர் பொலிசாருடன் சம்பவ இடத்துக்கு சென்ற பிரதேச மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நஸீர் மரண விசாரணையை மேற்கொண்டார்.
பிரேதப்பரிசோதனையின் பின்னர் ‘தாய்ப்பால் குடிக்கும் போது குழந்தைக்கு புரைக்கேறியதால் சுவாசம் தடைப்பட்டு இதயம் செயலிழந்து மரணம் சம்பவித்துள்ளது என்ற தீர்ப்புடன் குழந்தையின் பிரேதத்தை பெற்றோரிடம் ஒப்படைக்க ஏறாவூர் பொலிசாரை மரண விசாரணை அதிகாரி பணித்தார்.
இது தொடர்பான விசாரணையை ஏறாவூர் பொலிசார் மேற் கொண்டு வருகின்றனர்.
விபத்தில் இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலி
அம்பாறை, பொத்துவில் ஊரணி காட்டுப் பகுதியில் இடம்பெற்ற பஸ், மோட்டார் சைக்கிள் விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த இரண்டு இளைஞர்கள் ஸ்தலத்திலே பலியான பரிதாபகரமான சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த இளைஞர்கள் பொத்துவில் பகுதியிலிருந்து கோமாரி நோக்கிச் சென்ற போது அக்கரைப்பற்றிலிருந்து பொத்துவில் நோக்கி வந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் வண்டியுடன் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த பஸ் வண்டியின் சாரதி பொத்துவில் பொலிஸாரிடம் சரணடைந்துள்ளதுடன், உயிரிழந்த இளைஞர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொத்துவில் பொலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.